ஹாலிவுட் படங்கள் சொல்லும் இணை பிரபஞ்சம்... அறிவியலில் சாத்தியமா? #ParallelUniverses

நீங்கள் யார் என்ற கேள்வியை யாரிடமேனும் கேட்டால், “நான் வாத்தியார்!” “நான் போலீஸ்!” “நான் இன்ஜினீயர்!” என்று தொழிலை வைத்துதான் பெரும்பாலும் அதற்குப் பதில் வரும். ஆனால், பலருக்கு அவர்கள் செய்யும் வேலைகள் பிடிப்பதில்லை. “நான் எங்க எப்படி இருக்க வேண்டியவன்?” என்று கனா காணும் கவுண்டமணி போல “விட்டிருந்தா, நான் ஒரு பாடகன் ஆயிருப்பேன், நான் ஒரு கிரிக்கெட் பிளேயர் ஆயிருப்பேன்” என்றெல்லாம் புலம்பல்கள் எப்போதும் நம்மிடம் இருக்கும். இந்தப் பூமியில் நீங்கள் ஒரு கிரிக்கெட் பிளேயர் ஆக முடியாத ஐ.டி. ஊழியர். ஒரு சினிமா இயக்குநர் ஆக முடியாத இன்ஜினீயர். இது நிதர்சனம் என்று எடுத்துக்கொண்டு, சற்றே நம் பிரபஞ்சம் தாண்டி யோசிப்போம். இணை பிரபஞ்சங்கள் குறித்துத் தெரிந்துகொள்வோம்.

இணை பிரபஞ்சங்கள்

நம் பிரபஞ்சம் போலவே வேறு ஒரு பிரபஞ்சத்தில், நம் பூமியைப் போலவே வேறு ஒரு பூமியில், உங்களைப் போலவே இருக்கும் ஒருவன் வாழ்கிறான். ஆனால், அவன் உங்களைப் போல ஒரு ஐ.டி. ஊழியனல்ல, அவன் நீங்கள் ஆக நினைத்த கிரிக்கெட் பிளேயர். அவன் உங்களைப் போல ஒரு இன்ஜினீயர் அல்ல, நீங்கள் ஆக நினைத்த சினிமா இயக்குநர். இவ்வளவு ஏன், நம் பூமியில் 7-ம் வகுப்பில் கணக்கு வாத்தியாரிடம் அடி வாங்கிய முத்து, அந்தப் பூமியில் ஒரு கணக்கு வாத்தியார். முத்துவின் கணக்கு வாத்தியார் அங்கே மாணவர். அவர் முத்துவிடம் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறார். இதேபோல், ஒரு பிரபஞ்சம் அல்ல, பல ஆயிரம் பிரபஞ்சங்களை அடுக்கிக்கொண்டே போனால், ஏதோ ஒன்றில் நீங்கள்தான் ஒரு நாட்டின் பிரதமர். ஏன் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தீர்கள்? ஏன், ஜி.எஸ்.டி. வரி அதிகமாக உள்ளது என்று மக்கள் உங்களை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் அறிவியலில் Multiverse Theory அதாவது ‘பல்லண்ட கோட்பாடு’ என்று அழைக்கிறார்கள்.

சாத்தியமுள்ள பிரபஞ்சங்களின் அனுமானிக்கப்பட்ட தொகுப்பாக பார்க்கப்படும் இதற்கு "இணை பிரபஞ்சங்கள்", "பிற பிரபஞ்சங்கள்", "மாற்றுப் பிரபஞ்சங்கள்" என்றெல்லாம் பெயர்கள் உண்டு. ஹாலிவுட் படங்களில் இதைக் கருவாகக் கொண்டு பல நூறு படங்கள், டி.வி நாடகங்கள் வந்திருக்கின்றன. நிறையக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. தமிழில் வந்த ‘இரண்டாம் உலகம்’ படம் கூட கிட்டத்தட்ட இந்த பல்லண்ட கோட்பாட்டைத் தழுவி வந்ததுதான். என்ன அங்கே இன்னொரு உலகம் நம் பிரபஞ்சத்துக்கு உள்ளேயே இருப்பதாகக் காட்டப்பட்டது.

இந்த ‘பல்லண்ட கோட்பாடு’ மிகவும் சுவாரஸ்யமான விஷயமாக இருந்தாலும், இன்றும் பல அறிவியலார்களால் இது ஒரு ஃபாண்டஸியாக, அதீத கற்பனையாக, அறிவியல் புனைவாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஒருவேளை, இது சாத்தியமென்றால் இதன் இருப்பு எப்படி இருக்கும்? இணை பிரபஞ்சங்கள் என்ற ஒன்று இருக்கிறது என்றால் அது இந்த மூன்று வகைகளில் ஏதேனும் ஒரு வகையில் தான் இருக்கும் என்று கூறுகிறது அறிவியல்.

இணை பிரபஞ்சங்கள்

சாத்தியம் #1: குமிழி பிரபஞ்சங்கள் அல்லது சின்ன கருந்துளை பிரபஞ்சங்கள்

இந்த மாதிரியின் படி, நம் மொத்த பிரபஞ்சமும் ஒரு குமிழி வடிவில் (Bubble Universe) இருக்கின்றது என்று எடுத்துக்கொண்டால், நம் குமிழியை போன்றே பல நூறு குமிழிகள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. அவை ஒவ்வொன்றும் இணை பிரபஞ்சங்கள்தான். ஆனால், அவை அனைத்தும் நெடுந்தொலைவில் இருப்பதால் நம்மால் அதைக் காணவே முடியாது. அப்படி உருவான பிரபஞ்சங்களுக்கு நம்முடையதில் இருந்து மாறுபட்ட இயற்பியல் விதிகள் கூட இருக்கலாம். இப்படி இல்லையென்றால், இணை பிரபஞ்சங்கள் உருவாகாமல் சின்ன கருந்துளைகளுக்கு (Baby Blackholes) உள்ளேயே இன்னமும் அடைபட்டுக் கொண்டிருக்கலாம். நம் பிரபஞ்சத்தைப் போன்ற ஒரு பிரபஞ்சம் உருவாக, அதில் பூமி போன்ற ஒரு கிரகம் உருவாகத் தேவையான சூழ்நிலைகள் இன்னமும் ஏற்படாமல் இருக்கலாம்.

சாத்தியம் #2: அடுக்குகள் மற்றும் கூடுதல் பரிமாணங்கள்

மனிதனைப் பொறுத்தவரை, அவனால் மூன்று பரிமாணங்களை மட்டுமே உள்வாங்க முடிகிறது. அதைத் தாண்டி அவனால் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. நம் பிரபஞ்சம் மூன்று பரிமாணங்களைக் கொண்டது என்னும்போது, அது ஏன் பல பரிமாணங்கள் கொண்ட ஒரு மிகப்பெரும் பிரபஞ்சத்தின் ஒரு சிறு பகுதியாக இருக்கக் கூடாது? இந்தக் கோட்பாட்டின் படி, மூன்று பரிமாணங்களைக் கொண்ட நம் பிரபஞ்சத்தைப் போலவே, பல நூறு பிரபஞ்சங்கள் அந்த மிகப்பெரும் பிரபஞ்சத்தின் உள்ளே இருக்கின்றன என்கிறது இந்தக் கோட்பாடு. இதைப் புரிந்துகொள்ள ஓர் எளிய விளக்கம். நிறையப் பக்கங்கள் கொண்ட செய்தித்தாளை கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள். அதன் ஒவ்வொரு தாள்களும் ஒரு பிரபஞ்சம் என்று எடுத்துக்கொண்டால், அதைக் கையில் வைத்துக்கொண்டு நீங்கள் அமர்ந்திருக்கும் இடம் தான் அந்த மிகப்பெரும் பிரபஞ்சம். இந்தப் பெரிய பிரபஞ்சத்துக்கு ஒன்பது பரிமாணங்கள் வரை இருக்கலாம் என்கிறார்கள்.

சாத்தியம் #3: நிகழ்வுகளால், நாம் எடுக்கும் முடிவுகளால் உருவாகும் பல உலகங்கள்

இந்தக் கோட்பாட்டை விளக்க நம் '12B' படம் ஒரு சிறந்த உதாரணம். ஷாம் பஸ்சில் ஏறினால் ஒரு கதை, ஏறாவிட்டால் ஒரு கதை, என்று இரண்டு கதைகளைக் காட்டுவார்கள். அதேபோல, நீங்கள் செய்ய நினைத்த ஒரு காரியத்தைச் செய்யாமல் விட்டதால் உங்கள் வாழ்க்கை வேறு திசையில் பயணித்திருக்கலாம். அதேசமயம், அதைச் செய்த உங்களின் இன்னொரு வெர்சன் வேறு பாதையில் வேறு ஒருவனாகப் பயணித்துக்கொண்டிருக்கலாம். அந்த ஒருவனின் வாழ்க்கை வேறு பிரபஞ்சத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இணை பிரபஞ்சங்கள்

நாம் ஏற்கெனவே பார்த்த கணக்கு வாத்தியார் எடுத்துக்காட்டைக் கூட இதற்குப் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். இப்படி நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும், செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நம் வாழ்வில் மாறுதல்கள் ஏற்படுகின்றன. ஆனால், நாம் ஒரேயொரு வாழ்க்கையை மட்டும் வாழ்ந்துகொண்டிருப்பதால், நம் இன்னொரு வெர்சனின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று நமக்குத் தெரிவதில்லை. இதற்கு ஆதரவாக, மர்ஃபியின் கோட்பாடான (Murphy’s Law) “Anything that can happen will happen” சுருக்கமாக “எதுவும் நடக்கும்” என்பதை எடுத்துப் பேசுகிறார்கள். இப்படி நிறையச் சாத்தியக்கூறுகள் கொண்ட பல வினைகள் வெவ்வேறு பிரபஞ்சங்களாக, கிளைகளாக விரிந்து உருவாக வழிவகுக்கிறது.

பல்லண்ட கோட்பாட்டை ஆதரிப்பவர்களின் வாதம் என்ன?

வானியல் ஆராய்ச்சியாளர்கள் ‘பிரபஞ்சம்’ என்று அழைப்பது என்ன? அதைத் தாண்டி வேறு எதுவும் இருக்காதா? உண்மையில், அவர்கள் பிரபஞ்சம் என்று அழைப்பது ‘காணக்கூடிய பிரபஞ்சம்’ (Observable Universe) மட்டுமே. எனவே, நம் ஆராய்ச்சிக் கண்களுக்கு அப்பாற்பட்டும் இப்பிரபஞ்சம் விரிந்திருக்கிறது என்பதை யாராலும் மறுத்துவிட முடியாது. அப்படி நமக்குத் தெரியாத அந்த இடத்தில், ஏன் இன்னொரு பிரபஞ்சமே ஒளிந்திருக்கக் கூடாது? ஏன் நிறையப் பிரபஞ்சங்கள் இருக்கக் கூடாது? இது இந்த பல்லண்ட கோட்பாட்டை நம்புபவர்களின் வாதம். இணை பிரபஞ்சங்கள் இருக்க நிறையவே வாய்ப்புகள் உண்டு என்கிறார்கள் இவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!