2 விநாடியில் 60 மைல்... 30 நிமிட சார்ஜில் 500 மைல் தூரம்... பேட்டரி லாரியின் மேஜிக்! #Tesla

“இப்போதைய காலக்கட்டத்தில் டீசலால் ஓடும் ட்ரக்குகளை பயன்படுத்துவது பொருளாதார ரீதியாகத் தற்கொலைக்கு சமமானது” - எலான் மஸ்க்.

எலக்ட்ரிக் ட்ரக் Tesla

Photo Courtesy: Tesla

‘ஃபியூச்சரிஸ்ட்’ (Futurist) என்ற வார்த்தையை யாரேனும் உதிர்த்தால், ஒரு நொடி எல்லோர் மனதிலும் தற்போது வந்து போவது எலான் மஸ்க் அவர்களின் பெயர்தான். துளையிடும் போரிங் நிறுவனம், சோலார் நகரம், செவ்வாய் கிரகத்தில் குடியேற ஆராய்ச்சி நடத்தி வரும் ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம், செயற்கை நுண்ணறிவுகள் குறித்து ஆராயும் நிறுவனம், எலக்ட்ரிக் வாகனங்கள் செய்யும் டெஸ்லா நிறுவனம் என்று மனிதர் கால் பாதிக்காத துறைகளே இல்லை எனலாம். அவ்வப்போது ஏதேனும் புதிதாக அறிவித்து அனைவரையும் வாய்பிளக்க வைப்பது எலானின் பொழுதுபோக்கு, அவரது லேட்டஸ்ட் அறிவிப்பு எலக்ட்ரிக் ட்ரக் மற்றும் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார். இதன் அறிமுக விழாவில் எலான் கூறிய விவரங்களை இங்கே பார்ப்போம்.

டெஸ்லா செமி-ட்ரக் (Tesla Semi-Truck)

எலக்ட்ரிக் வாகனங்களை தன் பெருமைமிகு படைப்புகளாக அடுக்கி வரும் டெஸ்லா நிறுவனத்தின் மற்றுமொரு பெரிய சாதனையாக எலக்ட்ரிக் ட்ரக் வெளிவந்துள்ளது. நவீன தொழில்நுட்பங்களுடன் அட்டகாசமான வடிவத்தில் வந்திருக்கும் இது, 36,285 கிலோ வரை எடையைச் சுமக்கிறது. அவ்வளவு எடையைத் தாங்கிக்கொண்டு வந்தாலும் இது 95 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடுமாம்.

பொதுவாக, டீசல் வாகனங்களில் புகை வரும், எரிபொருள் நிரப்பும் போது டீசல் கொட்டலாம். விலை ஏறி இறங்கும். ஆனால், இங்கே முழுக்க முழுக்க மின்சாரம் மட்டுமே பயன்படுவதால் சார்ஜ் மட்டும் போட்டால் போதுமானது. அதுவும் வெறும் 30 நிமிட சார்ஜில் 640 கி.மீ. தூரம் வரை செல்லலாம் என்று ஆச்சர்யப்பட வைக்கின்றனர். மின்சார செலவு அதிகமாகுமே என்று வருத்தமும் கொள்ள வேண்டாம். டெஸ்லா வாகனங்களுக்காகக் குறைந்த கட்டணத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும், இதற்காக உலகம் முழுவதும் மெகா சார்ஜிங் ஸ்டேஷன்கள் நிறுவப்படும் என்றும் எலான் தெரிவிக்கிறார்.

என்ன ஸ்பெஷல்?

எலக்ட்ரிக் ட்ரக்

Photo Courtesy: Tesla

ஓட்டுநருக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தானாக ட்ரக் இயங்கும் வகையில் ஆட்டோபைலட் வசதி, ஒரே பாதையில் விலகாமல் செல்லும் வகையில் சென்சார்கள், வாகனத்தின் முன்னர் வேறு ஏதும் தடை வந்தாலோ, வேறு வாகனங்கள் வந்தாலோ எச்சரிக்கும் சென்சார்கள் என பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முத்தாய்ப்பாக ட்ரக்கின் முன்புற கண்ணாடி மிகவும் வலிமையானது என்றும் அணு வெடிப்பு ஏற்பட்டால் கூட தாங்கும் அளவிற்கு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

கூடுதல் சிறப்பாக, ஒவ்வொரு முறை பிரேக் அழுத்தும் போதும் உருவாகும் இயக்க ஆற்றலை (Kinetic Energy) மீளுருவாக்கம் செய்து வாகனத்தின் பேட்டரியில் சேமித்துக் கொள்கிறது. இவ்வளவு அம்சங்கள் அடுக்கப்பட்டாலும், இந்த வாகனத்தில் ஒரு மைல் செல்ல ஆகும் செலவு டீசல் ட்ரக்குகளை விட 20 சதவீதம் குறைவு என்று ஆச்சர்யப்பட வைக்கின்றனர். இதன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ள நிலையில், வரும் 2019-ம் வருடம் முதல் இதன் தயாரிப்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெஸ்லா ரோட்ஸ்டர் (Tesla Roadster)

ஸ்போர்ட்ஸ் கார்

Photo Courtesy: Tesla

நவீன ரக ஸ்போர்ட்ஸ் காராக இதை அறிமுகம் செய்தார் எலான் மஸ்க். இது 0-96 கிலோமீட்டர் வேகத்தை 1.9 வினாடிகளிலும், 0-160 கிலோமீட்டர் வேகத்தை 4.2 வினாடிகளிலும் எட்டிவிடுமாம். ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்து விட்டால் 965 கி.மீ. வரை செல்லலாம் என்று கூறி மிரள வைத்தார். நான்கு பேர் தாராளமாக உட்கார்ந்து செல்லவும், கூடுதல் சுமைகளை ஏற்றிச் செல்லவும் இதைப் பயன்படுத்தலாம். இது 2020ம் ஆண்டு முதல் தயாரிப்பிற்கு வருகிறது.

எலான் மஸ்கின் இந்த இரண்டு வரவேற்புகளும் இது எப்படி சாத்தியம் என்று அனைவரையும் மிரள வைத்துள்ளது. மற்றொரு புறம், எலான் இப்படி அறிவிப்புகள் கொடுப்பதில் கில்லாடி என்றாலும், அது ஒரு தயாரிப்பாக கைகளில் வந்தடைய எத்தனைக் காலங்கள் ஆகும் என்று அவருக்கே தெரியாது என்று கலாய்க்கின்றனர். அதற்கு உதாரணமாக டெஸ்லா நிறுவனத்தின் முந்தைய வாக்குறுதிகளையும் அதன் தற்போதைய நிலையையும் எடுத்து உரைக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!