மினிட்மேன், டாங்பெங், ட்ரைடென்ட்... வல்லரசுகளின் ஏவுகணைகள்! | world's powerful Intercontinental Ballistic Missiles

வெளியிடப்பட்ட நேரம்: 10:29 (21/11/2017)

கடைசி தொடர்பு:10:29 (21/11/2017)

மினிட்மேன், டாங்பெங், ட்ரைடென்ட்... வல்லரசுகளின் ஏவுகணைகள்!

டந்த சில மாதங்களாகவே அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் பிரச்னை இருந்துவருகிறது. இடையே போர் மூளும் சூழலும் ஏற்பட்டது. இரு நாடுகளுக்கும் என்னதான் பிரச்னை என்று பார்த்தால் விஷயம் ரொம்ப சிம்பிள். வடகொரியா அணு குண்டு சோதனையோ, புதிதாக ஏவுகணைகளை பரிசோதிக்கவோ கூடாது என்கிறது அமெரிக்கா. இந்த ரெண்டு விஷயத்தைத் தவிர வேறு ஏதாவது கோரிக்கை இருந்தால் கூறலாம் என்பது வடகொரியாவின் பதில். அமெரிக்கா மட்டுமின்றி உலக நாடுகள் சொல்லியும் அதைக் காதில் கூட வாங்குவதாக இல்லை வடகொரியா. பேசாமல் மற்ற நாடுகளின் மீது படைஎடுத்ததுபோல வடகொரியா மீதும் படை எடுக்க வேண்டியதுதானே...பின்னர் எதற்காக அமெரிக்கா தயங்குகிறது?

வடகொரியாவிடம் அணு ஆயுதம் இருப்பது ஒரு காரணம். மற்றொன்று, அதனிடம் இருக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்தான். "எங்கள்மீது போர்தொடுத்தால் பதிலடியாக அமெரிக்காவை ஏவுகணைகளால் தகர்ப்போம்" என்று கூறிய வடகொரியா ஒரு சாம்பிள் வீடியோவையும் வெளியிட அமெரிக்கா கொஞ்சம் பதறித்தான் போனது. வடகொரியாவிடம் அமெரிக்காவைப்போல படை பலம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால், ஏவுகணைகள் இல்லையென்று யார் உறுதி கூற முடியும்?

இப்படி ஒரு நாட்டின் பாதுகாப்பில் ஏவுகணைகள் முக்கிய பங்காற்றுகின்றன. ஒரு ஏவுகணையை வானில் ஏவிவிட்டு தாக்க வேண்டிய இடத்தை மட்டும் தேர்வுசெய்தால் போதுமானது வேலைமுடிந்தது. ஒரு பெரும்படை நிகழ்த்த வேண்டிய அழிவை மிகச்சாதாரணமாக நடத்தி முடிக்கும். ஏவுகணைகளில் பல வகைகள் இருக்கின்றன அதில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் உலகின் எந்த இடத்துக்கும் செல்லும் திறன் படைத்தவை. இந்தியாவிடமும் அக்னி போன்ற சக்தி வாய்ந்த ஏவுகணைகள் இருக்கின்றன. அப்படி பல்வேறு நாடுகளிடம் இருக்கும் சக்திவாய்ந்த ஏவுகணைகளில் சில...


R-36M/SS-18 Satan

R-36M/SS-18 Satan  ஏவுகணை

உலகம் முழுவதும் இருக்கும் சக்திவாய்ந்த ஏவுகணைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. 1970-களில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பனிப்போர் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. 1974-ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த இது இன்று வரை வெவ்வேறு பெயர்களில் பயன்பாட்டில் இருக்கிறது. இதனை ஏவுகணை என்பதைவிட சிறிய ரக ராக்கெட் என்றும் கணக்கில் கொள்ளலாம். 231 டன் எடை கொண்ட இதன் அதிகபட்ச தாக்கும் தொலைவு 16,000 கிலோ மீட்டர்கள். ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவை எளிதாகத் தாக்கமுடியும். அதிகபட்சமாக 10 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்தது. ஒருமுறை வானில் ஏவினால் வெவ்வேறு இடங்களில் இருக்கும் இலக்குகளையும் இதனால் தாக்க முடியும்.


Dongfeng 5

Dongfeng 5  ஏவுகணை


சீனாவிடம் இருக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணைகளில் ஒன்று. அணு ஆயுதத்தைச் சுமந்து செல்லும் திறன் இதற்கு உண்டு. 1971-ம் ஆண்டில் முதல் பரிசோதனை செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் படையில் இணைக்கப்பட்டது. 3 டன் எடையை சுமந்து செல்லும் இதன் மொத்த எடை 183 டன். சராசரியாக 13,000 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கை இதனால் தாக்க முடியும் அதிகபட்சமாக 15,000 கிலோமீட்டர்கள் செல்லக்கூடியது. இதை தாக்குதலுக்குத் தயார்படுத்த 1 மணிநேரம் போதுமானது வினாடிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன்படைத்தது டாங்பெங் 5.


 LGM-30G Minuteman-III

 LGM-30G Minuteman-III


அணு ஆயுதத்தைச் சுமந்து செல்லும் திறன் படைத்த அமெரிக்காவின் ஏவுகணை இது. விமானங்கள் தயாரிப்பில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் போயிங் நிறுவனத்தின் தயாரிப்பு. 1950 -களின் இறுதிகளில்  மினிட்மான் ஏவுகணை தயாரிக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்குப் பின்னர் 1962-ம் ஆண்டில் மினிட்மான் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பின்னர் 1970 -ம் ஆண்டில் இருந்து மினிட்மான் 3 பயன்பாட்டில் இருக்கிறது. அதிகபட்சமாக 13,000 கிலோமீட்டர்கள் வரை செல்லக்கூடியது.

UGM-133 Trident II

UGM-133 Trident II


நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்து ஏவும் திறன்படைத்த ஏவுகணைகளில் ட்ரைடென்ட் 2 தான் அதிக தொலைவு செல்லக்கூடியது. அணு ஆயுதங்களைச் சுமந்து செல்வதற்காகவே தயாரிக்கப்பட்டது. அதிகபட்சமாக 12,000 கிலோமீட்டர் தொலைவுக்குச் செல்லும். வினாடிக்கு 8 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன்படைத்தது ட்ரைடென்ட் 2. லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் தயாரிப்பான இது அமெரிக்க ராணுவம் மற்றும் ராயல் நேவி ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. வானில் ஏவிய பின்னர் இதற்கு வழிகாட்டுவதற்காக ஜிபிஎஸ் செயற்கைக்கோள்கள் பயன்படுத்தப்படும் என்பதால், இது இலக்கை துல்லியமாகத் தாக்கும். 

RS-24 Yars

RS-24 Yars

ரஷ்யாவின் அதிநவீன ஏவுகணை RS-24 யார்ஸ். 2007-ல் முதல் பரிசோதனை செய்யப்பட்டு 2010-ம் ஆண்டு படையில் இணைக்கப்பட்டது. இதன் அதிகபட்ச தாக்கும் தொலைவு 12,000 கிலோமீட்டர்கள். ரஷ்யாவின் நேவிகேஷன் அமைப்பான GLONASS செயற்கைக்கோள்கள் இலக்கை தாக்குவதற்கு வழிகாட்டுவதால் இதன் துல்லியம் அதிகம். மற்ற ஏவுகணைகள் போல இல்லாமல் இதை ஏவுவதற்கு தனியாக நிலையான இடம் தேவையில்லை என்பதும், இதற்கென இருக்கும் வாகனத்தில் பொருத்தப்பட்டிருக்கும் இதனை, எங்கிருந்து வேண்டுமானாலும் ஏவ முடியும் என்பதும் இதன் சிறப்புகள்.

இந்தியாவும் இதுபோன்ற கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளைத் தற்பொழுது பரிசோதித்து வருகிறது. அக்னி வகை ஏவுகணைகள் இந்த வகையைச் சேர்ந்தவை, அடுத்ததாக 16000 கிலோ மீட்டர்கள் செல்லக்கூடிய சூர்யா என்ற ஏவுகணையை இந்தியா உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது. 


டிரெண்டிங் @ விகடன்