வெளியிடப்பட்ட நேரம்: 08:25 (22/11/2017)

கடைசி தொடர்பு:08:25 (22/11/2017)

78 வயதில் ஒரு சாதனை... மோசஸ் பாட்டியின் கதை! #MotivationStory

உன்னை அறிந்தால்

ற்றுக்கொள்ள வயது தடையில்லை. எதையும், யாரும், எப்போது வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஈடுபாட்டோடு கற்றுக்கொண்ட அந்த வித்தையால் புகழ் பெறவும் முடியும். இந்த உண்மையை உணர்த்த வரலாறு, எத்தனையோ உதாரணங்களை விட்டுச் சென்றிருக்கிறது. அந்த உதாரண நாயகிகளில் ஒருவர், ‘மோசஸ் பாட்டி’ (Grandma Moses). அமெரிக்காவைச் சேர்ந்தவர். இளம் வயது முதல் வறுமையான சூழ்நிலையில் வளர்ந்து, தன் 70 வயதின் பிற்பகுதியில் சாதனைபுரிந்து அமெரிக்காவையே வியக்கவைத்தவர். மோசஸ் பாட்டியின் கதை, எதையாவது சாதிக்கத் துடிப்பவர்களுக்கு டானிக். அப்படி என்ன சாதனைபுரிந்தார் மோசஸ் பாட்டி... அவர் கதையைப் பார்ப்போமா?

மோசஸ் பாட்டி

அன்னா மேரி ராபர்ட்சன்  மோசஸ் (Anna Mary Robertson Moses) நியூயார்க்கில்  உள்ள கிரீன்விச் டவுனில் 1860-ம் ஆண்டு பிறந்தார். அப்பா விவசாயி, ஒரு மில்லையும் நடத்திக்கொண்டிருந்தார். இரண்டு, மூன்று பேர்களைக்கொண்ட குடும்பமாக இருந்தால் அவருடைய வருமானமே போதுமானதாக இருந்திருக்கும். அது பெரிய குடும்பம். அன்னா மேரிக்கு நான்கு சகோதரிகள், ஐந்து சகோதரர்கள். அந்தக் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்திருந்தார் அன்னா மேரி. அமெரிக்காவில், `ஒன் ரூம் ஸ்கூல்’ என்று ஒன்று உண்டு. அங்கே சில காலம் படித்தார் மேரி. அங்கிருந்தபோது, அவருக்கு ஓவியம் வரைவதில் ஆர்வம் ஏற்பட்டது.  

நமக்கு எதில் வேண்டுமானாலும் ஈடுபாடு, ஆர்வம் இருக்கலாம். ஆனால், நினைத்ததெல்லாம் எல்லோருக்கும் எப்போதும் கிடைத்துவிடுவதில்லை என்பதே யதார்த்தமாக இருக்கிறது. வீட்டுச்சூழல், மேரியை வேலைக்குச் செல்ல நிர்ப்பந்தப்படுத்தியது. ஒரு பணக்காரக் குடும்பத்தினரின் பண்ணையில் வேலைக்குச் சென்றபோது மேரிக்கு வயது 12. பண்ணை வேலை மட்டுமல்ல... பல பணக்கார வீடுகளில் வீட்டு வேலை, துணி தைத்துக் கொடுப்பது, வீட்டைப் பராமரிப்பது எனப் பல வேலைகளைச் செய்தார் மேரி. ஒரு நாள், இரு நாள் அல்ல... 15 ஆண்டுகளுக்கு இந்த வேலைகள் தொடர்ந்தன. 

வேலையைக் கடமைக்காகச் செய்யும் சுபாவம் மேரிக்கு இல்லை. துணி தைப்பதையேகூட கலைநயத்தோடு செய்வார். அவர் தைத்துக் கொடுக்கும் ஆடைகளைப் பார்த்தால், அப்படியே கண்ணில் ஒற்றிக்கொள்ளத் தோன்றும். வழக்கமான பாணியில் அமைந்த உடைகளாக இருந்தாலும், மேரி அதில் சின்னப் பூ வேலைப்பாட்டுடன் கூடிய எம்பிராய்டரி வேலைகளையும் செய்துவைப்பார். தைக்கக் கொடுத்தவர்களுக்கு மனம் துள்ளிக் குதிக்கும். சிலர் அவரின் திறமையை ஊக்குவிப்பதும் உண்டு. ஒரு வீட்டில், இவரிடமிருக்கும் ஆர்வத்தைப் பார்த்து வரைந்து பழகுவதற்கான தூரிகை, கிரையான்ஸ் எல்லாம் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஓவியம்

அன்னா மேரி வேலை பார்த்த பண்ணையில் இன்னொருவரும் பணியில் இருந்தார். அவர் பெயர் தாமஸ் சல்மான் மோசஸ் (Thomas Salmon Moses). இருவருக்கும் ஒருவரையொருவர் பிடித்துப் போய்விட்டது. திருமணம் செய்துகொண்டார்கள். ஆனாலும் நிலைமை மாறிவிடவில்லை. பல பண்ணைகளில் பணிபுரிந்தார்கள். மேலும் கொஞ்சம் வருமானம் வேண்டுமென்பதற்காக உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பது, பாலில் வெண்ணையெடுத்து விற்பது... என என்னென்னவோ வேலைகளையெல்லாம் செய்தார் அன்னா மேரி. ஒரு கட்டத்தில் எப்படியோ மோசஸும் மேரியும் இணைந்து ஒரு பண்ணையை விலைக்கு வாங்கினார்கள். வாழ்க்கை சுமுகமாக நகர்ந்துகொண்டிருந்தது. 

ஆரம்பத்தில் ஷீநந்தோவா (Shenandoah Valley) என்ற இடத்தில் இருந்தார்கள். பிறகு நியூயார்க்கில் இருக்கும் ஈகிள் பிரிட்ஜ் பகுதியில் குடியேறினார்கள்... ஐந்து குழந்தைகளுடன் இனிமையாக வாழ்ந்தார்கள்.. சுபம்... இப்படி முடித்துவிடலாம்தான். ஆனால், மேரியின் வாழ்க்கை முதுமையில்தான் சுவாரஸ்யம் பெற்றது. மேரியின் கணவர், தாமஸ் மோசஸ், 67-வது வயதில் மாரடைப்பால் காலமானார். மகன் பண்ணையைப் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார். 

பண்ணை வேலை, குடும்பப் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் ஓய்வு பெற்று மகள் வீட்டில் வசிக்கத் தொடங்கினார் மேரி. ஆனாலும் வேலை பார்த்த கையை சும்மா வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை. நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் துணிகளில் எம்பிராய்டரி வரைந்து கொடுக்க ஆரம்பித்தார். அதையும் அவரால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. மேரியின் 76-வது வயதில் அவருக்கு `ஆர்த்ரிட்டிஸ்’ (Arthritis) எனப்படும் கீல்வாதம் வந்தது. வீட்டில் இருப்பவர்கள் அவரைச் `சும்மா இரு...’ என்று சொன்னாலும், அவரால் வெறுமனே எங்காவது உட்கார்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ இருக்க முடியவில்லை. அதே நேரத்தில் எம்பிராய்டரி வரைவதும் கடினமாக இருந்தது.

மோசஸ் பாட்டி வரைந்த ஓவியம்

மேரி அல்லல்படுவதைப் பார்த்தார் அவர் சகோதரி. அவர்தான் இவருக்கு ஒரு யோசனை சொன்னா... `நீ ஏன் ஓவியம் வரையக் கூடாது?’ அந்த யோசனை மேரிக்குப் பிடித்திருந்தது. 78-வது வயதில் ஓவியம் வரைய ஆரம்பித்தார். மெள்ள மெள்ள அவர் வரைந்த ஓவியங்கள் விற்பனைக்கும் வர ஆர்ம்பித்தன. தன் ஓவியங்கள் அனைத்திலும் தான் வாழ்ந்த பண்ணை, சுற்றியுள்ள இடங்கள் என தன் நினைவுகளை வரைய ஆரம்பித்தார். பல ஓவியக் கண்காட்சிகள்... புகழ் வீடு தேடி வந்தது. கிட்டத்தட்ட 100 வயது வரை வாழ்ந்தார் மேரி தாம்சன் மோசஸ். 

பல பிரபல பத்திரிகைளின் அட்டைப்படத்தை அலங்கரித்தார். தொலைக்காட்சியில் தோன்றினார். பத்திரிகைகள், அவரை `மோசஸ் பாட்டி’ (Grandma Moses) என்றே குறிப்பிட்டன. அவர் வாழ்க்கையை ஓர் ஆவணப்படமாகக்கூட எடுத்திருக்கிறார்கள். உங்களுக்கு வரைய, இசை கற்க, பட்ட மேற்படிப்புப் படிக்க ஆர்வமாக இருக்கிறதா? ஆனால், வயதாகிவிட்டதே எனத் தயங்குகிறீர்களா? தயக்கமே வேண்டாம். மோசஸ் பாட்டியை, அவர் கதையை நினைத்துக்கொள்ளுங்கள். இன்னும் பல உயரங்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன என நினைத்துக்கொள்ளுங்கள். வெற்றி மிக அருகில்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க