Published:Updated:

‛‛மாதவிடாய் சுகாதாரத்துக்கு மென்ஸ்ருவல் கப் தீர்வு!’’ - சூழலியல் செயற்பாட்டாளர் சீமா கண்டலே #VikatanExclusive

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‛‛மாதவிடாய் சுகாதாரத்துக்கு மென்ஸ்ருவல் கப் தீர்வு!’’ - சூழலியல் செயற்பாட்டாளர் சீமா கண்டலே #VikatanExclusive
‛‛மாதவிடாய் சுகாதாரத்துக்கு மென்ஸ்ருவல் கப் தீர்வு!’’ - சூழலியல் செயற்பாட்டாளர் சீமா கண்டலே #VikatanExclusive

‛‛மாதவிடாய் சுகாதாரத்துக்கு மென்ஸ்ருவல் கப் தீர்வு!’’ - சூழலியல் செயற்பாட்டாளர் சீமா கண்டலே #VikatanExclusive

இந்தியாவில் 12 சதவிகிதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தாத 88 சதவிகிதப் பெண்களில், 23 சதவிகிதம் பெண்களால் அதை வாங்க முடிவதில்லை என்கிறது கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள். கிராமப்புறப் பள்ளிகளில் படிக்கும் 23 சதவிகிதப் பெண் குழந்தைகள், தன்னுடைய மாதவிடாய் கால அசெளகரியங்களுக்காக தன் பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொள்கிறார்கள். மாதவிடாய்க் காலத்தில் சரியான சுகாதாரம் இல்லாமல் 70 சதவிகித கர்ப்பப்பை நோய்கள் (புற்றுநோய் உள்பட) ஏற்படுகின்றன. குறைந்தது 10 சதவிகிதம் பெண்கள் `மாதவிடாய்' என்பதை நோயாகக் கருதுகின்றனர். `யூத் கி ஆவாஸ்’ எனும்  தன்னார்வ அமைப்பால் கடந்த ஆண்டின் இறுதியில் தெரிவிக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் இவை.

இந்தியப் பெண்களில் 70 சதவிகிதப் பெண்கள் நாப்கினுக்காகச் செலவுசெய்ய முடியாத நிலையில் இருக்கிறார்கள். சுமார் 88 சதவிகிதப் பெண்கள் துணி, சாம்பல், உமி ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில்தான், வரிவிகிதங்களைத் தீர்மானிக்கும் ஜி.எஸ்.டி குழு, பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் பயன்படுத்தும் நாப்கின்கள் மற்றும் உறிஞ்சுவான்களுக்கு 12 சதவிகித வரி நிர்ணயித்துள்ளது. பெண்களின் வளையல், குங்குமம் போன்றவற்றை அத்தியாவசியப் பொருள்களாக வகைப்படுத்தியுள்ள மத்திய அரசு, அவற்றுக்கு ஜி.எஸ்.டி-யில் வரிவிலக்கு அளித்துள்ளது.

நாப்கின் பேடுகளில் உறிஞ்சும் ரத்தமானது, நுண்ணுயிரிகள் வளர்வதற்கு ஏற்ற சூழலில் இருப்பதால், பாக்டீரியா தொற்றும், பூஞ்சைத் தொற்றும் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம். நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை பேடுகளை மாற்றாமல் இருந்தால், பிறப்புறுப்பில் எரிச்சல், அரிப்பு, சிறுநீர்த் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மேலும், சானிட்டரி நாப்கின்கள் சுற்றுச்சூழலுக்கு எதிரானதாகவும், இவற்றை அப்புறப்படுத்துவதற்கான நடைமுறைகளும் நம்முன் மிகப்பெரிய சவாலாக எழுந்து நிற்கின்றன.

மருத்துவக் கழிவுகளில் ஒன்றாக எரிப்பதா அல்லது திடக்கழிவாக அகற்றுவதா எனத் தெளிவான விதிமுறைகள் வகுக்கப்படாததால் குழப்பங்கள் தொடர்கின்றன. ஒரு பெண், தன் வாழ்நாளில் 125 கிலோ நாப்கின்களைப் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. இதில் உள்ள பிளாஸ்டிக் அடுக்குகள், மண்ணிலிருந்து முற்றிலுமாக மறைய சுமார் 800 வருடங்கள் ஆகலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நாப்கின்களை, செய்தித்தாளில் சுற்றி குப்பையில் எறியும்போது, அதைக் குப்பையிலிருந்து பிரித்தெடுக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ரத்தத்தினால் ஏற்படக்கூடிய தொற்றுகளான `ஹெபடைட்டிஸ் பி’, `ஹெபடைட்டிஸ் சி’ போன்ற பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. நகரப் பகுதிகளில் நாப்கின்கள் பரவலான பயன்பாட்டு முறையாக இருந்தாலும், டேம்பன்ஸ் (Tampons), மென்ஸ்ருவல் கப்ஸ் (Menstrual Cups), துணி நாப்கின் போன்றவையும் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. 

குறைந்த நேர இடைவெளிக்குள் மாற்றவில்லையென்றால், உடல்ரீதியான பாதிப்புகளையும் மிகப்பெரிய சூழல் கேட்டையும் உருவாக்கிவரும் நாப்கின்களுக்கு மாற்றாக, குறைந்த விலையில் மென்ஸ்ருவல் கப்களை உருவாக்கியிருக்கும் மும்பையைச் சேர்ந்த `அக்‌ஷய்’ சமூகத் தன்னார்வ அமைப்பின் நிறுவனரும் சூழலியல் செயற்பாட்டாளருமான `சீமா பர்தேஷி கண்டலே’வைத் தொடர்புகொண்டோம்.

உற்சாகத்துடன் பேசத் தொடங்கினார் சீமா. ``இருபது வருடங்களாக இந்தியா பெரிய அளவில் வளர்ச்சி கண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், எதை நோக்கிய வளர்ச்சி என்பதில்தான் எந்தத் தெளிவும் இல்லை. தென்னிந்தியர்கள், நல்ல மாற்றங்களை சீக்கிரம் தங்களுக்குள் ஏற்படுத்திக்கொள்வார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். மென்ஸ்ருவல் கப் தொடர்பான விவரங்களுக்கும் உரையாடல்களுக்கும் என்னை அணுகியதில் மகிழ்ச்சி'' என்றவாறே தனது ஈகோ ஃப்ரெண்ட்லி பொருள்களுக்கான கனவைக் குறித்து பேசத் தொடங்கினார்.

``சுற்றுச்சூழல், சுகாதாரம் தொடர்பான முக்கியச் செயல்பாடுகளின் மீது ஏற்பட்ட ஆர்வமும், அதன் வழியான தேடலும்தான் இந்த ஈகோ ஃப்ரெண்ட்லி பொருள்களை உருவாக்குவதற்கான உந்துதல். வீட்டில் குவியும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்று வழியைத் தேடியபோது தொடங்கிய பயணம் இது. பயன்படுத்திய, நல்ல நிலையில் இருக்கும் புடைவைகளைக்கொண்டு பைகள் செய்யத் தொடங்கினேன். தையல் அறிவும் ஃபேஷன் டிசைனிங் மீதான ஆர்வமும் இந்தச் செயலை மேலும் மெருகூட்டின. `அக்‌ஷய்' தன்னார்வ அமைப்பைத் தொடங்கி, இந்தப் பைகளைத் தைப்பதற்காக ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டேன். பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்பதையே நோக்கமாகக்கொண்டிருப்பதால், இந்தப் பைகளை நாங்கள் பல இடங்களில் விநியோகிக்கிறோம். விற்பதில்லை” என்று பெருமிதத்துடன் பேசிய அவர் சமூகத்தில் உள்ள இன்றைய பெண்களின் பொருளாதார நிலை குறித்துப் பேசினார். 

``நாப்கின்கள் வாங்கும் பொருளாதார நிலையில் இல்லாத மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். இந்த நிலையில் மென்ஸ்ருவல் கப் உபயோகம்குறித்து நான் பேசுவது மிகையாகக்கூட தோன்றலாம். நாப்கின்களில் இருக்கும் டையாக்ஸின் வேதிப்பொருள் பல உடல் உபாதைகளையும், மக்குவதற்கு கடினமானது என்பதால் சூழல் சீர்கேட்டையும் உருவாக்குகின்றன. எஃப்.டி.ஏ-வால் அங்கீகரிக்கப்பட்ட தரமான சிலிகான் மென்ஸ்ருவல் கப்கள் 1,500 ரூபாயைத் தொடக்க விலையாகக்கொண்டிருக்கிறது. அதே தரத்துடன், பல்வேறு அளவுகளில், அசெளகரியங்கள் வர வாய்ப்பில்லாத மென்ஸ்ருவல் கப்களை வடிவமைத்தேன். சிலிகான் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்களின் துணையுடன், தரம் எந்த அளவிலும் குறையாமல் 555 ரூபாய் பொருள்செலவில் இதை வடிவமைக்க முடிந்தது. கல்விக்கூடங்களில், கல்லூரிகளிலும் மாதவிடாய் சுகாதாரத்தை வலியுறுத்தும் வகுப்புகளை நடத்திவருகிறேன். தொடக்க முயற்சியாக, குடிசைப் பகுதிகளிலும் அங்கன்வாடிகளிலும் மென்ஸ்ருவல் கப்களைப் பயன்படுத்துவதற்கான விழிப்புஉணர்வை ஏற்படுத்திவருகிறோம்” என்றார்.

கல்விக்கூடங்களில் பொது இடங்களில் சீமா நடத்திவரும் பிரசாரத்தின் விளைவுகளைக் குறித்துக் கேட்டபோது,

``தொடக்கத்தில் பெரிய வரவேற்பு இல்லை. ஆனால், போகப்போக கவனிக்கத் தொடங்கினார்கள். எப்போது பேசினாலும் ஆண்களும் பெண்களும் சேர்ந்து இருக்கும் இடங்களில்தான் இதைப் பேச வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். மென்ஸ்ருவல் கப்களைப் பற்றி மட்டுமல்லாமல், பெண்ணின் உடற்கூறு, மாதவிடாய் சுகாதாரம், மாதவிடாய் என்னும் இயல்பான நிகழ்வை ஆணும் பெண்ணும் மிக எளிதாக, சகஜமாக அணுகவேண்டும் என்னும் அவசியத்தை, நட்புடன் அவர்களிடம் பகிர்கிறேன். கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் நடத்தும் கருத்தரங்குகளின்போது, அத்தனை நாள்களாக அம்மாக்களிடமும், சகோதரிகளிடமும், தோழிகளிடமும் இருந்த அந்நிய உணர்வும் கற்பனையான விஷயங்களையும் அடக்கிய மாணவர்களின் மனத்தடை விலகியதை என்னால் கவனிக்க முடிகிறது. மாதவிடாய் நேரங்களில் இருக்கும் அசெளகரியங்கள், அதனால் ஏற்படும் மனத்தொய்வுகள் (Mood swings) குறித்து என் மகன்களிடம் நிறைய பேசியிருக்கிறேன். நான் பெறாத மகன்களிடமும்

மகள்களிடமும் தொடர்ந்து பேசுவேன்” என்று அழுத்தமாகச் சொன்னார். 

மென்ஸ்ருவல் கப் பயன்பாடு பக்கவிளைவுகளை ஏற்படுத்தியுள்ளதா, அபாயங்கள் என்ன?

``சிலிகான் தரத்தில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளாமல் இருந்ததால், நேர்மறையான பாராட்டை மட்டுமே பெற்றுவருகிறேன். இந்த மென்ஸ்ருவல் கப்ஸ், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடியது என்பதால், பொருளாதாரரீதியாகப் பயன்படக்கூடியது. பிறப்புறுப்பின் உள்ளே செலுத்தி வைக்க வேண்டும். எடுக்கும்போது, அழுத்தி அதிலிருக்கும் ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். பிறகு, சரியான முறையில் கழுவி மீண்டும் பயன்படுத்த வேண்டும். பிறப்புறுப்பில் இருக்கும் ஹைமென் சுவர் விலகலாம் என்னும் தயக்கத்துடன் திருமணமாகாத பெண்கள் இதைப் பயன்படுத்த மறுக்கிறார்கள். சிலிகானின் தரமும் சரியான முறையில் தூய்மைப்படுத்துவதும் மட்டுமே மென்ஸ்ருவல் கப் பயன்பாட்டுக்கான விதிமுறைகள். மென்ஸ்ருவல் கப் பயன்பாட்டுடன் துணி நாப்கின்களின் பயன்பாட்டையும் இதே அளவில் ஊக்குவிக்கிறோம். 

மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதுதான் சுற்றுச்சூழலுக்கான, நம் பெண்களுக்கான எனது கனவு” என்று புன்னகைக்கிறார் சீமா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு