வெளியிடப்பட்ட நேரம்: 09:07 (24/11/2017)

கடைசி தொடர்பு:09:56 (24/11/2017)

'ஆத்தீ...அப்ப ஆர்யா சொன்னதெல்லாம் பொய்யா?' மாப்பிள்ளை ஆர்யா தளத்தின் இன்டர்நெட் ஜாதகம்!

தோழி ஒருத்தி ஆர்யா போட்டிருந்த ட்வீட்டின் லிங்க் அனுப்பியிருந்தாள். ‘ஆரம்பிச்சுட்டாடா ஆர்யா புராணத்தை..’ என்று கடுப்பாகி கோப ஸ்மைலி டைப் பண்ணுவதற்குள் அடுத்த மெசேஜ்.. ‘ஆர்யா பொண்ணு தேடுறாராம்டா… நான் அப்ளை பண்ணவா..’! இது என்னடா புதுக்கதை என்று ஒரு ஹாஹாவைப் போட்டுவிட்டு ட்வீட்டைத் திறந்தால், அட ஆமா ஆர்யாவே வீடியோவில் தோன்றி ’யாராச்சும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்புனா இந்த நம்பர்க்கு கால் பண்ணுங்க’ என்று ஒரு ஃபேன்ஸி நம்பரைக் கொடுக்கிறார். இது என்னடா ஆர்யாவுக்கு வந்த சோதனை. இன்னைக்குத் தேதிக்கு அம்புட்டு கேர்ள்ஸூக்கும் ஆதர்ச ஹீரோ… ட்ரீம் பாய்… அவருக்கே பொண்ணு கிடைக்காம ஆன்லைன்ல தேடுறாரா? ஆனானப்பட்ட ஆர்யாவுக்கே இந்த நிலைமைனா  அப்போ நமக்கெல்லாம்… என்று ஒரு செகண்ட் உள்ளுக்குள் இருந்த அப்பாவி சிங்கிள் எட்டிப் பார்த்தான்.

ஆனாலும் இந்த வீடியோவில் இரண்டு டவுட்.. ஒன்று ஆர்யாவுக்கெல்லாம் இதுவரை யாரும் ப்ரொப்போஸ் பண்ணியிருக்க மாட்டார்கள் என்பதெல்லாம் போஸ்ட் ஆபிஸூக்கே எந்த லெட்டரும் வரவில்லை என்பதைப் போல நம்புற மாதிரியா இருக்கு. அடுத்தது வீடியோவில் ஆர்யா சொன்ன மொபைல் எண் இந்தப் போட்டியாளர் இந்நிகழ்ச்சியில் தொடர விரும்பினால் இந்த எண்ணை அழைக்கவும் என்று ரியாலிட்டி ஷோக்களில் ஒரு நம்பர் கொடுப்பார்களே அதுபோன்ற எண் போலவே இருந்தது.

சரி என்னதான் நடக்குது பார்ப்போமே என்று லேண்ட் லைனில் இருந்து அந்த எண்ணை அழைத்தால் கால் போகவில்லை. மொபைலில் இருந்து அழைத்தபோது ஒரு ரிங் கூட போகவில்லை. ஆர்யா பேசத்தொடங்கிவிட்டார். ‘என்னைத் திருமணம் செய்ய முன்வந்ததுக்கு நன்றி. உங்களுக்கு ஒரு மெசேஜ் வரும் அதைச் செக் பண்ணுங்க’ என்று சொல்லி பொசுக்கென்று போனை வைத்துவிட்டார். ‘அதுவந்து ஆங்.. இல்லைடா ஆங்…  டேய் டேய் டேய் இருடா’ என வடிவேலுவைப் போல நாம் முயற்சிக்க, அவரே பேசி முடித்து கட் பண்ணிவிட்டார். ரெக்கார்டட் வாய்ஸ். அடுத்த நொடி மொபைலுக்கு www.mapillaiarya.com என்ற இணையதள முகவரியுடன் கூடிய மெசேஜ் வந்தது. அப்படியே அந்த வெப்சைட்டுக்குள் நுழைந்தால் ஒரு ஃபார்ம். கல்யாணத்துக்குப் பெண் தேடும்போது என்னென்ன கேள்விகளெல்லாம் கேட்பார்களோ அது அத்தனையும் கேட்டிருந்தார். அட நிஜமாவே ஆர்யா இப்படித்தான் பொண்ணு தேடுறாருப்பா என்று ஆச்சர்யமாக இருந்தது.

ஆர்யா

இருந்தாலும் அந்நியன் பட பிரகாஷ்ராஜ் போல அந்த வெப்சைட் யார் பேர்ல ரெஜிஸ்டர் ஆகிருக்குனு தெரிஞ்சுக்கலாமே என்று மூளையில் பல்ப் எறிய உடனடியாக விவரங்களைத் தேடினால் அந்த வெப்சைட் ஒரு பிரபல ஊடகத்தின் பெயரில் ரெஜிஸ்டர் ஆகியிருந்தது. பல சாட்டிலைட் சேனல்கள் நடத்தும் பிரபல வட இந்திய ஊடகம் அது. ஆக ஒரு டி.வி ஷோவுக்காகத்தான் இப்படி செய்கிறார்களோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. அதோடு நிற்காமல், இந்த வெப்சைட் ரெஜிஸ்டர் ஆகியிருந்த இமெயிலைக் கொடுத்து தேடினால் அந்த இமெயிலை வைத்துதான் அந்த மீடியா க்ரூப்பின் அனைத்து இணையதளங்களையும் ரெஜிஸ்டர் செய்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல aryagetsmarried.com என்ற தளமும் பதிவு செய்யப்பட்டு தயாராக இருக்கிறது. அநேகமாக இந்த திட்டத்தின் அடுத்த அத்தியாயம் அந்த இணையதளத்தை வைத்தும் இருக்கலாம். 

இதைப் பார்த்தபோது இன்னொரு சந்தேகம் வந்தது. ஆர்யா ஜிம்மில் நான் பேசியது லீக் ஆனதால்தான் இப்படி அறிவிக்கிறேன் என்று தன் வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். அந்த ஜிம் வீடியோ கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று ட்விட்டரில் தேடினால், ஆர்யா ஃபேன்ஸ் க்ளப் ஐடியில் இருந்துதான் முதலில் அந்த வீடியோ வந்திருந்தது. அந்த வீடியோவும் இயல்பாக இல்லாமல் கொஞ்சம் நாடகமாகவே இருந்தது. அந்த வீடியோ நவம்பர் 14-ம் தேதி ட்விட்டரில் பதிவேற்றப்பட்டிருந்தது. ஆர்யா தன் அபிஷியல் வீடியோவை நவம்பர் 21-ம் தேதி வெளியிட்டார். ஆனால் mapillaiarya.com இணையதளம் நவம்பர் 4-ம் தேதியே ரெஜிஸ்டர் செய்யப்பட்டு இருக்கிறது. Aryagetsmarried.com நவம்பர் 8-ம் தேதி ரெஜிஸ்டர் செய்துவைத்திருக்கிறார்கள். வெப்சைட் ரெஜிஸ்டர் பண்ணி சரியாக ஒரு வாரம் கழித்து ஜிம் வீடியோ.. மீண்டும் சரியாக ஒரு வாரம் கழித்து ஆர்யாவின் வேண்டுகோள் வீடியோ. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் இது ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. 

Searching

இப்படி ஆர்யா விஷயத்தில் ‘துப்பறிவாளன்’ விஷாலாகி துப்பு துலக்கிய விஷயங்களையெல்லாம் கொண்டுபோய் நண்பியிடம் காண்பித்தால், ‘அதைவிடு செல்ஃபி வீடியோ அப்லோட் பண்ணனுமாமே... அதுக்கு ஐடியா சொல்லு’ என்று முகமெல்லாம் சிவந்து கேட்கிறாள். அத்தனையும் கேம் என்பதை அந்த பரிசுத்த ஆன்மா மருந்துக்குக்கூட மதிக்கலை. எப்படியும் ஆயிரக்கணக்கில் அப்ளிகேஷன்கள் குவியப்போகிறது.

உண்மையில் ரியாலிட்டி ஷோவுக்காகத்தான் இப்படி செய்கிறார்கள் என்றால் மிக சுவாரஸ்யமான ஐடியா. ஆனால், ஆர்யா விளையாட்டுத்தனமாக செய்யும் சில விஷயங்கள் சர்ச்சையில்போய் முடிந்த முன்வரலாறுகள் நிறைய. உதாரணமாக ஜல்லிக்கட்டு சமயத்தில் ‘வாட் இஸ் ஜல்லிக்கட்டு?’ என்று ஆர்யா விளையாட்டுக்குக் கேட்க ட்விட்டரில் வறுத்து எடுத்தார்கள். அதிலும் இது பெண்கள்… திருமணம்.. என்று கொஞ்சம் சீரியஸான விளையாட்டு. எனவே, ப்ராங்க்காக இருந்தால் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பும். ஒருவேளை நிஜமாகவே ஆர்யா தன் வாழ்க்கைத் துணையை இப்படித்தான் தேடுகிறார் என்றால், ஆல் தி பெஸ்ட் ஆர்யா..!


டிரெண்டிங் @ விகடன்