வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (25/11/2017)

கடைசி தொடர்பு:10:43 (25/11/2017)

நாம் வீசியெறிந்ததை எடுத்து வர நாய்கள் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றன? #KnowScience

மாலை நேரம். பூங்காவின் மேல் வானம் ஆரஞ்சு போர்வை போர்த்தியிருந்தது. “மணி… தோ… தோ!” என்று ஒரு குரல் புதருக்கு அப்பால் கேட்டது. சடாரென அந்தப் புதரின் இலைகளைக் கிழித்து கொண்டு மஞ்சள்நிற டென்னிஸ் பந்து ஒன்று பறந்துவந்து விழுந்தது. பின்னாடியே புதரைச் சுற்றிக்கொண்டு பிரவுன் நிற நாய் ஒன்று வந்தது. அதுதான் ‘மணி’யாக இருக்கக் கூடும் என்று நினைக்கும் போதே, அதை உறுதிசெய்யும் வகையில் பிரவுன் மணி அந்த டென்னிஸ் பந்தை கவ்விக் கொண்டு, குரல்வந்த திசையை நோக்கி ஓடியது. இதேபோல் ஒருமுறை இருமுறை அல்ல; பதினான்கு முறை அதுவும் விடாமல், சளைக்காமல் செய்தது.

நாய்கள்

ஒவ்வொருமுறை பந்தை கவ்விக்கொண்டு தன் எஜமானனை நோக்கித் திரும்ப ஓடும்போது அதன் முகத்தில் இருந்த பேரார்வம், மகிழ்ச்சி, போன்றவற்றை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. மணி அந்தப் பூங்காவை விட்டுச் சென்ற பின்னும், அதன் இந்தச் செயல் நம் கண் முன்னே ஓடிக் கொண்டே இருந்தது. மணி மட்டும் அல்ல, எதற்காக அனைத்து நாய்களும், இந்த விளையாட்டை விளையாடப் பேரார்வம் காட்டுகின்றன என்ற கேள்வியும் தான். அதுவும் செஞ்சுரி அடித்த கோலி போலக் குறையாத அந்த உற்சாகம் எதனால் தோன்றுகிறது?

இன்று பெரும்பாலானவர்கள், தங்கள் நாய்களை எதையாவது எடுத்து வரப்பழக்கி விடுகின்றனர். காலையில் செய்தித்தாள்களை, பால் பாக்கெட்களை எல்லாம் கவ்விக் கொண்டு வீட்டிற்குள் வரும் நாய்களைப் பல இடங்களில் நாம் பார்த்திருப்போம். இப்படி ஒரு பொருளை எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்று நாம் பயிற்சி அளிக்கிறோம் என்றாலும், அவை காட்டும் பேரார்வம், சலிக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் எடுத்து வரும் பொறுமை, சில சமயம் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும். இதற்கு விடைகாண, அறிவியல் அகராதியை மட்டுமல்ல, நாய்களின் வரலாற்றையும் கொஞ்சம் புரட்ட வேண்டும்.

ஒரு பொருளை எடுத்துக்கொண்டு வந்து தன் எஜமானனிடம் சேர்க்க வேண்டும் என்ற எண்ண ஓட்டம், அதன் ஜீன்களிலேயே புதைந்துபோன ஒரு விஷயம். கற்காலத்தில் வேட்டைச் சமூகமாக வாழ்ந்த மனிதர்கள், ஒரு சில நேரங்களில் வேட்டைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும். புயல், வெள்ளம், பெருமழை போன்ற நாட்களில் வேட்டைக்குச் செல்ல முடியாது. குகைகளிலேயே முடங்கிக் கிடைக்க வேண்டியது தான். அப்போது உணவுக்கு என்ன செய்வது? அதற்காக நாய்களைப் பழக்கினான். சாதாரண நாட்களில், மாமிசங்கள், காய்கள், பழங்களைக் காட்டுக்குள் வீசி எறிந்தான். நாய்கள் அவற்றைத் தேடி எடுத்துவந்தன. பின்னர், இயற்கை பேரிடர் நாட்களில், நாய்கள் தாமாகவே காட்டிற்குள் சென்று, மிருகங்கள் வேட்டையாடியது போக, மீதமிருக்கும் மாமிசங்கள், உண்ணத் தகுந்த பழங்கள் மற்றும் காய்களை எடுத்து வரத் தொடங்கின. அதை வைத்து மனிதன் பசியை போக்கிக் கொண்டான்.

நாய்கள்

இதில் இருந்த ஒரேயொரு பிரச்னை, அனைத்து நாய்களும் இந்த வேலையைச் செய்ய தயாராயில்லை. குறிப்பிட்ட இனங்கள் மட்டுமே இந்த வேலையை விரும்பிச்செய்தன. இதைப் பார்த்த கற்கால மனிதன் அந்த இனநாய்களை மட்டும் இனப்பெருக்கம் செய்ய அனுமதித்தான். மற்ற இன நாய்களை விரட்டிவிட்டான். ஏனென்றால், அந்தவகை நாய்கள்தானே அவனுக்கு வேண்டும்? இனப்பெருக்கம் செய்து பிறந்த நாய்கள், இயற்கையாகவே இந்த வேலையைச் செய்யத் தயாராகவும், பேரார்வம் மிக்கதாகவும் இருந்தன. இந்த வேட்டையாடும் இன நாய்களுக்குள் கலப்பின இனப்பெருக்கம் செய்ய வைத்து நாய்கள் சாம்ராஜ்யத்தை மேலும் வலிமை படுத்தினான்.

இப்போது நாம் வளர்க்கும் பெரும்பாலான நாய்கள், கற்காலத்தில் மாமிசங்களை, உணவுகளைக் காட்டில் இருந்து எடுத்து வந்த இனங்கள்தான். இதனால்தான், இயல்பிலேயே நம் நாய்கள் வீசியெறிந்த பொருட்களை எடுத்துவர ஆர்வம் காட்டுகின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்