வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (26/11/2017)

கடைசி தொடர்பு:18:16 (26/11/2017)

மின்வேலிகள் இல்லாமலே யானைகளை விரட்டலாம்... உதவும் AI கருவிகள்! #AIScarecrow

அந்த டீக்கடை பெஞ்சில் வழக்கம் போல் ஏழே பேர் அமர்ந்திருந்தனர். செய்தித்தாள்களை புரட்டிக் கொண்டு, சூடான செய்திகளுக்கு சைடு டிஷ்ஷாக டீயை உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு யானையின் படம் ஒருவரை ஈர்த்தது. செய்தியைப் படித்தார். படித்து விட்டு செய்தித்தாளை பெஞ்சில் வீசி எறிந்தார்.

“நேத்து நைட் திரும்ப ஒரு யானையும் குட்டி யானையும் மின்வேலினால செத்து போச்சாமா...:” என்று வருத்தப்பட்டார்.

“ஆமா, டெக்னாலாஜி வளந்திடுச்சுனு சொல்லுவான், இதுக்கெல்லாம் ஒரு மாற்று ஏற்பாடு செய்ய மாட்டான். யானைக்குத் தெரியுமா, இங்க வரக்கூடாதுன்னு?” என்று இன்னொருவர் குரல் கொடுத்தார்.

“சார், யானைகளோட எடத்த நாம எடுத்துக்கிட்டு, அதுகளை உள்ளே வரவேண்டாம்னு சொன்ன என்ன அர்த்தம்?” என்று இன்னொருவர் ஆதங்கப்பட்டார்.

“சார், சட்டப்படி இவனுக குறைந்த மின் அழுத்தம் தான் வெக்கணும். அதாவது, 9லிருந்து 12 வாட்ஸ் தான் இருக்கனும். ஆனா, எவன் கேக்றான்? பாதுகாப்பு வேணும்னு எக்ஸ்ட்ரா வெக்கிறான். யானைய பயப்படுத்த வேண்டிய வேலி, அதையே சாகடிச்சிடுது” என்றார் முதலாமவர்.

யானை

சரி, அந்த அரசியல் இந்தக் கட்டுரைக்கு தேவையில்லை. அனைவரையும் ஒன்று சேர்ந்தால் போல் சோகத்தில் ஆழ்த்தும் நிகழ்வுகளில் ஒன்று மின்வேலிகளில் மோதிக் காட்டு யானைகள் மற்றும் பிற மிருகங்கள் இறப்பது. காடுகளை, யானைகள் வரும் பாதையை மனிதர்களான நாம் தான் ஆக்கிரமித்துள்ளோம் என்பதை மறுப்பதற்கில்லை. ஆயினும், சில சமயங்களில் விவசாய நிலம், குடியிருப்புகள் என்று எல்லை மீறியும் யானைகள், சிறுத்தைகள் நுழைவது உண்டு. சிறிய மிருகங்கள், பறவைகள் இவற்றை விரட்ட வைக்கோல் பொம்மைகளே போதுமானது. பல இடங்களில் ஆபத்தான மற்றும் பெரிய மிருகங்களைத் தடுக்க நாம் நம் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றான மின்வேலி அவசியமாகிறது. மின்வேலி அவசியமாகிறது என்பதை விட, பாதுகாப்பு அவசியம் என்று எடுத்துக் கொள்ளலாம். ஏன் என்றால், மின்வேலியைத் தவிர வேறு எந்தத் தொழில்நுட்பம் மிருகங்களைக் கட்டுப்படுத்தும் என்று நமக்குத் தெரியவில்லை. ஒரு சில முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அவை எந்தளவு வெற்றி பெரும் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

ஸ்கேர்க்ரோ (Scarecrow) எனப்படும் வைக்கோல் பொம்மைகள் நிறுவப்பட்ட போது, அது சிறிய மிருகங்கள் மற்றும் பறவைகளை விரட்டியது. ஆனால், ஒரு சில நாட்களில் இது பொம்மை என்று அறிந்த பறவைகள் மற்றும் மிருகங்கள் ஜாலியாக பயிரை மேய்ந்தன. இதே ஐடியாவை வைத்து ஸ்கேர்க்ரோ டெக்னாலஜி என்ற ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. எலக்ட்ரானிக் ஸ்கேர்க்ரோ என்று அழைக்கப்பட்ட இவை, பெரும்பாலும் தண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்தின. சென்சார்கள் கொண்டு மிருகங்கள் வருவதை அறிந்து நீரை வாரி இறைத்தன. இருந்த போதும், ஒரு சில நாட்களில் பறவைகள் மற்றும் மிருகங்கள் இதன் செயல்பாட்டை புரிந்து கொள்கின்றன. இதிலிருந்து லாகவமாக தப்பித்து பயிர்களை மேய்ந்த சம்பவங்கள் அரங்கேறின.

AI கருவி

Photo Courtesy: CSIRO

இந்தப் பிரச்னைக்கு தீர்வு ஒன்றைக் கொண்டு வந்துள்ளது ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழு. ஒரு புதிய தொழில்நுட்பத்தை இந்தக் குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முறைக் கையில் எடுத்திருக்கும் ஆயுதங்கள் AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு. இந்தக் கருவியை வேண்டிய இடத்தில் நிறுவினால் போதுமானது. உள்ளே வரும் மிருகங்கள் எந்த வகை என்பதை உணர்ந்து கொண்டு அதை அச்சப்பட வைக்கும் ஒலிகளை எழுப்புகிறது. உதாரணமாக, யானைகளுக்கு தேனீகள் என்றால் பயம். அவற்றின் மெல்லிய சத்தத்தை கூட யானைகள் உணர்ந்து கொள்ளும். அந்தப் பக்கமே போகாது. இப்போது நம் கருவியின் சென்சார்கள் வருவது யானைகள் என்று கண்டறிந்தால், உடனே தேனீக்களின் ஒலியைப் பரப்பும். வேண்டிய அளவு வீரியத்தை அதுவே தேர்ந்தெடுத்துக் கொள்ளும். இது கைகொடுக்கவில்லை என்றால், அதீத ஒளியை பாய்ச்சத் தொடங்கும். யானைகளும் பயந்து ஓடி விடும்.

ஆஸ்திரேலிய அரசு நிறுவனமான காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி அமைப்பு (CSIRO) இந்த நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கருவியில் மூன்று முக்கிய பகுதிகள் உண்டு. எந்த மிருகம் உள்ளே வருகிறது என்பதை அறிய உதவும் சென்ஸார், அதற்கு எந்த வகையில் செயல்பட்டால் பயிர்களைக் காக்கலாம் என்று முடிவு எடுக்க உதவும் செயற்கை நுண்ணறிவு உறுப்பு மற்றும் ஒளி மற்றும் ஒலியை வெளியேற்ற உதவும் தடுப்பு சாதனப் பகுதி. இந்தக் கருவியின் மெமரிக்குள் வேட்டையாடும் சத்தம், விலங்குகளுக்கு எச்சரிக்கை அழைப்புகள் மற்றும் எரிச்சலூட்டும் சத்தங்கள் அடங்கியிருக்கும். இவ்வளவு ஏன், தேவைப்பட்டால், வரும் மிருகத்தைப் போலவே  குரல்களை எழுப்பவும் வசதிகள் உண்டு. மிமிக்ரி பாஸ்.

இவ்வருடத்தின் தொடக்கத்தில், இந்தக் கருவியை ஆப்பிரிக்காவின் காபோன் பகுதியில் வைத்து பரிசோதனை செய்துள்ளனர். இந்த AI யானைகளை வெற்றிகரமாக விரட்டி சாதனை புரிந்துள்ளது. தற்போது, சின்னச் சின்னப் பறவைகள் மற்றும் இதர பூச்சி இனங்களை விரட்டும் வகையில் இதைப் பலப்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காட்டுப் பன்றிகள், வாத்துகள், பூச்சியினங்கள் தான் ஆஸ்திரேலிய விவசாயத்திற்கு முக்கிய எதிரிகள். அவற்றை ஒழிக்க இந்தக் கருவி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

யானை

இது ஒரு புறமிருக்க, யானைகள் குறித்து ஆராய்ச்சி செய்பவர்கள் கூறும் கருத்தும் நம்மைச் சிந்திக்க வைக்கிறது, நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் விவேக் துப்பல் யானைகள் குறித்து ஆராய்ச்சி செய்பவர். யானைகளை விரட்டப் பலமுறை களம் புகுந்தவர். அவர் இந்தக் கருவி குறித்துப் பேசுகையில், “இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு வருடமும் இந்தப் பிரச்னையால் 100 யானைகள் இறக்கின்றன. 400 மனிதர்கள் கொல்லப்படுகிறார்கள். யானைகள் நாம் நினைப்பது போல  இல்லை. அவற்றைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. இந்தக் கருவிகள் ஆரம்பக் காலத்தில் வேண்டுமானால் உதவலாம். ஆனால், நாளடைவில் அவை இந்தக் கருவிக்கு பழகிவிடும்.  பூனைச் சத்தங்கள் முன்னர் பயன்படுத்தப்பட்டன. சிறிது நாட்களில், சத்தம் வந்தால், அதைச் சுற்றி கொண்டு வந்து உள்ளே புகும் அளவிற்கு அவை புத்திசாலிகளாக இருந்தன” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தக் கருவி கொண்டு மிருகங்களை விரட்டுவது மட்டுமல்லாமல், அந்தப் பகுதியின் மிருக நடமாட்டங்களை, அதன் தரவுகளையும் பெற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தக் கருவிக்கு ஆஸ்திரேலியாவின் விலங்கு நெறிமுறைகள் குழு (Animal Ethics Committee) ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்