வைரஸ் காய்ச்சலுக்கும் வைரல் நியூஸ்களுக்கும் காரணம் இதுதான்! #TippingPoint | Reason behind every small and big happenings

வெளியிடப்பட்ட நேரம்: 13:57 (27/11/2017)

கடைசி தொடர்பு:13:57 (27/11/2017)

வைரஸ் காய்ச்சலுக்கும் வைரல் நியூஸ்களுக்கும் காரணம் இதுதான்! #TippingPoint

அன்றாட வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான ஒரு விஷயம்கூட நமக்கே தெரியாமல் நம் வாழ்வுக்கான அஸ்திவாரமாக அமைவதுதான் இந்த ‘டிப்பிங் பாயின்ட்’. இந்த கான்செப்டை புத்தகமாக்கியவர்தான் மால்கம் க்ளாட்வெல்.

இது எப்படி நடக்கும் எனப் பார்ப்பதற்கு முன்னர், `டிப்பிங் பாயின்ட்' என்றால் என்ன என்பதைப் பற்றிச் சொல்கிறேன். எந்த ஒரு பெரிய மாற்றத்துக்குப் பின்னாலும் ஒரு சிறிய நிகழ்வு இருக்கும். அந்தச் சின்ன நிகழ்வுக்குப் பெயர்தான் `டிப்பிங் பாயின்ட்'. அதை வழிநடத்திச் செல்பவர்களுக்குப் பெயர் `தி ஃபாலோ ஆஃப் ஃப்யூ' (The Follow of Few). இதைப் பற்றி வெவ்வேறு உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து புத்தகம் எழுதியுள்ளார் மால்கம் க்ளாட்வெல் என்பவர். இதற்கு சிறந்த உதாரணமாக தொற்றுவியாதியைக் கூறலாம். ஒருவருக்கு காய்ச்சல் வந்தால், அது மற்றவர்களுக்கும் பரவும். இரண்டாவது உதாரணமாக `காட்டுத் தீ'யைச் சொல்லலாம். ஏதோ ஓர் இடத்தில் பற்றிய நெருப்பு, ஒட்டுமொத்தக் காட்டுக்கும் பரவுமே. இந்த இரண்டும்தான் டிப்பிங் பாயின்ட்டுக்கான சிறந்த உதாரணங்கள்.

பரவப்போகும் காய்ச்சலுக்கு ஒருவரும், ஒட்டுமொத்தக் காட்டுக்கும் பரவப்போகும் நெருப்புக்கு ஒரு தீக்குச்சியும்தான் `டிப்பிங் பாயின்ட்'. இதற்கு 20/80 என்ற மற்றொரு பார்வையும் இருக்கிறது. 20 சதவிகிதம் விளைவுகளாக இருக்கும்பட்சத்தில், அதற்கு 80 சதவிகிதம் காரணங்களாக இருக்கும் என்கிறது `பரீடோ பிரின்சிபல்' (Pareto Principle). அதாவது 20 சதவிகித சாலை விபத்துகளுக்கு, 80 சதவிகித மக்கள்தான் காரணம். அதேபோல் 20 சதவிகித வேலையை முடிக்க, 80 சதவிகிதத் தொழிலார்கள்தான் காரணம். டிப்பிங் பாயின்டைப் பொறுத்தவரை ஒன்றோடு ஒன்று தொடர்பிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சம்பந்தம் இல்லாத இரண்டு விஷயங்கள் மோதிக்கொள்ளும்போது இந்த டிப்பிங் பாயின்ட் நிகழும். என்ன பாஸ்... கமல் மாதிரி புரியாமலேயே பேசுறேனா? சரி, மேட்டருக்கு வருவோம். (ஐயய்யோ... இன்னும் மேட்டருக்கே வரலையா!)

TippingPoint

கொட்டாவி விடுவது மனிதனின் இயல்பு. இதில் இந்தக் கொட்டாவி என்பது மிகவும் சுவாரஸ்யமான ஒன்றே. அது பார்ப்பவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கினாலும், மனிதர்களுக்குள் இருக்கும் சூப்பர் பவர்களுள் ஒன்றுதான் கொட்டாவி. ஆம், ஐந்து பேர் இருக்கும் ஓர் இடத்தில் ஒருவர் கொட்டாவி விடுகையில், அதை மீதமுள்ள நான்கு பேர் பார்க்கும்பட்சத்தில், அதில் குறைந்தது இரண்டு நபர்களாவது நிச்சயம்  கொட்டாவி விடுவர்.

ஆரம்பிக்கும் இடம் சிறியது. அதே கும்பலாக இருக்கும் ஓர் இடத்தில் தனியாக ஓர் ஆள் விழுந்து விழுந்து சிரித்தால், காரணமின்றி மற்றவர்களுக்கும் சிரிப்பு வரும். பிறகுதான் சிரிப்பதற்கான காரணமே தெரிந்துகொள்ளத் தோன்றும். அதேபோல் போலியான ஒரு செய்தியைப் பரப்புவதிலும் முக்கியக் காரணமாக இருப்பது இந்த டிப்பிங் பாயின்ட்தான். மக்களின் தேடலை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல் செய்தியைப் பரப்பினால், அந்தச் செய்தி நிச்சயம் பலரை போய்ச் சேரும். அதன் பிறகுதான் அதைப் பற்றிப் பகுத்தறிய வேண்டும் என்ற எண்ணம் எழும். இதுதான் மனிதனின் அடிப்படை உணர்வு.

பொதுவாக, எந்த ஒரு பிராண்டை எடுத்துக்கொண்டாலும் அவர்களது பொருள்களை விற்பனை செய்ய டிப்பிங் பாயின்ட் வியூகத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள். டிப்பிங் பாயின்ட் எனும் அம்பை எய்ய, அவர்கள் கையில் எடுத்த ஆயுதம்தான் மார்க்கெட்டிங். குறிப்பிட்ட பிராண்டுகளில் டக்கென உங்கள் நினைவுக்கு வருவதற்கான காரணம், அவர்களது மார்க்கெட்டிங் வியூகம்தான். சிறந்த வாடிக்கையாளர்களைச் சம்பாதிக்கும் விளைவு... ஒன்று இரண்டாகும், இரண்டு நான்காகும். இப்படி காட்டுத்தீ போல் பரவி, பல லட்சம் மக்களை அவரது வாடிக்கையாளர்களாக மாற்றிவிடும். சில பிராண்டுகளைப் பிடிக்கிறதோ இல்லையோ, அந்தக் குறிப்பிட்ட பிராண்டுகளின் விளம்பரங்களும் அதில் பயன்படுத்திய சில ஸ்லோகன்களும் நம் மனதில் ஆணி அடித்தபடி பதிந்துவிடும். அந்தச் சூட்சுமத்துக்குப் பெயர்தான் `டிப்பிங் பாயின்ட்'.

TippingPoint - மால்கம் க்ளாட்வெல்

இப்படியாக டிப்பிங் பாயின்டானது பல ரூபத்தில் மனதனின் உணர்வுகளில்கூட ஊடுருவும். மனதுக்குள் தோன்றும் கலவையான உணர்வுகளுக்கும் டிப்பிங் பாயின்டாக அவனின் காதலியிடம் போட்ட சின்னச் சின்னச் சண்டைகள்தான் காரணம். அந்தச் சமயத்தில் குறிப்பிட்ட சண்டைக்கான காரணத்தைப் பற்றி தோன்றவைக்காமல் முன்னர் நடந்த எல்லா ரக சண்டைகளும் ஞாபகத்துக்கு வருவதுடன், உணர்வுகளோடு விளையாடி விபரீதமான சில முடிவுகளைக்கூட எடுக்க நேரிடும். நிதானமாக யோசித்துப்பார்த்தால், பிரச்னையின் அளவு மிகச் சிரியதாகத்தான் இருக்கும். இப்படி நமக்கே தெரியாமல் ஆட்டிப்படைக்கும் சில விஷயங்களுக்குப் பின்னால், அடிப்படை விஷயமாக ஒரு சின்ன காரணம் மட்டுமே இருக்கும். 

‘ஹஷ் பப்பீஸ்’ என்ற காலணி தயாரிப்பு நிறுவனம் வெற்றியடைய காரணம், இன்று வரை என்னவென்று தெரியவில்லையாம். 1994-ம் ஆண்டில் வெறும் 30,000 ஜோடிகள் மட்டுமே விற்பனையான நிலையில், நிறுவனத்தை இழுத்து மூட முடிவெடுத்தார்கள். ஆனால், 1995-ம் ஆண்டில் 4 லட்சம் ஜோடிகளும், 1996-ம் ஆண்டில் 17 லட்சம் ஜோடிகளும் விற்பனையானதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? ‘பொருளில் ஏதாவது மாற்றம் கொண்டுவந்திருப்பார்கள்' என்றதானே நினைக்கிறீர்கள்? அதுதான் இல்லை. அப்படி எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என நிறுவனத்தின் உரிமையாளரே தெரிவித்துள்ளார். இதை மையமாக வைத்து மால்கம் கிளாட்வெல் எழுதிய புத்தகம்தான் `தி டிப்பிங் பாயின்ட்'.

திடுக்கிடச்செய்யும் பல மாற்றங்களுக்குப் பின்னாலும் சரி, எதிர்பாராமல் மனிதனுக்குக் கிடைக்கும் சில சந்தோஷத் தருணங்களுக்குப் பின்னாலும் சரி, சில டிப்பிங் பாயின்ட்தான் காரணமாக இருக்கும். சில புத்தகங்கள் உங்கள் மனதைவிட்டு நீங்காமல் இடம் பிடித்திருக்கும். அந்தப் பட்டியலில் `டிப்பிங் பாயின்ட்' புத்தகத்துக்கும் ஒரு இடம் இருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close