வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (27/11/2017)

கடைசி தொடர்பு:16:31 (27/11/2017)

பிரமோஸ் ஏவுகணையின் சாதனை... இது இரண்டு தமிழர்கள் பற்றவைத்த நெருப்பு! #BrahMos

சுகோய் போர் விமானம்

அதிக எடைகொண்ட ஓர் ஏவுகணையை, போர் விமானத்திலிருந்து செலுத்தியதன் மூலமாக உலக நாடுகளைத் தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்தியா. பிரமோஸ் ஏவுகணைதான் இந்தப் பெருமையை இந்தியாவுக்கு வாங்கித் தந்திருக்கிறது. இப்பொழுது விமானத்திலிருந்து மட்டுமின்றி நீர், நிலம் என இரண்டிலிருந்தும் ஏவும் திறன்படைத்த உலகின் அதிவேக குரூஸ் ஏவுகணை பிரமோஸ் மட்டும்தான்.

இது இரண்டு தமிழர்கள் விதைத்த விதை

 அப்துல் கலாம் மற்றும் சிவதாணு பிள்ளை

1990 முதல் 1991 வரை அமெரிக்காவுக்கும் ஈராக்குக்கும் இடையே நிகழ்ந்த வளைகுடாப் போரில் குரூஸ் ஏவுகணைகளின் பங்களிப்பு பெரியது. இந்தப் போரில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை அதிகமாக பிரயோகித்தது. அந்தப் போருக்குப் பின்னர் போர் விமானத்தில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகளின் தேவையை உலக நாடுகள் உணர ஆரம்பித்தன. இந்தியாவும் அதுபோன்ற ஓர் ஏவுகணையை உருவாக்க நினைத்தது. 1998-ம் ஆண்டு மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவியல் ஆலோசகராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளராகவும் இருந்த அப்துல் கலாம் மற்றும் ரஷ்யாவின் துணை பாதுகாப்பு அமைச்சரான  N.V. மிகிலாவ் இருவரும் மாஸ்கோவில் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன் விளைவாக தொடங்கப்பட்டதுதான் பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம். இரு நாடுகளும் இணைந்து அதிவேகத்தில் செல்லும் குரூஸ் ஏவுகணையை உருவாக்குவதுதான் அதன் நோக்கம்.

1998-ம் ஆண்டு இதன் முதல் தலைமை நிர்வாகியாக சிவதாணு பிள்ளை நியமிக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு வரை பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக அவர் செயல்பட்டார். இவர் பதவியில் இருந்த காலத்தில்தான் பிரமோஸ் ஏவுகணை செயல்வடிவம் பெற்றது. அதன் காரணமாகவே பிரமோஸ் ஏவுகணையின் தந்தை என சிவதாணு பிள்ளை அறியப்படுகிறார்.


பிரமோஸ் ஏவுகணையின் சாதனை

பிரமோஸ் ஏவுகணை

ஏவுகணைகளில் பல வகைகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக அக்னி ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் வகையைச் சேர்ந்தது. இந்த வகை ஏவுகணைகள் அதிக எடை கொண்ட வெடிபொருள்களை சுமந்துகொண்டு நீண்ட தூரம் செல்லக்கூடியவை. அதேபோல அதிக எடையும் கொண்டவை என்பதால், வானிலிருந்து அவற்றை ஏவுவது சாத்தியமற்ற ஒன்று. அதற்கு மாறாக பிரமோஸ் போன்ற குரூஸ் வகை ஏவுகணைகள் தாழ்வாக பறந்து இலக்கை தாக்கக் கூடியவை. இவற்றை போர் விமானத்தில் இருந்தும் ஏவ முடியும். பிரமோஸ் ஏவுகணையின் எடை 3 டன். இது ஏற்கெனவே நீரிலிருந்தும், தரையிலிருந்தும் ஏவும் திறன் பெற்றது. ராணுவ பயன்பாட்டில் இருக்கிறது

தற்பொழுது அதை வானிலிருந்து ஏவும் திறன் பெற்றதாக மாற்றியமைக்க முதலில் அதன் எடை 2.5 டன்னாக  குறைக்கப்பட்டது. சுகோய்--30MKI போர் விமானத்திலும் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டன. விமானத்திலிருந்து ஏவப்பட்ட பிரமோஸ் சரியாக இலக்கைத் தாக்கியது. முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றது இதன் மிகப்பெரிய சாதனை. 2.5 டன் எடை கொண்ட இந்த ஏவுகணை 300 கிலோ எடை வெடிபொருளை சுமந்துசெல்லும் திறன் படைத்தது. ஒலியைவிட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது. பிரமோஸ் ஏவுகணையின் மூலமாக போர்க்கப்பல்களையும், தரையில் இருக்கும் இலக்குகளையும் தாக்க முடியும்.

எப்பொழுதும் ஓர் ஏவுகணை ஏவப்பட்ட பின்னர் அது இலக்கைத் தாக்குவதற்கு ஒரு வழிகாட்டும் அமைப்பு என்பது தேவை. அப்படி பிரமோஸ் ஏவுகணைக்கு ஜிபிஎஸ், ரஷ்யாவின் நேவிகேஷன் செயற்கைகோளான GLONASS, இந்தியாவின் IRNSS மற்றும் ரேடார் போன்றவை வழிகாட்டுகின்றன. எனவே, இதன் துல்லியம் அதிகம். பிரமோஸ் ஏவுகணை குறைந்தபட்சமாக 3.4 மீ உயரத்தில் பறக்கும். 400 கி.மீ தொலைவு வரை சென்று தாக்கக்கூடிய திறன்கொண்டது. குறைந்த உயரத்தில் அதிகவேகத்தில் செல்வதால் எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல் செல்லும்திறன் படைத்தது.

இதன் அடுத்தத் தலைமுறை ஏவுகணையை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது பிரமோஸ் ஏரோஸ்பேஸ் நிறுவனம். பிரமோஸ்-2 என்று பெயரிடப்பட்டிருக்கும் இது ஒலியைவிட ஏழு மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது.


டிரெண்டிங் @ விகடன்