வெளியிடப்பட்ட நேரம்: 20:25 (28/11/2017)

கடைசி தொடர்பு:20:25 (28/11/2017)

சைஸு 1.2 மிமீ... வயசு அரை பில்லியன்... டார்டிக்ரேட் அதிசயங்கள்! #Tardigrade

டார்டிக்ரேட்

இந்தப் பிரபஞ்சம் ஆச்சர்யத்திற்கும் அதிசயத்திற்கும் குறைவில்லாதது. நமக்கு தெரியாமல் ஏராளமான விடுகதைகளை இந்தப் பூமி தன்னுள்ளேயே புதைத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான உயிரினம் தான் டார்டிக்ரேட் (Tardigrade)
 
இதில் அப்படி என்ன ஆச்சர்யம் என்று கேட்கீறீர்களா? மனிதனால் வாழ முடியாத மிக மோசமான சூழ்நிலைகளையும் இந்த உயிரினம் சமாளித்து வாழ்ந்துவிடும்.

சொல்லப்போனால் மனித இனம் முழுவதும் அழிந்து போகும் பேராபத்து வந்தாலும் இந்த உயிரினம் தப்பி பிழைத்து வாழ்ந்துவிடும் என்பது அறிவியலாளர்களின் கருத்து. 1973 ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சார்ந்த ஜோகன் ஆகஸ்ட் இப்ராஹிம் கோஷி என்பவர்தான் இந்த உயிரினத்தைக் கண்டறிந்து அதற்கு டார்டிக்ரேட் என்ற பெயரையும் சூட்டினார். இதற்கு மெல்ல நகரும் இயல்புடைய உயிரினம் என்பது பொருள். ஆனால் அவரைத் தொடர்ந்து வந்த இத்தாலியைச் சார்ந்த லஸ்சரோ ஸ்பிள்ளன்சி என்பவர் 1976 ஆம் ஆண்டு இந்த உயிரினத்தின் தனித்தன்மையைக் கண்டறிந்தார்.
 
பொதுவாக எல்லா இடங்களிலும் காணப்படும் இந்த டார்டி கிரேட்களுக்கு பிடித்த இடம் வண்டல் படிவுகள் நிறைந்த நீர்நிலையின் அடிப்பகுதிதான். இந்த உயிரினத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது. நுண்ணோக்கியால் மட்டுமே தெளிவாக பார்க்க முடியும். இதன் அளவு 0.05 முதல் 1.2 மி.மீ தான். வெயிலோ, குளிரோ கொஞ்சம் அதிகமானால் நாம் படாதபாடு படும்போது  இவை -200 டிகிரி செல்சியஸ் குளிரையும், 148.9 டிகிரி  செல்சியஸ் வெப்பத்தையும் இயல்பாக கடந்துவிடும் திறனுடையவை.
 
அதோடு மட்டுமல்லாமல் மிகுந்த அழுத்தம் மிக்க பகுதிகளிலும், எதுவும் இல்லா வெற்றிடத்திலும் வாழ்ந்து வரும் இந்த உயிரினங்கள் கதிர்வீச்சாலும் கூட எந்த பாதிப்பும் அடைவதில்லை என்பதுதான் மிகவும் ஆச்சரியத்திற்குரியது. மனித உடல் எதிர்கொள்ளும் x-ray கதிர்களைப் போல 1000 மடங்கு வீரியமிக்க கதிர்களை எதிர்கொள்ளும் திறனுடையவை இவை. ஒருவேளை இந்தக் கதிர்வீச்சு அதன் டி.என்.ஏ களில் ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதனை அந்த உயிரினமே சில நாள்களில் சரி செய்து கொள்ளும்.
 
டார்டி கிரேட்டில் இருக்கும் DSUP என்றழைக்கப்படும் பாதுகாப்பு புரதம் கதிர்வீச்சிலிருந்தும், செல்கள் உலர்தலிலிருந்தும் பாதுகாப்பதால் இவை மனித செல்களை x-ray கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்க பயன்படுத்தப்படலாம். இந்த டார்டி கிரேட் புரதம் செலுத்தப்பட்ட செல்கள் சாதாரண செல்களை விட 40% அதிக எதிர்ப்பு வினையாற்றுவதாக கண்டறியப்பட்டுளன.

டார்டிக்ரேட்


 
இவற்றில் இருக்கும் ஜீனோம்களில் 17.5% விலங்கினத்தை சாராத பிற வகையினத்தை (தாவர, பூஞ்சை, பாக்டீரியா வகையினம்) சார்ந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன. இவை விலங்கினத்தை சார்ந்தவையாக இருப்பினும் இந்த மாறுபட்ட ஜீனோம்க்கு காரணம் "கிடைமட்ட ஜீன் பரிமாற்றம்" என்கிறார்கள்.  
 
இவற்றின் இனப்பெருக்க முறை கொஞ்சம் வித்தியாசமானது. பெரும்பாலான டார்டி கிரேட் வகையினங்கள் புதிய சந்ததிகளை தோற்றுவிக்க துணைகளை தேடுவதில்லை. பார்த்தினோஜெனிக் முறையில் தனி உயிரியே கருமுட்டைகளை உருவாக்கிவிடுகின்றன. இருப்பினும் சில வகையினங்களில் ஆண், பெண் கருத்தரிப்பு முறையும் இருக்கிறது.
 
சில சமயங்களில் இந்த டார்டி கிரேட்கள் கிரிப்டோபையோசிஸ் என்னும் இறப்பு நிலையை அடைந்து விடுவது உண்டு. அப்பொழுது அவை தன் உடலை சுருக்கி நீரற்ற நிலையை அடைந்தாலும், மீண்டும் நீர் கிடைத்தவுடன் தன் இயல்பு நிலையை சில மணி நேரங்களிலே பெற்றுக் கொள்ளுமாம். இவை வாழும் நீரில் ஆக்சிஜனே இல்லா நிலை இருந்தாலும் தன் ஆக்சிஜன் தேவையை கூட குறைத்துக் கொள்ளும்.
 


டிரெண்டிங் @ விகடன்