“நாங்களும் மனுசங்கதானே... நாங்க எங்கப் போறது?” - ஒரு ‘பவாரியா’ பெண்ணின் குரல் | Aren't we Humans? Where do we go? - The Voice of a Bawariya Woman

வெளியிடப்பட்ட நேரம்: 11:05 (28/11/2017)

கடைசி தொடர்பு:11:05 (28/11/2017)

“நாங்களும் மனுசங்கதானே... நாங்க எங்கப் போறது?” - ஒரு ‘பவாரியா’ பெண்ணின் குரல்

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் பக்கத்தில் இருக்கிறது மலுதனா என்கிற கிராமம். கிராமத்தைவிட்டு கொஞ்சம் தூரம் தள்ளி ஒதுக்குப்புறமான இடத்தில் குடிசைப் போட்டிருக்கிறார் அந்தப் பெண். "மனா" என்ற அந்தப் பெண் இப்படியாகச் சொல்கிறார்... 

"கிராமத்திலிருந்து பட்வாரி (கணக்காளர்) வந்தான். என்னை இங்கிருந்து காலி பண்ணி போகச் சொன்னான். இந்தக் கிராமத்து மக்கள் என் முன்னாடி எதுவுமே பேசமாட்டாங்க... ஆனா, என்னைப் பத்தி பஞ்சாயத்துல புகார் தெரிவிச்சிருக்காங்க”

அந்தப் பாலைவன மணலின் வெப்பம் அவர் முகத்தில் அறைவதுகூட அவருக்குப் பெரும் இன்னலைத் தரவில்லை. ஆனால், அந்த ஒடுக்குமுறை அவருக்குப் பெரும் வலியைத் தருகிறது

“நான் பட்வாரிகிட்ட சொல்லிட்டேன்... கிராமத்துக்காரங்க என்னை என்ன வேண்ணாலும் பண்ணட்டும். என்னை சாவடிக்கட்டும். கிணற்றில் தூக்கி போடட்டும். மரத்தில் கட்டி தொங்கவிடட்டும். ஆனா, அவங்க இடத்தில வந்து நான் தங்கிட்டேன்னு அவங்க எந்தப் புகாரும் சொல்லிட முடியாது. அவங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது? எங்களுக்கும் இடம் வேணும். நாங்களும் மனுசங்க தானே... நாங்க எங்கப் போறது?"

ராஜஸ்தான் - பவாரியா - தீரன் அதிகாரம் ஒன்று

ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட "பவாரியா" இனத்தைச் சேர்ந்த மனாவின் இந்தக் கேள்வி ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்டவர்களின் வலியைச் சொல்லும் ஒரு பதிவு. 

சமீபத்தில் வெளியான "தீரன்: அதிகாரம் ஒன்று" திரைப்படம் "பவாரியா" எனும் இனம்குறித்து பெரும் விவாதங்களை நடத்த களம் அமைத்திருக்கிறது. ஒரு பக்கம் அந்தப் படத்தில் காட்டப்பட்டிருக்கும் வழக்குத் தொடர்பான விவாதங்கள்... மற்றொரு பக்கம் பவாரியா இனத்தின் இன்றைய நிலைகுறித்த விவாதங்கள்... இதில் எந்த விவாதமாக இருந்தாலும், முதலில் பவாரியாக்கள் குறித்த வரலாறைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

ராஜஸ்தான் - பவாரியா - தீரன் அதிகாரம் ஒன்று

யார் இந்த பவாரியாக்கள்?

பவாரியாக்கள் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர். அவர்கள் ராஜபுத்திரர்கள் படைப் பிரிவில் மிக முக்கிய வீரர்களாக இருந்தவர்கள். 1527-ம் ஆண்டு, மொகலாய மன்னன் பாபுர் (Babur) ராஜபுத்திரர்கள்மீது போர் தொடுத்து வருகிறான். மிக எளிதாக ராஜபுத்திரர்களை தோற்கடித்து ராஜ்ஜியத்தைக் கைப்பற்றுகிறான். 

"இந்துஸ்தானிகளில் சில வாள்வீரர்கள் இருந்தாலும், ராணுவத் தந்திரங்களிலும், போர் முறைகளிலும் அவர்கள் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கின்றனர்" என இந்தப் போர்குறித்து பாபுர் சொன்னதாக வரலாறு இருக்கிறது. 

இந்தத் தோல்விக்குக் காரணம் பவாரியாக்கள்தான் என நினைத்த மேவார் ராஜா "ராணா சங்கா" அவர்களை காட்டுக்கு விரட்டியடிக்கிறார். அன்றுமுதல் அவர்கள் காட்டு வாழ்க்கையை மேற்கொள்ளத் தொடங்குகிறார்கள். 

1871ல் அன்றைய பிரிட்டீஷ் அரசாங்கம் 200க்கும் மேற்பட்ட இனங்களைக் "குற்றப் பரம்பரை" எனப் பட்டியலிடுகிறார்கள். அதில், வேட்டைச் சமூகமாக வாழ்ந்துகொண்டிருக்கும் பவாரியாக்களும் இருக்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்ததும், குற்றப்பரம்பரை சட்டம் விலக்கப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாக கிட்டத்தட்ட அதே சாயலோடு வருகிறது 1951யின் "The Habitual Offenders Act" எனும் சட்டம். இந்தச் சட்டம் பவாரியாக்கள் உட்பட பல குற்றப்பரம்பரை இனங்களைத் தொடர்ந்து குற்றவாளிகளாகவே பார்க்கும் பார்வையை முற்றிலுமாக நீக்குவதற்கு முட்டுக்கட்டையாகவே இருக்கிறது. 

1972ல் வேட்டைத் தடுப்புச் சட்டம் அமலாக்கப்பட்டதும் பவாரியாக்களின் வாழ்க்கைப் பெரும் கேள்விக்குள்ளானது. அவங்களுடைய மறுவாழ்வுக்கான எந்த வசதிகளையும் அரசு முழுமையாக செய்யவில்லை. இந்தியா முழுக்க கிட்டத்தட்ட 2,35,000 பவாரியாக்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதில் ராஜஸ்தானில் மட்டும் 65,000 பேர் இருக்கிறார்கள். ராஜஸ்தானில் இவர்கள் "பட்டியலினம்" எனச் சொல்லப்படும் "Scheduled Caste" பிரிவின் கீழ் வருகிறார்கள். மேலும், பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களிலும் இவர்கள் பரவியிருக்கிறார்கள். எந்த மாநிலமாக இருந்தாலும் இவர்களின் நிலை ஒன்றாகவே இருக்கிறது. 

காடுகளைவிட்டு வெளியேறிய பவாரியாக்களுக்கு, நாட்டுக்குள் வந்து என்ன செய்வது என்பதில் ஆரம்பக் காலகட்டங்களில் பெரும் குழப்பங்கள் இருந்தன. இயல்பாகவே ஓர் இடத்தில் நிலையாக தங்கும் பழக்கமில்லாததால், தங்களின்  நாடோடி வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். 

ராஜஸ்தான் - பவாரியா - தீரன் அதிகாரம் ஒன்று

2007-ல் ஐநாவைச் சேர்ந்த "தீண்டாமைக்கு எதிரான பிரிவு" இந்தியா முழுக்க ஆய்வுகளை மேற்கொண்டு, "The Habitual Offenders Act" எனும் மிருகத்தனமான அந்தச்  சட்டத்தை திரும்பப் பெறணும். பவாரியாக்கள் போன்ற இனங்களுக்கு மறுவாழ்வு அமைத்துக் கொடுக்க வேண்டும்” என்று சொன்னது. உடனே, நம்முடைய மத்திய அரசாங்கம், "பாலகிருஷ்ணா ரெங்கே கமிஷன்" என்று  ஒரு கமிஷனை அமைத்தது. போலீஸ் உட்பட பல அதிகார அமைப்புகளாலும், ஆதிக்க சாதிகளாலும் பல இனங்கள் பாதிக்கப்படுவதாகவும், அவர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதுபோன்ற 76 பரிந்துரைகளை அது கொடுத்தது. ஆனால், அதுகுறித்து இன்று வரை அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.  

சுதந்திர இந்தியாவில், பவாரியாக்களுக்கு அரசின் எந்த நலத்திட்ட உதவிகளும் முழுமையாக சென்றடையவில்லை என்பதற்கு முக்கியமான எடுத்துக்காட்டாக இதைச் சொல்லலாம்.

ராஜஸ்தான் - பவாரியா - தீரன் அதிகாரம் ஒன்று

மிகவும் கடினமான வாழ்க்கையைத் தங்கள் வரலாறாகக் கொண்டுள்ள பவாரியக்களில், சிலர் திருடர்களாகவும் கொள்ளையர்களாகவும் இருப்பதற்கான அத்தாட்சிகளும் இருக்கின்றன. தீரன் பேசியிருக்கும் வழக்கும் அப்படியான ஒன்றுதான். கடந்த வருடம் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று, "பவாரியாக்கள் இளம்பெண்கள்மீது பெரும் மோகம் கொண்டவர்கள்" என்பது மாதிரியான தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டது. உத்தரப்பிரதேசத்தின் புலாண்ட்ஷரில் (Bulanshahr) ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார். அதில் ஈடுபட்டவர்கள் பவாரியா இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் அந்தப் பத்திரிகை அந்தக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதைப் படித்த பவாரியா இனத்தைச் சேர்ந்த "ஜஸ்பல் சிங் பவாரியா" என்பவர் அந்த நாளிதழுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அதில்,

"பல நூற்றாண்டுகளாக மிக மோசமாக ஒடுக்கப்பட்ட சமூகமாக இருக்கும் நாங்கள், இந்தத் தலைமுறையில்தான் கொஞ்சம் முன்னேறத் தொடங்கியுள்ளோம். ஆனால், இதுபோன்ற சமயத்தில் ஒரு சிலர் செய்த தவறுக்காக எங்கள் மொத்த இனத்தையே குற்றவாளியாக சித்திரிப்பது எங்களை இன்னும் பின்னோக்கி இழுத்துச் சென்றுவிடும்..." என்று வலிமிகுந்த வார்த்தைகளோடு எழுதியிருந்தார்.

அவரின் கடிதத்தைப் படித்த நிருபர், அவரிடம் மன்னிப்புக் கேட்ட சம்பவமும் நடந்துள்ளது. 

ராஜஸ்தான் - பவாரியா - தீரன் அதிகாரம் ஒன்று

படங்கள் உதவி : பியூஷ் கோஸ்வாமி.

எல்லா இனங்களிலும் நல்லவர்களும், கெட்டவர்களும் இருப்பதுபோல், பவாரியாக்களிலும் சிலர் இருக்கலாம். ஆனால், அவர்களை அந்த மொத்த இனத்தின் முகமாக நாம்  நினைத்துக்கொள்வதுதான் பெரும் தவறு. காரணம், பவாரியாக்களின் உண்மை முகம் "மனா" போன்றோர்களும், அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளும்தான்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close