வெளியிடப்பட்ட நேரம்: 07:32 (29/11/2017)

கடைசி தொடர்பு:10:01 (29/11/2017)

ஒரு டம்ளர் பாலின் விலை என்ன? - நெகிழ்த்தும் சிறுவனின் கதை #MotivationStory

`ரக்கம் என்பது ஒரு மொழி. அதை, ஒரு பார்வைக் குறைபாடு உள்ள ஒருவரால் பார்க்க முடியும், செவித்திறன் குறைபாடு உள்ள ஒருவரால் கேட்க முடியும்’ என்கிறார் எழுத்தாளர் மார்க் ட்வைன் (Mark Twain). பயிரின்பால் இரக்கம் கொண்டதால்தான் வள்ளலாரை இன்றைக்கும் நாம் கொண்டாடுகிறோம். ஆதரவற்றோரையெல்லாம் தன் பிள்ளைகளாகக் கருதி கருணை காட்டியதால்தான் அன்னை தெரஸா உலக மக்களின் நினைவுகளில் நீங்காமல் இருக்கிறார். எறும்பிடம்கூட இரக்கம் காட்டுபவரை இறைவன் என்கிறார்கள் சான்றோர். `சரி... யார், எவர் என்று தெரியாமலேயே ஒருவருக்கு மனமாரச் செய்யும் உதவியால் நமக்கு என்ன நன்மை, பிரயோசனம்?’ நிச்சயம் உண்டு என்கிறது காலம். ஒவ்வொரு செயலுக்கும் ஓர் எதிர்வினை உண்டு என்பது, நாம் செய்யும் நல்லவற்றுக்கும் உண்டு. வாழும் காலத்திலேயே அதற்கான பலனை அனுபவித்தவர்களைப் பட்டியல் போட்டுக் காட்டுகிறது வரலாறு. அமெரிக்காவில் இன்றைக்கும் பிரபலமாக இருக்கும் ஒரு கதை அந்த உண்மையைத்தான் வெகு அழுத்தமாகச் சொல்கிறது.

சிறுவனின் கதை

அது ஒரு மாலை நேரம். அந்தச் சிறுவனுக்கு பன்னிரண்டு வயதிருக்கலாம். பள்ளி முடிந்ததும் வீடு திரும்பிவிட மாட்டான். அவனுக்கு வேலை இருந்தது. பள்ளிக் கட்டணம் செலுத்த வேண்டும்; பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வாங்க வேண்டும். அதற்குப் பணம் வேண்டும். அதற்காக பகுதி நேரமாக வேலை செய்தே ஆக வேண்டும். வேலை... வீடு வீடாகப் போய் ஏதாவது ஒரு பொருளை விற்கும் வேலை. மாலை செய்தித்தாள், பால் புட்டி, ரொட்டி, கேக்குகள்... என விற்பதற்கு பல பொருள்கள் இருந்தன. வீட்டிலேயே இருக்கும் முதியோர், பெண்மணிகள் என அவற்றை வாங்குவதற்கும் ஆள்கள் இருந்தார்கள். சில நேரங்களில் வியாபாரம் சூடுபிடிக்கும். கொண்டுபோன பொருள்கள் எல்லாம் விற்றுப் போகும். பொருள்களை விற்றதற்கு ஈடாக அவனுக்குக் கணிசமாகப் பணமும் கிடைக்கும். அன்றைக்கு ஏனோ விற்பனை வெகு சுமார்.

காலையில் சாப்பிட்டிருந்தான். பசி, வயிற்றைக் கிள்ளியது. சூரியன் வெகு வேகமாக மறையத் தொடங்கியிருந்த நேரம் அது. அவன் பையிலும் பெரிய தொகை எதுவும் இல்லை. சில்லறைக் காசுகள்தான் இருந்தன. அதைக் கொண்டு அவனால் வயிறார எதையும் வாங்கிச் சாப்பிட முடியாது. என்ன செய்யலாம்? அவன் ஒரு முடிவுக்கு வந்தான். `அடுத்து நுழைகிற வீட்டில் எதையும் விற்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. தயங்காமல், வெட்கப்படாமல் சாப்பிடுவதற்கு எதையாவது கேட்டு வாங்கிவிட வேண்டும்.’

உன்னை அறிந்தால்

 

அடுத்த வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். பல நேரங்களில் நம் எதிர்பார்ப்பு ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். அந்தச் சிறுவன் விஷயத்தில் அன்றைக்கு அதுதான் நடந்தது. அந்த வீட்டில் ஒரு வயதான மூதாட்டியை அவன் எதிர்பார்த்திருந்தான். கதவைத் திறந்ததோ ஓர் இளம் பெண். அழகான இளம் பெண். அவளைப் பார்த்ததும் அவனுக்கு கூச்சம் வந்துவிட்டது.

பால்

`சாப்பிட ஏதாவது கிடைக்குமா?’ என்று கேட்பதற்கு பதிலாக, ``குடிக்கக் கொஞ்சம் தண்ணி வேண்டும்’’ என்றான்.

இளம்பெண், சிறுவனைப் பார்த்தாள். அவன் முகம் வாடியிருப்பது அவளுக்குத் தெரிந்தது. அவன் அகோரப்பசியில் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டாள்.

``உள்ளே வா, இப்படி உட்கார்’’ என்று ஒரு நாற்காலியைக் காட்டினாள். சமையலறைக்குப் போனவள், கையில் ஒரு பெரிய டம்ளருடன் திரும்பி வந்தாள். அது நிறையப் பால் இருந்தது. அதை அவனிடம் நீட்டினாள். அவனும் வாங்கிக்கொண்டான். மெதுவாக பாலைக் குடித்து முடித்தான்.

``இந்தப் பாலுக்கு நான் எவ்வளவு தர வேண்டும்?’’ என்று கேட்டான்.

``இதற்கு நீ காசு எதுவும் தர வேண்டாம். `இரக்கப்பட்டு செய்யும் ஒரு காரியத்துக்குக் காசு வாங்கக் கூடாது’ என்று என் அம்மா சொல்லித் தந்திருக்கிறார்’’ என்றாள் அந்தப் பெண்.

``அப்படியா... நன்றி’’ என்று சொல்லிவிட்டு அந்தச் சிறுவன் திரும்பிப் போனான்.

***

சில வருடங்கள் கழிந்தன. அந்த இளம்பெண் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருந்தாள். அவள் வளர்ந்ததுபோல அவள் உடலில் ஒரு நோயும் வளர்ந்திருந்ததுதான் வருத்தப்படக்கூடிய விஷயம். ஊரில் இருந்த மருத்துவர்களால் அந்தப் பெண்ணுக்கு வந்தது என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அருகிலிருக்கும் நகரின் பெரிய மருத்துவமனைக்கு அவளைக் கொண்டுபோகச் சொல்லிப் பரிந்துரைத்தார்கள்.

படுக்கையில் இளம்பெண்

அங்கே அவளைப் பரிசோதித்த டாக்டர்கள், கன்சல்டேஷனுக்காக டாக்டர் ஹோவர்டு கெல்லி (Howard Kelly) என்பவரிடம் அனுப்பிவைத்தார்கள். அந்தப் பெண் அவருடைய இடத்துக்கு வந்தாள். டாக்டரைப் பார்ப்பதற்காகக் காத்திருந்தாள். அவளுடைய மெடிக்கல் ரிப்போர்ட்டுகள் அடங்கிய ஃபைல் டாக்டரிடம் போனது. ஃபைலைப் பிரித்தவர், அந்தப் பெண்ணின் பெயரைப் பார்த்தார். உடனே எழுந்து, கதவைத் திறந்து வெளியே அமர்ந்திருந்த பெண்ணைப் பார்த்தார். அவளை உள்ளே வரச் சொன்னார்.

அவளுடைய ரிப்போர்ட்டுகளையெல்லாம் ஒன்றுவிடாமல் படித்தார். அவளைப் பரிசோதித்தார். அவளை உள்நோயாளியாக உடனே அனுமதிக்கச் சொல்லி நர்ஸிடம் சொன்னார். அந்தப் பெண்ணை சிறப்பு கவனம் எடுத்துக் கவனித்துக்கொண்டார். டாக்டர் ஹோவர்டு கெல்லியின் முயற்சி வீண்போகவில்லை. இரண்டு மாதங்களிலேயே அந்தப் பெண்ணின் நோயைக் கண்டுபிடித்து, சரிசெய்துவிட்டார்.

அந்தப் பெண் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகும் நாள் நெருங்கியது. அவள் உடலளவில் தேறிவிட்டாளே தவிர, மனதளவில் கொஞ்சம் சோர்ந்து போயிருந்தாள். அவள் சிகிச்சை பெற்றது பெரிய மருத்துவமனையில்... அவளுக்கு சிகிச்சை கொடுத்தவர் புகழ்பெற்ற ஒரு டாக்டர். மருத்துவ சிகிச்சைகள், மருந்து, மாத்திரைகளுக்காக எவ்வளவு கொடுக்க வேண்டியிருக்குமோ என அவள் பயந்துபோயிருந்தாள். அவளுக்குச் செய்யப்பட்ட சிகிச்சைகளுக்கான பில்லை, டாக்டரின் அப்ரூவலுக்காக அனுப்பிவைத்தது மருத்துவமனை நிர்வாகம்.

டாக்டர் ஹோவர்டு கெல்லி பில்லைப் பார்த்தார். அதன் கீழே ஓரத்தில் இப்படி எழுதினார். `இந்த பில்லுக்கான முழுத்தொகையும் செலுத்தப்பட்டுவிட்டது... ஒரு டம்ளர் பாலுடன்!’ அதற்குக் கீழே `ஹோவர்டு கெல்லி’ என்கிற தன் கையெழுத்தையும் போட்டிருந்தார்.

ஹாவர்டு கெல்லி

குறிப்பு: அமெரிக்காவில் புகழ்பெற்ற `Glass of Milk' என்ற இந்தக் கதையைக் கட்டுக்கதை; ஹோவர்டு கெல்லர் இளம் வயதில் வேலை எதுவும் செய்யவில்லை; அப்படி ஒரு பெண் இவருக்கு ஒரு டம்ளர் பாலெல்லாம் கொடுக்கவில்லை... என்றெல்லாம் வாதிடுபவர்களும் உண்டு. அது, உண்மைச் சம்பவமோ, கதையோ... இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் டாக்டரைப் போன்றவர்களும், பசியோடு வரும் சிறுவனுக்கு உணவிடுபவர்களும் உலகெங்கிலும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்