வெளியிடப்பட்ட நேரம்: 09:40 (29/11/2017)

கடைசி தொடர்பு:10:48 (29/11/2017)

`உங்கள் கார் கீலெஸ் என்ட்ரி மாடலா' அரை நிமிடத்தில் உங்கள் கார் திருடப்படலாம்!

எத்தனையோ கார் திருட்டுச் சம்பவங்களை யாராவது சொல்லிக் கேட்டிருப்போம், தினசரி நாளிதழ்களில் படித்திருப்போம். ஆனால், இப்பொழுது நீங்கள் படிக்கப்போகும் கார் திருட்டுச் சம்பவத்தை நிச்சயம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்தச் சம்பவம் நடந்தது இங்கிலாந்தில் இருக்கும் ஒரு மாகாணமான மேற்கு மிட்லான்டின் (West Midlands) சொலிஹல் நகரத்தில். அந்த மாகாண காவல்துறை வெளியிட்டிருக்கும் ஒரு கார் திருட்டுச் சம்பவத்தின் வீடியோ காட்சி கார் வைத்திருக்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

 car

கார் திருட்டு என்றால் காரின் கதவை உடைத்தோ, அல்லது கள்ளச்சாவி உபயோகித்து திருடுவது என்பது வழக்கமான ஒன்று. ஆனால் இந்த வீடியோவில் திருடர்கள் செய்வது வேற லெவல் திருட்டு. கடந்த செப்டம்பர் மாதம் 25-ம் தேதி நடைபெற்ற இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது மூன்று நபர்கள். மூன்று பேரில் ஒருவன் திருடர்கள் வந்த காரை ஒட்டிவந்தவன். அந்த வகையில் பார்த்தால் இந்தத் திருட்டில் ஈடுபட்டது வெறும் இரண்டு நபர்கள்தான். திருடப்பட்டது மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பாதுகாப்பு வசதிகள் அதிகம் இருக்கும் விலை உயந்த கார். வீடியோவில் தென்படும் நபர்கள் இருவரும் ஒரு காரிலிருந்து இறங்குகிறார்கள். அவர்களின் கையில் ஒரு கருவியை வைத்திருக்கிறார்கள். ஒருவன் காரின் அருகில் நின்றுகொள்ள மற்றொருவன் வீட்டுக் கதவின் அருகில் அந்தக் கருவியை கொண்டு செல்கிறான். அடுத்த சில நொடிகளில் கார் அன்லாக் செய்யப்பட்டதன் அறிகுறியாக விளக்குகள் ஒளிர்கின்றன. ஒருவன் காரின் கதவைத் திறந்து உள்ளே சென்று காரை ஸ்டார்ட் செய்த அடுத்த சில நொடிகளில் இரண்டு கார்களும் கேமராவின் கண்களில் இருந்து மறைகின்றன. அவர்கள் காரில் இருந்து இறங்கும்பொழுது மணி  01:01:36 கார் அன்லாக் ஆகும் பொழுது மணி 01:02:02 இரண்டுக்கும் இடைப்பட்ட நேரம் 26 நொடிகள். அரை நிமிடத்துக்கும் குறைவான நேரத்தில் காரை திருடுவது சாத்தியமான ஒன்றா?.

 

திருடர்களின் கையில் இருந்த அந்தக் கருவிதான் இந்த கேள்விக்கான விடை. காரை திருடுவதற்கு அவர்கள் பயன்படுத்தியது "ரிலே பாக்ஸ்" (Relay Box) என்னும் கருவியை. இதனைப் பயன்படுத்தி  "கீலெஸ்" கார்களை ஒரு நிமிடத்துக்குள் அன்லாக் செய்துவிட முடியும். கீலெஸ் கார்களில் சாவிக்குப் பதிலாக ஒரு ரிமோட் கொடுக்கப்பட்டிருக்கும். ரிமோட்டில் இருக்கும் ஒரு எலெக்ட்ரானிக் சிப்பில் கார் தொடர்பான தகவல்கள் பதியப்பட்டிருக்கும். ரிமோட்டை இயக்குவதன் மூலமாக காரை லாக் அல்லது அன்லாக் செய்யவோ இயக்கவோ முடியும். காருக்கும், ரிமோட்டுக்கும் உள்ள தொடர்பு என்பது வயர்லெஸ் முறையில் நடைபெறும். ஒவ்வொரு ரிமோட்டும் அந்தந்த காருக்கான தனித்துவமான  சிக்னல்களை உருவாக்கும். ஒரு ரிமோட்டின் சிக்னலை வேறொரு காருக்குப் பயன்படுத்த முடியாது. ஆனால், இதுபோன்ற திருட்டில் ஈடுபடுபவர்கள் ரிலே பாக்ஸ்களைப் பயன்படுத்தி அந்தக் காருக்கான சிக்னல்களை உருவாக்கிவிடுகிறார்கள் .

இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் இரண்டு ரிலே பாக்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு ரிலே பாக்ஸ் காரின் அருகே இருக்க மற்றொரு கருவி வீட்டுக்குள் இருந்து வெளியாகும் சிக்னலை கண்டறிய பயன்படுகிறது. கிடைத்த அந்த சிக்னலை காரின் அருகே இருக்கும் ரிலே பாக்ஸுக்கு அனுப்பியவுடன் கார் அன்லாக் செய்யப்படுகிறது. இதுபோன்ற கார் திருட்டுகள் ஏற்கெனவே இருந்தாலும் அவற்றை செயல்படுத்துவதற்கான நேரம் அதிகமாக இருந்த காரணத்தால் குறைவாகவே நிகழ்ந்துவந்தன. தற்பொழுது நவீனமாக்கப்பட்டிருக்கும் புதிய கருவிகள் நேரத்தைக் குறைப்பதால் கார் திருட்டுகளும் அதிகரித்திருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள். கார் திருடர்களின் இலக்கு விலை உயர்ந்த கார்கள்தான், அதுபோன்ற கார்களில்தான் "கீலெஸ்" வசதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்பது அவர்களுக்கு ஒரு வகையில் சாதகமாகிவிடுகிறது.

கார் லாக்

"தாட்செம் அங்கீகாரம் பெற்ற "ஸ்டீயரிங் லாக்" மற்றும் காரின் இருப்பிடத்தைக் கண்டறியும் கருவியைப் பொருத்துமாறும் மக்களை அறிவுறுத்தியுள்ளோம். அதேவேளையில் காருக்கான பாதுகாப்பு மென்பொருளை உடனுக்குடன் அப்டேட் செய்யும்படி டீலர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்" என்கிறார் மேற்கு மிட்லான்ட் காவல்துறையைச் சேர்ந்த மார்க் சில்வெஸ்டர் எனும் அதிகாரி. தொழில்நுட்பங்கள் ஒரு வேலையை எளிதாக்கினாலும் அவற்றில் இருக்கும் சிக்கல்கள் ஏராளம் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்திக்கொண்டேதான் இருக்கின்றன.