வெளியிடப்பட்ட நேரம்: 07:23 (30/11/2017)

கடைசி தொடர்பு:08:34 (30/11/2017)

கைவிரித்த பள்ளிகள்... கைகொடுத்த யூடியூப்! - ஒரு பெண்ணின் சாதனைக் கதை #MotivationStory

கதை

`ருபோதும் பின்வாங்காதீர்கள். எதையும் முயற்சி செய்து பாருங்கள். உங்களால் எந்த அளவுக்கு முடியுமோ அத்தனையையும் செய்து, நீங்கள் நினைத்ததை அடையப் பாருங்கள். மன உறுதி மட்டும்தான் எதையும் சாதிக்கும் ஆற்றலைத் தரும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார் அமெரிக்க நாவலாசிரியர் சார்லஸ் சிம்மன்ஸ் (Charles Simmons). சரி, லட்சியத்தை, இலக்கை அடைய முயற்சிக்கலாம்தான். ஆனால், சாதனைகளுக்கு அல்ல... சில வேலைகளுக்குக்கூட அடிப்படையான திறன்கள் நமக்குத் தேவையாக இருக்கின்றன! கையிருந்தால்தான் வரைய முடியும்; கால்களிருந்தால்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள முடியும். பறப்பதற்கு பறவைக்கு சிறகு எவ்வளவு அவசியமோ அப்படி, நம் உடல் உறுப்புகள் ஒத்துழைத்தால்தான் சில பணிகளைக்கூட நம்மால் செய்ய முடியும். இந்த ஆதாரம் இல்லாதவர்கள் படும் இன்னல்கள் சொல்லில் அடங்காதவை. அந்த நிலையிலும்கூட இலக்கை நோக்கி விடா முயற்சியோடு விரைகிறவர்களைப் பார்த்து நாம் ஆச்சர்யப்படுகிறோம், `சபாஷ்...’ என மனதாரப் பாராட்டுகிறோம். அப்படிப் பாராட்டப்படவேண்டிய ஒருவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஸ்ஸிகா ரூயிஸ் (Jessica Ruiz). அவர் கதை கொஞ்சம் கலங்கவைப்பது, வியக்கவும் வைப்பது!

ஜெசிக்கா

இப்போது அமெரிக்கா, பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள, பிலடெல்பியாவில் வசிக்கிறார் ஜெஸ்ஸிகா ரூயிஸ். அவர் ஒரு ஒப்பனைக் கலைஞர். அவரிடம் மேக்கப் செய்துகொள்ளப் போனால், மற்ற ஒப்பனைக் கலைஞர்களிடம் கிடைக்காத ஓர் அனுபவம் கிடைக்கும். மற்றவர்கள், உங்கள் முகம், புருவம், கண் இமைகள் எல்லாவற்றையும் ஒப்பனை செய்ய தங்கள் இரு கைகளையும் பயன்படுத்துவார்கள். ஜெஸ்ஸிகா, தன் வாயில் பிரஷ்ஷைக் கவ்விப் பிடித்துக்கொண்டு, அதைக்கொண்டு மேக்கப் போட்டுவிட ஆரம்பிப்பார். நம்ப முடியவில்லையா? இதுதான் உண்மை. முழுநேர ஒப்பனைக் கலைஞரான ஜெஸ்ஸிகா, திருமணம், ஃபேஷன் ஷோ... என எந்த நிகழ்வாக இருந்தாலும், இந்த முறையைத்தான் பயன்படுத்துவார். காரணம், பிறக்கும்போதே அவருக்கிருந்த ஒரு உடல்நலப் பிரச்னை... `ஆர்த்ரோகிரிபோசிஸ்’ (Arthrogryposis) என்று மருத்துவத்தில் இந்த நோயைக் குறிப்பிடுவார்கள். இதன் காரணமாக, பிறவியிலேயே அவரால் தன் கைகளை இயக்கவோ, அசைக்கவோ முடியாது. ஆனால், சிறு வயதிலிருந்தே ஒப்பனைக் கலைஞராக வேண்டும் என்கிற தீராத வேட்கை அவருக்கு இருந்தது.

பள்ளியில் படிக்கும்போதே சக மாணவ, மாணவிகளின் சீண்டல் தாங்க முடியாததாக இருந்தது. இளைத்தவன் என்றாலே சிலருக்கு பரிகாசம் செய்யத் தோன்றும். அப்படி சிலர் ஜெஸ்ஸிகா படித்த பள்ளியில் இருந்தார்கள். ஒரு கட்டத்தில் தன் இயலாமையைக் கேலி செய்வதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. யோசித்து யோசித்து அவர்களை எதிர்கொள்ள ஒரு முடிவுக்கு வந்தார். ஒருநாள் அவர்கள் வரும் நேரத்தில், வகுப்பறையில் தன் இடத்தில் அமர்ந்திருந்தார் ஜெஸ்ஸிகா. அவரிடம் ஒரு குட்டி மேக்கப் பாக்ஸ் இருந்தது. இடது கைக்கருகில் மஸ்காரா, ஐலைனர் இரண்டையும் வைத்துக்கொண்டு, தன் தலையைத் தாழ்த்தி, முகத்தை அவற்றுக்கு அருகே கொண்டு போய் தனக்குத் தானே புருவங்களிலும், கண்களிலும் மேக்கப் போட்டுக்கொண்டார். இதைப் பார்த்ததும் அவர்கள் அசந்து போனார்கள்.

அவர்களில் ஒரு பெண் ஜெஸ்ஸிகாவின் அருகே வந்து இப்படிச் சொன்னார்... ``இப்போ உன் முகம் பளிச்னு ரொம்ப அழகா இருக்கு.’’ அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அந்த நண்பர்களுக்கு, ஜெஸ்ஸிகாவின் மேல் இருந்த பார்வை மாறியது. இதனால் முழுப் பிரச்னையும் தீர்ந்துவிடவில்லை என்றாலும், ஜெஸ்ஸிகாவுக்கு வாழ்க்கையில் புதிதாக ஒரு ஜன்னல் திறந்தது; மேக்கப்பின் மேல் ஆர்வம் கூடியது.

கதை

ஜெஸ்ஸிகா பத்தாவது கிரேடு படிக்கும்போது இன்னொரு சம்பவம் நடந்தது. அவருடைய தோழி ஒருவர் பட்டமளிப்பு (அமெரிக்காவில் இதையும் `Graduation' என்றுதான் குறிப்பிடுகிறார்கள்) தினத்தன்று வந்தார். ``எனக்கு மேக்கப் போட்டுவிடேன்’’ என்றார். அந்தத் துறையில் அதீத ஈடுபாடு இருந்தாலும், ஜெஸ்ஸிகா அப்போது மேக்கப்பில் ஃபவுண்டேஷன் போடுவதற்கெல்லாம் பழகியிருக்கவில்லை. கண்கள், உதடுகளுக்கு மட்டும் மேக்கப் போடுவார். அதை அந்தப் பெண்ணுக்குச் செய்துவிட்டார். விழா முடிந்தது. அந்தப் பெண்ணின் தாய் ஜெஸ்ஸிகாவிடம் வந்தார். ``இன்னிக்கி என் பொண்ணு பார்க்கறதுக்கு ரொம்ப அழகா இருக்காம்மா. ரொம்ப தேங்க்ஸ்’’ என்று கைகொடுத்துவிட்டுப் போனார். உச்சி குளிர்ந்துபோனது ஜெஸ்ஸிகாவுக்கு.

எந்தத் துறையில் சாதிக்க வேண்டுமென்றாலும், அதற்கான அடிப்படைகளை முறையாகக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். படிப்பு முடிந்ததும், பல மேக்கப் ஸ்கூல்களுக்கு விண்ணப்பம் போட்டார் ஜெஸ்ஸிகா. எல்லா பள்ளிகளிலும் அவர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. `வாயில பிரஷ்ஷைப் பிடிச்சுக்கிட்டு மேக்கப் போடுறதா? அது சுகாதாரக் கேடு’ என்றன சில பள்ளிகள். ஒரு பள்ளியில் அவரை ஏற்றுக்கொள்ளத் தயாரானது... ஒரு நிபந்தனையோடு! மேக்கப் பயிற்சிக்கு `அவருடைய மாடலை அவரே அழைத்து வர வேண்டும்... தினமும்.’ அதுவும் சாத்தியப்படவில்லை. ஒரு பள்ளியில் அவர் கண்ணுக்கு எதிரிலேயே விண்ணப்பத்தைக் கிழித்துப் போட்டார்கள். உடன் வந்திருந்த அவர் சகோதரியைப் பார்த்து, `உன் தங்கச்சியை வேணும்னா சேர்த்துக்குறோம்’ என்றார்கள்.

18 வயது... அந்த வயதில் மிகப் பெரும் மனஅழுத்தத்துக்கு ஆளானார் ஜெஸ்ஸிகா. மேக்கப் உலகில் சாதிக்க வேண்டும் என்கிற வேட்கை அப்படியே கைநழுவிப் போய்விடுமோ என்கிற வேதனை அவரை அரித்தெடுத்தது. தானே மேக்கப் போடக் கற்றுக்கொள்வது என முடிவு செய்தார் ஜெஸ்ஸிகா. ஆனால், எப்படி? அதுதான் அவருக்குப் புரியாத புதிராக இருந்தது. வாயால் மேக்கப் போட சொல்லித் தருவதற்கு யாராவது ஆசிரியர் வருவாரா என்ன? அப்போதுதான் யூடியூபில் ஒரு மேக்கப் நிகழ்ச்சியைப் பார்த்தார். தேடத் தேட மேக்கப் கற்றுக்கொடுக்கும் பல வீடியோக்கள் அதில் கொட்டிக் கிடந்தன. அவற்றைப் பார்த்துப் பார்த்து கற்றுக்கொண்டார். கற்றுக்கொண்டதை தன் தங்கைக்குச் செய்து அழகு பார்த்தார். யூடியூபைச் செல்லமாக, `யூடியூப் பல்கலைக்கழகம்’ என்றுதான் அழைக்கிறார் ஜெஸ்ஸிகா. ஒருகட்டத்தில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மேக்கப்பிலிருந்து திருமணத்துக்கான மேக்கப் வரை அனைத்திலும் ஜெஸ்ஸிகா கில்லியாகிவிட்டார்.

விருப்பப்படுபவர்களுக்கு ஆரம்பத்தில் இலவசமாக மேக்கப் போட்டார். வாய்மொழியாக அவருடைய திறமை அக்கம்பக்கத்தில் பரவியது. வாடிக்கையாளர்கள் சேர ஆரம்பித்தார்கள். புகழ் பரவ, தன் ஃபேஷன் ஷோவில் பங்கேற்பவர்களுக்கு மேக்கப் போடும் அளவுக்கு முன்னேறிவிட்டார் ஜெஸ்ஸிகா. `அவமானம், பள்ளிகளின் நிராகரிப்பு அனைத்தையும் தாண்டிய வெற்றி நிகழ்வு அது’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார் அவர்.

ஜெஸ்ஸிகா ரூயிஸ்

வாயால், ஒருவருக்கு மேக்கப் போட்டுவிடுவது அத்தனை சாதாரண காரியமல்ல. வாடிக்கையாளருக்கும் அவருக்கும் வெறும் 3 இன்ச் இடைவெளிதான் இருக்கும். அவர் மனம் கோணாமல், சிறப்பாக ஒப்பனை செய்துவிட வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை அவர் தேடி வருவார். சவாலான, போட்டிகள் நிறைந்த இந்தத் துறையில், தன் மன உறுதியையும் திறமையையும் மட்டுமே நம்பி இறங்கியிருக்கிறார் ஜெஸ்ஸிகா. அவருடைய ஊக்கத்துக்கு மனமார ஒரு வாழ்த்துச் சொல்லலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்