வெளியிடப்பட்ட நேரம்: 09:24 (30/11/2017)

கடைசி தொடர்பு:11:04 (30/11/2017)

பெற்றோர்களால் குழந்தைகளுக்கு நேரும் ஆபத்துகள் இவைதாம்! #GoodParenting

லைப்பைப் படித்ததும், 'பெத்தவங்களாலேயே பிள்ளைங்களுக்கு ஆபத்து வருமா' என்ற கேள்வி எழலாம். ஆனால், இது உண்மை. பெற்றவர்கள், அவர்கள் அறியாமலேயே செய்கிற சில தவறுகளால், பிள்ளைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். அவை என்னென்ன தவறுகள் என்று தெரிந்துகொண்டால் அவற்றைத் தவிர்க்கலாமே... 

குழந்தைகள்

சாலையில் செல்லும்போது வருகிற ஆபத்துகள்... 

குழந்தைகளுடன் நடந்துபோகையில், அவர்கள் எப்போதும் நம் வலது கையைப் பிடித்துக்கொண்டே நடக்கப் பிரியப்படுவார்கள். நாமும் அவர்கள் விருப்பத்துக்கு விடுவோம். அது சரியல்ல. ஏன் தெரியுமா? நம்முடைய வலது பக்கம், எப்போதும் வண்டிகள் போகும் சாலையின் பக்கமாக இருக்கும். அந்தக் கையால் பிள்ளை பிடித்துக்கொண்டு நடந்தால், முட்டுச்சந்தில்கூட பைக் ரேஸாக வண்டியை முறுக்கும் பையன்களால் ஆபத்து ஏற்படும். 

டூ வீலரில் செல்லும்போது... ஸ்கூலுக்கு லேட்டாகி, பிள்ளையைச் சரியான நேரத்தில் விடவேண்டும் என ஆக்ஸிலேட்டரை முறுக்குவார்கள் சில அப்பாக்கள். பெரும்பாலும் ஸ்கூல்களுக்கு முன்னால் நடக்கும் விபத்துகளுக்கு இந்த வகை அப்பாக்கள்தான் காரணம். இதுபோன்ற சமயங்களில் டூ வீலரில் ஹெல்மெட் போன்ற எந்தப் பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பயணிக்கும் குழந்தையின் நிலை ஆபத்தை உண்டாக்கும். 

காரில் போகும்போது... சீட் பெல்ட் போடாமல் குழந்தைகளை அழைத்துச் செல்லுதல், பத்தே நிமிடத்தில் ஷாப்பிங்கை முடித்துவிடலாம் என்று குழந்தையை காரிலேயே விட்டுச்செல்லுதல் இரண்டுமே குழந்தைக்கு பேராபத்தை ஏற்படுத்தலாம்... ஜாக்கிரதை. முன்னதில் விபத்து ஏற்பட்டாலும், சிறிய காயத்துடன் குழந்தைகள் தப்பிவிடலாம். பின்னதில், குழந்தையை காரில் விட்டுச்செல்கிற நேரத்தில், அவை காரின் ஏ.சி.யை அணைத்துவிட்டாலோ, ஏ.சி.யில் ஏதேனும் பிரச்னை வந்தாலோ, காருக்குள் சூடு அதிகமாகி, குழந்தை மூச்சுத்திணறி இறக்க நேரிடலாம். 

பிள்ளையை மடியில் வைத்தபடி கார் ஓட்டுவீர்களா? 
ஒரு வயதுக்குள் இருக்கும் குழந்தைகள், அப்பா கார் ஓட்டும்போது, அவர் மடியில் உட்கார்ந்து ஸ்டீரியங்கை தானும் சுழட்ட ஆசைப்படும். நாமும் ஆசையாக அனுமதிப்போம். இதனால் வரும் ஆபத்து தெரியுமா? காரை சடன் பிரேக் போடும்போது, குழந்தையின் பிஞ்சு நெஞ்சில் காரின் ஸ்டீரியங் வேகமாக இடிக்க நேரிடலாம். எனவே, இதை முற்றிலும் தவிர்க்கவும். 

தண்ணீரில் மூழ்குதல்... 
மொட்டைமாடியில் மூடாமல்விட்ட தண்ணீர் டேங்குகளை, அதற்கென இருக்கிற படிகளில் கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகள் ஏறி எட்டிப் பார்ப்பார்கள். வீட்டு வாசலில் இருக்கிற தண்ணீர் சம்ப்புகளின் மூடிகள் உடைந்துபோயிருந்தாலும் ஆபத்துதான். இவையே வீட்டுக்குள் தண்ணீரில் குழந்தைகள் மூழ்கி இறப்பற்கான காரணங்களாக உள்ளன. மொட்டைமாடிக்கு கேட் போடுவதும், தண்ணீர் சம்ப்புகளின் மூடி உடைந்துவிட்டால் மாற்றுவதும் பெற்றோர் உடனே செய்யவேண்டியவை. 

முன்பக்க கதவுகொண்ட வாஷிங்மெஷினா உங்கள் வீட்டில்? 
சமீபமாக மறுபடியும் முன்பக்க கதவுகொண்ட வாஷிங்மெஷின் வந்துவிட்டது. இது வித்தியாசமாக இருப்பதால், பொடிசுகள் திறந்து பார்க்க முயல்வது, உள்ளே நுழையப் பார்ப்பது என்று வேண்டாத வேலைகள் செய்கிறார்கள். இதற்கு சைல்டு லாக் இருக்கிறது என்றாலும், அதைப் போட நீங்கள் மறந்துவிட்டால் ஆபத்துதான். 

குழந்தைகள்

குட்டிக் குட்டி பேட்டரிகள்... 
முன்பெல்லாம் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளில் பெரிய சைஸ் பேட்டரிகள்தான் இருக்கும். இப்போதோ குட்டி குட்டி பட்டன் பேட்டரி பொம்மைகள் வந்துவிட்டன. இந்தப் பொம்மைகளை வாங்குவதையே தவிர்ப்பது நல்லது. அல்லது, இந்தப் பொம்மைகள் உடைந்துவிடும்போது, அந்த பட்டன் பேட்டரியை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். 

சமையல்கட்டை கிளாஸ் ரூம் ஆக்காதீர்கள் 
இன்றைய குழந்தைகள் எல்லா விஷயங்களையும் கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். சமையலும் இதற்கு விதிவிலக்கில்லை. நீங்கள் சமைக்கும்போது, பிள்ளைகள் சமையல் மேடையில் ஏறி, நானும் சமைக்கிறேன் என்று அடம்பிடிக்கும். குழந்தை ஆர்வமாகக் கேட்கிறதே என்று விளையாட்டாகச் சொல்லிக்கொடுப்போம். இது, நம் கண் முன்னால் நடப்பதோடு நிற்குமா? நாம் இல்லாத நேரத்தில் நடந்தால்... எனவே, கிச்சனுக்குள் அனுமதிக்க வேண்டாம். 

குழந்தைகள்

அப்பாக்களே இது உங்களுக்கு... நீங்கள் ஷேவ் செய்யும்போது, குழந்தை கேட்டால், உறுதியாக மறுக்கவும். விளையாட்டாகவும் செய்து காட்டாதீர்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் பிள்ளைகள் முயற்சி செய்யலாம். முடிந்தவரை அவர்கள் பார்க்காத வகையில் ஷேவ் செய்துகொள்ளுங்கள். 

அம்மாக்களே இது உங்களுக்கு... குழந்தைகள் கைக்கு எட்டும் உயரத்தில் உங்கள் மேக்கப் ஐட்டங்களை வைக்காதீர்கள். அவற்றில் உள்ள கெமிக்கல்கள், தரம், காலாவதி தேதி என்று நிறையப் பிரச்னைகள் இருக்கின்றன கவனம்.

 

பெற்றால் மட்டும் பெற்றவர்களாகிவிட முடியாது. குழந்தைகளை நல்ல முறையில் ஆரோக்கியமாக வளர்த்தெடுப்பதே பெற்றவர்களுக்கான அடையாளம். குழந்தையைப் பாதுகாப்போம். பெற்றவர்கள் மூலம் ஏற்படும் விபத்துகளைத் தவிர்ப்போம்.


டிரெண்டிங் @ விகடன்