வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (30/11/2017)

கடைசி தொடர்பு:11:22 (15/02/2018)

"அக்கா... என்று ஆரம்பித்து ஆபாசமாகத் திட்டியவனைப் பார்த்து பரிதாபம்தான் வந்துச்சு!" ஜோதிமணி #SpeakUp #உடைத்துப்பேசுவோம்

ஜோதிமணி


 "என் ஃப்ரெண்டுக்கு அவளின் உறவினரால் பாலியல் தொந்தரவு இருந்தது தெரிந்தபோது, எனக்கு வயசு 24. அப்போதுதான், குடும்ப நபர்களாலே பெண்களுக்குப் பாலியல் அத்துமீறல் நடக்கும் என்பதே புரிந்தது. காரணம், நான் வளர்ந்த சூழல் அப்படி. தோட்டத்தில் எங்கள் வீடும் சித்தப்பா வீடும்தான். அதனால், இதுபோன்ற விஷயங்களைக் கேட்டதில்லை" என்று மிக இயல்பாக, தன் வாழ்க்கைச் சூழலை விவரிக்கிறார் ஜோதிமணி. 

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி அணிக்காக தேசியச் செயலாளராகப் பணிபுரிந்தவர். கரூர் அரவக்குறிச்சிப் பகுதியைச் சேர்ந்தவர். கே.பரமத்தி பகுதியின் கவுன்சிலராக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்காகப் பல போராட்டங்களை நடத்தியவர். தற்போது, காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார். சென்ற ஆண்டு, சமூக ஊடகங்கள்மூலம் ஆபாசத் தாக்குதல் வந்தபோது, துணிவோடு எதிர்கொண்டவர். அதுகுறித்து கேட்டோம். 

"மோடி அரசின் மக்கள் விரோதப்போக்குக்கு எதிராகத் தொடர்ந்து விமர்சனங்களை வைக்கிறேன். அப்போதெல்லாம் யாராவது போன் செய்து ஆபாசமாகப் பேசுவார்கள். நான் எச்சரித்துவிட்டு கட் செய்துவிடுவேன். சென்ற ஆண்டில் பண மதிப்பு நீக்கம் கொண்டுவந்தார் பிரதமர் மோடி. ஒருநாள் இரவில் ஏற்படுத்தப்பட்ட இந்த மாற்றம், மக்களிடையே கொந்தளிப்புகளை ஏற்படுத்தியது. 'இந்தத் திட்டம் சரியான பலன் அளிக்காவிட்டால், இரண்டு மாதங்களில் என்னை எரித்துவிடுங்கள்' என்றார் பிரதமர். இதைத்தான் சமூக ஊடகத்தில் என் பக்கத்தில் பதிவுசெய்தேன். அதைகூடப் புரிந்துகொள்ளாமல், என்மீது ஆபாசத் தாக்குதலைக் கட்டவிழ்த்தார்கள். அடுத்த நாள், வாட்ஸ்அப்பில் ஜோதிமணி என்று ஒரு குழுவைத் தொடங்கி, என்னுடைய எண்ணையும் இணைத்திருந்தார்கள். அங்கே பதியப்பட்டிருந்தவற்றை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. எளிமையான கிராமத்துப் பின்புலத்திலிருந்து வந்த எனக்கு, அவற்றைப் படிக்கப் படிக்க கடும் அதிர்ச்சியாக இருந்தது. உடனே அந்தக் குழுவிலிருந்து வெளியே வந்துவிட்டேன். என் நண்பர் ஒருவரிடம் கூறியதுபோது, 'இப்பதான் அவங்க முதன்முதலாக கையும் களமாக மாட்டறாங்க. அவற்றைச் சேகரிப்பதற்கு முன்னாடி, ஏன் குழுவைவிட்டு வெளியேறினீங்க' என்றார். 

ஜோதிமணி

அவர் சொல்வது சரிதான் என்பதால், அந்தக் குழுவை மீண்டும் பார்க்கச் சென்றபோது, என் எண்ணை மறுபடியும் சேர்த்திருந்தாங்க. பதிவுகள் வக்கிரத்தின் உச்சமாக இருந்தன. இதுக்காகவே பயிற்சி கொடுக்கப்பட்டவர்கள் என்பதும் தெரிந்தது. என் கேரக்டரை முற்றிலுமாக டேமஞ்ச் பண்ணி, என் குடும்பத்தில் உள்ளவர்களைக் கேவலமாகச் சித்திரித்து என, என் அரசியல் மற்றும் சமூகச் செயல்பாடுகளை நிறுத்தும் நோக்கம்தான் அவற்றில் தெரிந்தது. இதுகுறித்து நண்பர்களிடம் பேசியபோது, 'இது உனக்கான பிரச்னை மட்டுமல்ல, ஊடகத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் இதுபோன்ற ஆபாசத் தாக்குதல்கள், பொதுவெளியில் அவர்களின் மொபைல் எண்ணைப் பதிவது நடக்கிறது' என்றார்கள். அதையெல்லாம் அந்தக் கட்சி தெளிவாகத் திட்டமிட்டு செயல்படுதுவதும் புரிந்தது. 

இன்னொரு கோணத்தில் யோசித்தபோது, இந்த வார்த்தைகளால் எனக்கு எந்த அசிங்கமும் கிடையாது. அதை எழுதினவங்கதான் அசிங்கப்பட வேண்டும் என்ற தெளிவு வந்தது. அவர்கள் எழுதியவற்றை, பொதுவெளியில் பதிவதற்கு முடிவுசெய்தேன். என் அண்ணன் மகனையும் அவனின் நண்பனையும் உதவக் கேட்டேன். அவற்றைப் படித்தவர்கள் அதிர்ந்தார்கள். என் அண்ணன் மகனின் நண்பன், 'அக்கா, இதில் எல்லாமே உங்க குடும்பத்தில் உள்ளவர்கள் படிக்கவேண்டாம்' எனச் சொல்லி, ஸ்கீரின் ஷாட் எடுத்து பார்த்துப் பார்த்துதான் சமூக ஊடங்களில் பதிவிட்டான். ஏனென்றால், பொதுவெளியில் பகிரமுடியாத அளவுக்கு அசிங்கமான வார்த்தைகளால் எழுதியிருந்தார்கள். அவற்றை இப்போது நினைத்துப் பார்த்தாலும் உடம்பு கூசுகிறது. அவற்றின்மீது காவல் துறையில் நடவடிக்கை எடுக்கவைக்கவும் முடிவுசெய்தோம். ஓர் அரசியல் கட்சியே, ஒரு சில ஆண்களின் மனதில் உள்ள வக்கிரத்தைப் பயன்படுத்தி, பொதுவெளியில் இயங்கவரும் பெண்களை முடக்குவதை அனுமதிக்கக் கூடாதல்லவா? 

வார்த்தைகளால் மட்டுமல்ல, வாய்ஸ் நோட்ஸாக ஏகப்பட்ட ஆடியோவையும் அனுப்பியிருந்தார்கள். இந்த ஆபாசத் தாக்குதலில் என்னை ரொம்ப வருத்தப்படவைத்தது, அவற்றில் பேசியவர்களில் பலரும் 18, 19 வயது பையன்களாக இருந்ததுதான். அதிலும் ஒரு பையன், 'அக்கா..' என ஆரம்பித்து ஆபாசமாகப் பேசினான். கருத்தியல் ரீதியாகவும் வாழ்க்கை குறித்தும் முழுமையாக அறிந்துகொள்ளாத வயதிலிருக்கும் பையன்களை, இதுபோன்ற ஆபாசமான தாக்குதல்களுக்குப் பயன்படுத்துவதைப் பார்த்ததும், அந்தப் பையன்கள்மீது கருணையும் பரிதாபமும்தான் வந்தது. நம் வீடுகளில் உள்ளதுபோல எளிய குடும்பத்து பையன்கள்தான் அவர்கள். நாளை, அவர்கள் காவல் துறை நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுவிடுவார்களே என்கிற கவலையும் இருந்தது. இதுபோன்ற ஆபாசத் தாக்குதலை ஏவிவிடும் பெரிய ஆட்கள், தங்களின் பிள்ளைகளை இவற்றில் ஈடுபடுத்தாமல் கவனமாக இருப்பார்கள். 

cyber crime

அந்த ஆபாசத் தாக்குதல்கள சமூக ஊடங்களில் துணிச்சலுடன் பதிவிட்டதும் எதிர்பார்க்காத அளவுக்கு எனக்கு ஆதரவு வந்தது. கல்லூரி மாணவிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் எனப் பல தரப்பினரும் இந்தத் துணிச்சலைப் பாராட்டியதோடு, தாங்கள் வேலைப் பார்க்கும் இடங்களில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களைக் கூறினார்கள். #isupportjothimani என்கிற ஹேஷ்டேக் உருவாக்கினார்கள். அதை யார் ஆரம்பித்தது என்று இன்றுவரை தெரியாது. இப்போதும், பயணங்களில் பார்க்கும் பெண்கள், தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, #isupportjothimani போஸ்ட் பதிந்ததையும், அது தங்களுக்கு ஒரு மாரல் சப்போர்ட்டாக இருந்தது என்றும் கூறுகிறார்கள். 

இந்தப் பிரச்னையில் இரண்டு விஷயங்கள் முக்கியமானவை. ஒரு பெண்ணுக்கு எதிராக நிகழ்த்தப்படும் தாக்குதலை எப்படி எதிர்கொள்வது என்பதைச் சொல்லும் விதமாக இது அமைந்தது. இதை என்னிடம் பேசும் பல பெண்களும் கூறியுள்ளனர். இதுபோன்ற ஆபாசத் தாக்குதல் நடந்த பெண்கள், எல்லாமே முடிந்துவிட்டது என வீட்டின் மூலையில் ஒடுங்கும் காலம் முடிந்துவிட்டது என்பதை உரக்கச் சொல்வதாகவும் அமைந்தது. அடுத்தது, அரசியல் ரீதியான விமர்சனங்களை அந்தக் கட்சியினர் எதிர்கொள்ளும் விதத்தை அம்பலப்படுத்தினோம். நரேந்திர மோடியைத் தனிப்பட்ட முறையில் யாரும் விமர்சிக்கவில்லை. அவர் பிரதமராக முன்னெடுக்கும் விஷயத்தின் பாதகங்களையே விமர்சிக்கிறோம். அதை எதிர்கொள்ளும் விதம் நிச்சயம் இது அல்ல. தன்னைக் கடுமையாக எதிர்த்து கார்ட்டூன் வரைந்தவரின் ஓவியக் கண்காட்சிக்கு அன்றைய பிரதமராக இருந்த ஜவர்ஹால் நேரு நேரில் சென்று திறந்துவைத்தார். அந்தளவு ஜனநாயகம் திகழ்ந்த நாட்டில், பிரதமரின் செயல்பாடுகளை அரசியல் ரீதியான விமர்சிப்பது ஒரு பெண்ணாக இருந்தால், அவரின் நடத்தையைக் கேள்வியாக்கும் ஆயுதத்தை ஓர் அரசியல் கட்சி பயன்படுத்துவதை அம்பலப்படுத்தினோம். 

என்மீதான ஆபாசத் தாக்குதலைத் தயங்காமல் எதிர்கொள்ளும் மனவலிமை என்னிடம் இருந்தது. ஆனால், நான் எதிர்பாராத ஒன்றும் நடந்தது. என் அம்மாவுக்கு அப்போது உடல்நலமில்லை. இந்த விஷயங்கள் அவரின் பார்வைக்குச் சென்றுவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால், சில பேப்பர் பிரின்அவுட்டைப் படித்துவிட்டு, மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டார். மிகவும் கஷ்டப்பட்டுத்தான் அவரைத் தேற்றி பழைய நிலைக்கு கொண்டுவந்தோம். இன்றைக்குப் பெண்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை வெளிப்படையாகப் பேசத் தொடங்கிவிட்டார்கள் என்பதையே இந்த #metoo ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்காக உணர்த்துகிறது" என்கிறார் ஜோதிமணி

ஐந்தில் நான்கு இந்தியப் பெண்கள்(79%), பொது இடங்களில் பாலியல் தீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்கிறது சென்ற வருட ஆய்வு ஒன்று. 70% இந்தியப் பெண்கள் பணியிடங்களில் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் பற்றி புகார் அளிப்பதில்லை என்கிறது, இவ்வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று. 2007-ல் இந்திய அரசு ஐ.நாவுடன் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில், 53% குழந்தைகள் sexual abuse victim-களாக இருந்தது தெரியவந்தது. எனில், இந்த எண்கள் எல்லாம் யாரோ அல்ல, நாம்தான். இப்படி திக்கெங்கும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டாலும், அவற்றைப் பேசாமல் மறைத்த, பேசத் தயங்கிய பெண்களின் தலைமுறைகள் முடியட்டும். 'பேசி என்ன ஆகப்போகிறது?' என்கிறீர்களா? இதுவரை குற்றவாளிகளுக்கு அரணாக இருந்துவந்ததே அந்த எண்ணம்தானே? முதலில் அதைத் தகர்ப்போம். அதற்காகவே இந்தத் தளம். அதற்கு மட்டும்தானா? இல்லை. மனநல கவுன்சலிங் முதல் சட்டரீதியான நடவடிக்கைகள்வரை தேவைப்படுபவர்களுக்கு வழங்கப்படும். தன்னால் சக மனுஷிக்கு நேர்ந்த பாலியல் சீண்டலுக்கு வருந்தித் திருந்தும் ஆண்களின் மனமாற்றங்களையும் வரவேற்கிறோம்.  

பாலியல் குற்றங்களைப் பொசுக்கும் இந்த சிறு பொறியை பெரும் அக்னி பிரளயமாக மாற்றும் பயணத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். #SpeakUp என உடைத்துப் பேசுங்கள்!


டிரெண்டிங் @ விகடன்