Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

``செவ்வாய்க் கிரகத்துக்குப் போறதா? எனக்குச் சரியாப்படலை..!” - எச்சரிக்கும் ‘தி மார்ஷியன்” பட எழுத்தாளர்

செவ்வாய் கிரகத்தில் தனியாக மாட்டிக்கொண்ட மார்க் வாட்னி என்ற விண்வெளி ஆராய்ச்சியாளன், உதவி வரும் வரை எதையேனும் செய்து உயிர் வாழ வேண்டிய நிர்பந்தத்திற்குத் தள்ளப்படுகிறான். சகிக்க முடியாத, அருவருப்பான வழிமுறைகளைப் பின்பற்றி அங்கே தன் விண்கலத்திலேயே விவசாயம் செய்து காய்கறிகளை வளரச்செய்து உண்கிறான். அப்போது, பூமியிலிருந்து அவனைக் கண்காணித்து வரும் ஆராய்ச்சிக் குழுவிடம்,

“ஏதோ அகந்தையுடன் பேசுவதாக எண்ண வேண்டாம். தற்போது இந்தக் கிரகத்தில் நான்தான் சிறந்த தாவரவியலாளர். ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கூறி சிரிக்கிறான்.

செவ்வாய் கிரகம்

ஹாலிவுட்டின் மாபெரும் இயக்குநர்களில் ஒருவரான ரிட்லி ஸ்காட் அவர்களின் ‘தி மார்ஷியன்’ படத்தில் வரும் காட்சிதான் இது. 2015ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தத் திரைப்படம் பலதரப்பட்ட மக்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது. அதற்கு ஒரு வருடத்திற்கு முன் வெளிவந்த விண்வெளி படமான ‘இன்டர்ஸ்டெல்லர்’ தலைச் சுற்ற வைக்கும் சாகசப் பயணம் என்றால், இது கமெர்ஷியல் ஆக்ஷன் சாகசத் திரைப்படம். பெரிய அறிவியல் கோட்பாடுகள் எதையும் போட்டு குழப்பாமல் செவ்வாய் கிரக சாகசப் பயணமாக மட்டும் கதை இருக்கும். இதற்கான விதை 2011ம் ஆண்டு ஆண்டி வெயிர் என்ற நாவலாசிரியரால் போடப்பட்டது. இவர் எழுதிய ‘தி மார்ஷியன்’ நாவலை அடிப்படையாக வைத்துத்தான் இந்தப் படம் எடுக்கப்பட்டது.

ஆண்டி வெயிர் அவர்களின் இரண்டாவது படைப்பான “ஆர்டெமிஸ்” நாவலும் விண்வெளி சாகசங்கள் குறித்துப் பேசுகிறது. சென்ற முறை செவ்வாய் என்றால், இந்த முறை சந்திரன். நவம்பர் 14 வெளியான இந்தப் புத்தகம் அறிவியல் புனைவு மற்றும் விண்வெளி சாகசங்கள் குறித்து விரும்பிப் படிப்பவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. புதிய புத்தகத்தின் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், நிலா மற்றும் செவ்வாய் கிரகத்தில் குடியேற மனிதர்கள் நினைப்பதைப் பற்றி கேட்டுள்ளனர். இதற்குப் பதிலளிக்கையில்,

“முதல் மனிதன் ஒரு கிரகத்தில் தங்கித்தான் வாழ்வை அங்கேயே தொடங்குகிறான். ஆனால், அந்தக் கிரகம் நிச்சயம் பூமியாய் இருக்கக் கூடாது. இதைத்தான் கதையாக வடிவமைக்க நினைத்தேன். இதையேதான் ‘தி மார்ஷியன்’ மற்றும் ‘ஆர்டெமிஸ்’ புத்தகங்களில் செய்துள்ளேன். நிஜ உலகில் வேறொரு கிரகத்தில் குடியேறுவதைக் குறித்து கேட்டால், என் கருத்துப்படி முதலில் நிலாவில்தான் நாம் அதை முயற்சி செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு ஏன் இவ்வளவு பொருட்செலவுடன் செவ்வாயை நோக்கிச் செல்ல விரும்புகிறோம் என்று எனக்குப் புரியவில்லை. கண்டிப்பாக இன்னும் நூறு வருடத்தில் அதை நாம் செய்திருப்போம் என்றாலும், ஏன் இப்போதே அதற்கு முயற்சி செய்ய வேண்டும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

செவ்வாய் கிரகம்

“செவ்வாயை காலனித்துவப்படுத்த தற்போது நம்மிடம் போதிய பொருளாதார சக்தி உள்ளதா என்று தெரியவில்லை. அங்கே, செவ்வாயை வாழும் இடமாக மாற்ற ஆகும் செலவை விட நம் பூமியைச் சரி செய்ய ஆகும் செலவு மிகவும் குறைவுதான்” என்றும் வருத்தப்பட்டுள்ளார்.

இவரின் இந்தக் கேள்விக்கு, பல அறிவியல் அறிஞர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் காலநிலை மற்றும் விண்வெளி அறிவியல் சங்கத்தின் பேராசிரியர் மற்றும் பொறியியலாளர் ஆன ஆரோன் ரிட்லி, “ஆண்டி அவர்களின் கேள்வியை நான் நூறு சதவீதம் ஏற்கிறேன். இப்போதே செவ்வாயில் குடியேற நினைப்பது ஒரு அகலக்கால் வைக்கும் முயற்சிதான். மிகுந்த பொருட்செலவு ஏற்படும். மாறாக நிலவில் இதை முயற்சி செய்வது ஆக்கபூர்வமாக இருக்கும். இதுவும் செலவுதான் என்றாலும், செவ்வாய் கிரகக் குடியிருப்பை விட இது குறைவுதான்” என்கிறார்.

பிளானட்டரி சயின்ஸ் இன்ஸ்டிட்யூட்டின் மூத்த விஞ்ஞானி மற்றும் பியாண்ட் எர்த்: அவர் பாத் டு ஏ நியூ ஹோம் (Beyond Earth: Our Path To A New Home) என்ற புத்தகத்தின் எழுத்தாளருமான அமண்டா ஹெண்ட்ரிக்ஸ், “நிலவில் ஒரு ஆராய்ச்சி நிலையம் அமைப்பது நல்ல தொடக்கமாகத் தோன்றுகிறது. நம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு இதுதான் சரியான ஆரம்பப் புள்ளியாக இருக்கும். சந்திரனில் ஒரு நிரந்தர நிலையம் நாம் அமைத்துக்கொள்ளலாம். இங்கே யாரும் தங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆராய்ச்சிக்காக வந்து போகும் போகிறவர்கள் அங்கே தங்கி தங்கள் பணிகளைச் செய்யலாம். அங்கிருந்து செவ்வாய் போன்ற வேறு கோள்களுக்குக் கூட விண்வெளி ஓடங்கள் அனுப்ப ஏவுதளம் அமைத்துக் கொள்ளலாம். இதுதான் இப்போது தேவை” என்று தெரிவித்துள்ளார்.

“செவ்வாய் கிரகத்தில் அறிவியல் ஆராய்ச்சி மட்டுமே ஒரே நம்பத்தகுந்த செயல்பாடு. அதுவும் அரசாங்கமே அதை எடுத்து நடத்த வேண்டும்” என்கிறார் நாசாவின் அமிஸ் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர் கிறிஸ் மெக்கே.

செவ்வாய் கிரகம்

"நீங்கள் ஒரு நிலத்தில் ஒரு செடியை நட்டு வளர்த்து விட்டாலே, அந்த நிலத்தை நீங்கள் வாழ்விடமாக மாற்றிவிட்டதாக அர்த்தம். நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் செய்யாததை நான் செவ்வாயிலே செய்து விட்டேன்!" என்று 'தி மார்ஷியன்' படத்தில் மார்க் வாட்னி கூறுவான். இது அந்தப் படத்தில் கிண்டலாக, ஒரு கேலிக்காக சொல்லப்பட்ட வசனம் என்றாலும் நாம் செவ்வாய் சென்றுவிட்டால் அங்கேயும் ரியல் எஸ்டேட் வியாபாரம்தான் செய்வோம் என்பது நிதர்சனமான உண்மை. 

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ வாழ்விடம் அமைப்பது அவசியமா?. இது குறித்து உங்களின் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement