வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (30/11/2017)

கடைசி தொடர்பு:16:57 (30/11/2017)

இந்தியாவில் 2030-ல் எலெக்ட்ரிக் கார்கள் மட்டும்தான்... இது சாத்தியமா?

ஒரு மாலைநேரத்து இளவெயில் நேரம். நெரிசல்மிக்க போரூர் சிக்னல் அருகே நண்பரோடு டீ கடையில் அமர்ந்திருந்தேன். என்னைப் போலவே  நண்பரும் கார் பிரியர். அவர் கார்களை வாடகைக்கு விடும் தொழில் செய்கிறார். இன்னும் ஒரு வருடத்தில், புதிய கார்களுக்கான தேவையிருப்பதால், ''எந்த காரை வாங்கலாம்?'' என டிஸ்கஸ் செய்துகொண்டிருந்தோம். அப்போது குறுக்கிட்ட டீ கடை சேட்டா, ''உடனே எதயும் வாங்கிடாதீங்க தம்பி. இன்னைக்கு பேப்பர் பாத்தீயளா, 2020-ல் இருந்து மின்சார கார்களை மட்டும்தான் இந்தியாவில் வெச்சிருப்போம்னு சொல்லுதாங்க. முடிஞ்சா, கொஞ்சநாள் இருக்குறத வெச்சி சமாளிச்சிட்டு, அப்புறம் மின்சார காரை வாங்கிடுங்க. நீங்க வெச்சிருக்கற கம்பெனி, 2 வருஷத்துலயே நட்டம் ஆகிடக் கூடாதுல்ல’’ என்று நண்பருக்கு அட்வைஸ் செய்தார். 

tesla

டீ கடை சேட்டா அரையும் குறையுமாகக் கூறினாலும், அதுவே நிதர்சனம். மத்திய அரசின் செயல் வரைவு திட்டமிடல் குழுவான நிதி ஆயோக் மற்றும் அமெரிக்க தொண்டு நிறுவனமான ராக்கிமௌண்டைன் இன்ஸ்டிட்யூட் இணைந்து, கடந்த மே மாதம் ஒரு செயல் வடிவினைத் தந்துள்ளனர். அதன்படி 2030-ல், இந்தியாவில் ஓடும் அனைத்து வாகனங்களும் மின்சார வாகனமாக மட்டுமே இருக்குமாம். அதற்கான முயற்சிகளும் தற்போது வேகமாக ஆரம்பிக்கப்பட்டு விட்டன.

நீங்களும் ஒரு ஆட்டோமொபைல் பிரியராக இருந்தால், இது ஓரளவு உங்களுக்குச் சந்தோஷத்தைத்தான் தந்திருக்கும். காரணம், பட்டனை அழுத்திய 5 நொடிகளுக்குள்... 100 கிலோ மீட்டர் வேகத்தைத் தொடும் வாகனத்தை, யாருக்குத்தான் பிடிக்காது?. தவிர, கொஞ்சமும் அதிர்வுகளே தெரியாமல், அமைதியாக இயங்கும் எலெக்ட்ரிக் மோட்டார்... பெட்ரோலும் டீசலும் தேவையில்லை, வீட்டிலேயே காரின் பேட்டரியை சார்ஜ் செய்துகொள்ளலாம்; மூன்று மாதங்களுக்கு ஒரு முறை காரை சர்வீஸ் விட வேண்டியதில்லை என்பதால் செலவும் குறைவு. இதில் சில எலெக்ட்ரிக் வாகனங்களை, நாம் ஓட்டக் கூட தேவையில்லை. அவை தானாகவே இயங்கக்கூடிய தொழில்நுட்பமும் வந்துவிட்டது. எனவே, இதில் சொகுசைத் தாண்டி, டிரைவர் செலவுகூட இல்லை என்பது பெரிய ப்ளஸ். சில எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு, லைசென்ஸ் தேவையில்லை என்ற நிலை இருப்பதால், இவற்றை யார்தான் வேண்டாமென்று சொல்வார்கள்?

எலெக்ட்ரிக் கார்

சரி, இவை எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். நம்ம ஊரில் ஒரு வருஷம் முன்னாடி வரைக்கும், இரண்டு மணிநேரம் மின்வெட்டு இருந்ததே? இப்போதும் கூட. பல வீடுகளில் பவர் கட் ஆகிறது. சும்மா ஓடுற டிவி, ஃப்ரிஜ்ஜுக்கே கரன்ட் இல்லை எனும்போது, கார் - பைக் - லாரி எல்லாத்தையும் சார்ஜ் செய்ய மின்சாரத்துக்கு எங்கே போவது என்ற கேள்வி எழவில்லையா? அப்படியே மின்சாரம் கிடைத்தாலும், இந்த வாகனங்களின் அடிநாதமான பேட்டரியின் மூலப் பொருளான லித்தியம்-அயான். இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கிடைக்கும்? நம் கையில் இருக்கும் ஸ்மார்ட் ஃபோனில் இருக்கக்கூடிய சிறிய அளவு பேட்டரியே, 2 வருடங்களுக்குள் திறனை இழக்கிறது. இந்நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்களில் வரும் பேட்டரி மட்டும், எத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிக்கப்போகிறது?. இதன் விலையும் சற்றே அதிகமாக இருக்கலாம். ஜிஎஸ்டி விளைவாக, கார்களின் சர்வீஸுக்கே கையில பணம் இல்லை, இதில் எலெக்ட்ரிக் வாகனம் என்றால் கேட்கவா வேண்டும்?

இந்தியா

 

சூழலியல் பிரச்னைகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மழையோ, வெயிலோ எதையுமே மிதமிஞ்சித் தரும் சென்னைக்கு, இந்த மின்சார வாகனங்கள் செட்டாகுமா?. ஏனெனில், கொஞ்ச நேரம் மொபைலை பயன்படுத்தினால், பேட்டரி சூடாகும் என்ற பிரச்னை உள்ளது! சுற்றுச்சூழலைக் காப்பாற்றத்தானே இவ்வளவு பெரிய போராட்டம்? எலெக்ட்ரிக் வாகனங்கள் காற்று மாசுபடுவதை ஏற்படுத்துவதில்லை எனச் சொல்லலாம். ஆனால், மின்சார உற்பத்தி என்பது அப்படியா? இந்தியாவில் மின்சாரத்தை அதிகமாகத் தயாரிப்பதே, நிலக்கரி மற்றும் அணுஉலையில் இருந்துதானே... மற்ற நாடுகளுக்கு இது தெரியாதா என்று கேள்வி கேட்கலாம். எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி, இதுவரை அதிக தூரம் நடைபோட்டுள்ள நார்வேயும், சீனாவும் இதை யோசிக்கவில்லையா? அவர்கள் யோசிப்பதை, நாம் இன்னும் யோசிக்கவில்லை போல! 

 

tata mahindra

பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தைக் கையெழுத்திடாமல் இருக்க, அமெரிக்கா சொன்ன காரணம் நினைவிருக்கிறதா? ‘‘எங்கள் பருவநிலையை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், நீங்கள் சொல்வதுபோல செய்தால், எங்கள் நாட்டின் தொழில்துறையில் வேலையில்லா திண்டாட்டம்தான் நிலவும்’’ என்றார் அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும் துறைகளில் ஆட்டோமொபைலும் ஒன்று. நிலைமை இப்படியிருக்க, வரும் 2030-ல் சாதாரண வாகனங்களே இல்லையென்றால், தற்போது இத்துறையில் இருப்பவர்களின் எதிர்காலம் என்னவாகும்?

இந்த உலகமயமாக்கலே ஒரு சதி... எல்லாமே கார்ப்பரேட்களின் சதி; இந்தியாவில் மின்சாரத்தை அதிகமாக உருவாக்குவது அதானியும் அம்பானியும் தானே! ‘அதான் சொல்றேன் ஜீ, எல்லாம் கார்ப்பரேட் சதி’ எனச் சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம், ‘இந்த எலெக்ட்ரிக் வாகனத்துக்கு கமல்தான்பா பிராண்டு அம்பாஸிடரா வருவார், எல்லாமே இலுமினாட்டிகளின் சதி நண்பா’ என்கிறது மற்றொரு குரூப். மாற்று எரிபொருள்களைப் பயன்படுத்தக்கூடிய பல வகை இன்ஜின்களும், ஹைபிரிட் வாகனங்களுமே இன்னும் இந்தியாவிற்குள் முழுவதுமாகப் பயன்பாட்டுக்கு வரவில்லை. மேலும், உயரிய தொழில்நுட்பங்கள் அனைத்தும் இன்னும் இங்கே பரவலாக்கப்படவில்லை. வடகிழக்கு மாநிலங்கிளில் இன்னும் ஆங்கிலமே போய் சேரவில்லை... அதற்குள் ஏன் இந்த திடீர் மின்சார உந்துதல் என இந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் நமக்குள் ஏற்படுத்தும் கேள்விகள் ஏராளம்.

ஒவ்வொரு முரண்பாட்டையும் துயிலுரிப்போம்... எப்படி இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்களின் யுகத்தை அடையப்போகிறது என்பதையும் பார்ப்போம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்