வெளியிடப்பட்ட நேரம்: 08:46 (01/12/2017)

கடைசி தொடர்பு:08:46 (01/12/2017)

உங்களுக்குச் சேரவேண்டியது கிடைத்தே தீரும்! - உண்மை உணர்த்தும் கதை #MotivationStory

கதை

ன்பை வெளிப்படுத்தும் ஒரே உலக மொழி, மலர்ந்த புன்னகை மட்டுமே!’ என்கிறார் அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் ஆர்தர் வார்டு (William Arthur Ward). வாழ்க்கையில் எத்தனையோ அனுபவங்களை மனிதர்கள் பெற்றிருந்தாலுமேகூட பல நேரங்களில் உண்மையான அன்பை கவனிக்கத் தவறிவிடுகிறார்கள். உள்ளன்போடு உதவ வருபவர்களைத் தவறாக எடைபோடுகிறார்கள்; மென்மையான சிரிப்பை உதிர்க்கிறவர்களைக்கூட அச்சத்தோடு பார்க்கிறார்கள். ஆனாலும் நல்ல மனம் கொண்டவர்கள் இவற்றையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. தங்களால் இயன்ற உதவியைப் பிறருக்குச் செய்ய அவர்கள் ஒருபோதும் தவறுவதேயில்லை. சக மனிதர்களின்பால் அக்கறையும் அன்பும் கொண்ட ஓர் இளைஞனின் கதை இது. அது மட்டுமல்ல... உலகம் ஒரு சிறிய வட்டம் என்பதை அழுத்தமாக உணர்த்தும் கதையும்கூட.

கதை

அமெரிக்கா... நகருக்கு வெளியேயிருக்கும் ஒரு சாலை. காலை 11 மணிக்கு மேல் ஆகியிருந்தாலும்கூட, பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், ரோட்டில் வாகனங்களோ, உருவங்களோ தெளிவாகத் தெரியவில்லை. அந்த இளைஞன் தன் ஓட்டைக் காரில் போய்க்கொண்டிருந்தான். ஏதோ ஒரு பாப் பாடலை விசிலடித்துக்கொண்டிருந்தான். உடலை மெள்ள ஊடுருவும் குளிர், ஜில்லென்று அடிக்கும் காற்றின் இதம்... அவனுக்கு மிக உற்சாகமாக இருந்தது. அப்போதுதான் சாலையோரத்தில் ஒரு கார் நிற்பதையும் அதனருகே ஒரு பெண்மணி குளிரில் லேசாக நடுங்கியபடி நிற்பதையும் பார்த்தான். தன் காரை ஓரம் கட்டினான்.

அவர் ஒரு மூதாட்டி. காரில் இருந்து அந்த இளைஞன் இறங்குவதைப் பார்த்தாள். அவன் காரை நிறுத்தாமல் இறங்கியிருந்தான். அந்தப் பழைய மாடல் கார் இரைச்சலிட்டபடி, லேசாகக் குலுங்கிக்கொண்டிருந்தது. கடந்த ஒரு மணி நேரமாக மூதாட்டி அங்கே நின்றுகொண்டிருந்தாள். ஒரு வாகனம்கூட நிற்கவில்லை. அவள் ஏன் இங்கு தனியாக நிற்கிறாள் என்று கேட்கக்கூட யாரும் வரவில்லை. மூதாட்டிக்கு இளைஞனைப் பார்க்க அச்சமாக இருந்தது. அவனுடைய நைந்துபோன பழைய ஆடைகள், தேய்ந்துபோன ஷூ, கிழிசல் விட்டிருந்த மேல் கோட்... பார்த்தாலே ஏழை என்பது தெரிந்தது. இவையெல்லாம் அவளின் பயத்தை அதிகப்படுத்தின. இத்தனைக்கும் அந்த இளைஞன் ஒரு மலர்ந்த புன்னகையோடுதான் அவளை நெருங்கிக்கொண்டிருந்தான். மூதாட்டியோ, அவன் தன்னை எதுவும் செய்துவிடுவானோ, பணம் பறிக்க வருகிறானோ என்றெல்லாம் பயந்துகொண்டிருந்தாள்.

முகத்தைப் பார்த்தே அந்த மூதாட்டி என்ன நினைக்கிறார் என்பதை அந்த இளைஞன் புரிந்துகொண்டான். ஆனாலும், அதே புன்னகையோடு அவளருகே வந்தான். வணக்கம் சொன்னான். அது, விலை உயர்ந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார்.``மேடம் ஏன் இப்படி தனியா நிக்கிறீங்க? இவ்வளவு குளிர் அடிக்குதே... கார்ல போய் உட்கார்ந்திருக்கலாம்ல?’’ என்று கேட்டான். மூதாட்டி பதில் எதுவும் சொல்லவில்லை.

``என் பெயர் ஆண்டர்சன்...’’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டான் இளைஞன். அதற்கும் அவள் பதில் எதுவும் சொல்லவில்லை. இளைஞன் காரைச் சுற்றி வந்தான். காரின் பின் சக்கரம் பஞ்சராகியிருப்பது தெரிந்தது. ``ஓ... இதுதான் பிரச்னையா?’’ என்றவன், மேற்கொண்டு தாமதிக்கவில்லை. அவனாகவே அந்த காரின் டிக்கியைத் திறந்தான். ஸ்டெப்னி, ஜாக்கி ஒரு டயரை மாற்றத் தேவையான இதர உபகரணங்கள் எல்லாம் இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டு இளைஞன், காருக்கடியில் தவழ்ந்து போனான். கால் மணி நேரத்தில் பஞ்சரான டயரைக் கழற்றிவிட்டு, இன்னொன்றை மாற்றிவிட்டான். அவன் காருக்கடியிலிருந்து வெளியே வந்தபோது அவன் உடைகளில் அழுக்கும் சேறும் படிந்திருந்தன. ஒரு விரலில் கீறல் விழுந்து லேசாகக் காயம்பட்டிருந்தது.

பணிப்பெண்

இளைஞன் பஞ்சரான டயர், இதர பொருள்களையெல்லாம் அந்த மூதாட்டியின் கார் டிக்கியில் வைத்து மூடினான். ``எங்கேருந்து வர்றீங்க?’’ என்று கேட்டான்.

``செயின்ட் லூயிஸ்லருந்து...’’

``ஓ...’’

அப்போதும்கூட அவள் அவனுக்கு ஒரு நன்றிகூடச் சொல்லவில்லை. தன் ஹேண்ட் பேக்கைத் திறந்தாள். அவன் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்காமலேயே ``இந்த வேலைக்கு நான் எவ்வளவு தரணும்?’’ என்று கேட்டாள்.

இளைஞனின் முகம் சுருங்கிப்போனது. இதை அவன் எதிர்பார்க்கவில்லை. அவன் உதவி செய்யத்தான் வந்திருந்தானே தவிர, டயரை மாற்றும் வேலைக்கு அல்ல. அது அவன் வேலையும் அல்ல. அவன் நினைத்திருந்தால், அந்த மூதாட்டியிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்டிருக்கலாம்.

``மேடம்... பணத்துக்காக நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணலை. எனக்கு எதுவும் வேணாம். இந்த வேலைக்குப் பணம் கொடுக்கணும்னு விரும்பினீங்கன்னா, கஷ்டப்படுறவங்க யாரையாவது பார்ப்பீங்கல்ல... அவங்களுக்கு உதவி பண்ணுங்க. அப்போ... என்னையும் நினைச்சுக்கங்க...’’ என்று சொல்லிவிட்டு இளைஞன் தன் காரில் ஏறிக் கிளம்பிவிட்டான்.

***

அந்த மூதாட்டி வழியில் ஒரு ரெஸ்ட்டாரன்ட்டில் தன் காரை நிறுத்தினாள். சாப்பிடுவதற்காக உள்ளே நுழைந்தாள். அது ஒரு பழையகாலக் கட்டடம். உள்ளே ஆட்களும் அதிகமில்லை. ஒரு மேஜையில் இரண்டே இரண்டு பேர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். மூதாட்டி தயக்கத்தோடு ஒரு மேஜையில் அமர்ந்தாள். வந்தனம் சொன்னபடி ஒரு பணிப்பெண் வந்தாள். அவள் முகத்தில் மலர்ந்த சிரிப்பு. மூதாட்டியின் ஈரத் தலையைத் துவட்டிக்கொள்ள சுத்தமான ஒரு டவலை நீட்டினாள். துவட்டி முடித்ததும் ஆர்டர் எடுத்துக்கொண்டு, விரைவாக உணவைக் கொண்டு வந்து வைத்து அழகாகப் பரிமாறினாள். மூதாட்டி ஒன்றைக் கவனித்திருந்தாள். அந்த பணிப்பெண் நிறைமாத கர்ப்பிணி. ஆனால், தன் வலியையோ, தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதையோக் கொஞ்சம்கூட வெளிக்காட்டாமல் சிரித்த முகத்தோடு மூதாட்டிக்கு வேண்டியவற்றைப் பரிமாறினாள். மூதாட்டிக்கு தனக்கு உதவிய இளைஞனின் நினைவு வந்தது.

பில் வந்தது. மிக மிகக் குறைந்த தொகை. மூதாட்டி ஒரு நூறு டாலர் கரன்ஸியை எடுத்து பில்லோடு வைத்தாள். பணிப்பெண் பில்லுக்கான பணத்தைச் செலுத்திவிட்டு வந்து பார்த்தபோது மூதாட்டி அங்கே இல்லை. சாப்பாட்டு மேஜையில் மூதாட்டி எழுதிவைத்திருந்த ஒரு குறிப்பு இருந்தது. அதில், `இது உன் வேலைக்காக அல்ல... உன் சேவைக்காக. இந்தப் பணம் வேண்டாம் என்று நினைத்தால், கஷ்டப்படும் வேறு யாருக்காவது உதவி செய்’ என்று எழுதியிருந்தது. அந்தக் குறிப்புச் சீட்டுக்குக் கீழே மேலும் நான்கு 100 டாலர் கரன்ஸிகள் இருந்தன.

***

ஆண்டர்சன் மனைவியுடன்

பணிப்பெண் இரவு வீடு திரும்பினாள். அன்றைக்கு நடந்தது அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. `அந்த அம்மாவுக்கு நான் கஷ்டப்படுறேன்னு எப்படித் தெரியும்? பிரசவத்துக்கு நாள் நெருங்கிக்கிட்டிருக்கு. பிரசவ செலவுக்கு என்ன பண்றதுனு தெரியாம நானும் அவரும் முழிச்சிக்கிட்டு இருந்தோம். கடவுள் மாதிரி இந்தம்மா உதவி செஞ்சுட்டுப் போறாங்களே...’ என்று திரும்பத் திரும்ப அன்று நடந்ததையே நினைத்து வியந்துகொண்டிருந்தாள். அவள் கணவனும் வீடு திரும்பினான். அவன் சாப்பிட்டு முடித்து படுக்கைக்கு வந்ததும் அன்று நடந்ததையெல்லாம் அந்தப் பணிப்பெண் சொன்னாள். அவன் கேட்டுக்கொண்டிருந்தான்.

``அந்தக் கடவுளுக்குத்தான் நாம நன்றி சொல்லணும்... இல்லையா ஆண்டர்சன்?’’

அவன் மௌனமாகத் தலையசைத்தான்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்