வெளியிடப்பட்ட நேரம்: 08:27 (02/12/2017)

கடைசி தொடர்பு:08:27 (02/12/2017)

`ஷின் - ஷானுக்கு இவ்வளவு அதிகப்பிரசங்கித்தனம் ஆகாது!' - யார் இந்த ஷின் - ஷான்?

பென்சில் ஓவியம் போன்ற உடல், குட்டை உருவம், பெருத்த தலை, `கியா கியா' குரல் - இவர்தான் மிஸ்டர் ஷின் - ஷான். இணைய உலகின் லேட்டஸ்ட் சூப்பர்ஸ்டார். இந்த கார்ட்டூன் கேரக்டருக்கு, வயது பாரபட்சமில்லாமல் எல்லாரும் லைக்ஸ் குவிக்கிறார்கள். அதுவும் ஓவியா ஆர்மிக்கு போட்டியாக ஷின் - ஷான் ஆர்மி தொடங்கும் அளவுக்கு. யார் இந்த ஷின் - ஷான்? ஏன் இந்தத் திடீர் ட்ரெண்ட்?

ஷின் - ஷான் பிறந்த கதை:

ஷின் ஷான்

ஜப்பானில் `மாங்கா' காமிக்ஸ்கள் மிகவும் பிரபலம். `மாங்கா' என்றால் படங்கள் என அர்த்தம். எனவே, படக்கதைகளுக்கு அந்தப் பெயர் வந்துவிட்டது. 19-ம் நூற்றாண்டில் ஜப்பானில் கலாசாரத்தைப் பிரதிபலித்த இந்தப் படக்கதைகள் மெதுவாக கமர்ஷியல் பாதையில் திரும்பின. ஆக்‌ஷன், சாகசம், ரொமான்ஸ், காமெடி என எல்லா ஜானர்களிலும் `மாங்கா' வெளுத்துவாங்க, அதற்கேற்றார்போல் புதுப்புது கேரக்டர்களும் உருவாகிக்கொண்டே வந்தன. அப்படி 1990-ம் ஆண்டில் யூத் பத்திரிகைகாக உருவாக்கப்பட்ட கேரக்டர்தான் ஷின் - ஷான். முழுப்பெயர் க்ரேயான் ஷின் - ஷான். அந்த இதழில் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணிபுரிந்த யூஷி யோஷிடோ என்பவரின் கைவண்ணத்தில்தான் இந்தச் சுட்டிச் சிறுவன் பிறந்தான்.

அந்த கார்ட்டூனுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே, அதை டிவி தொடராக மாற்ற முடிவெடுத்தார்கள். அசாஹி என்கிற ஜப்பானிய டிவி-யில் ஷின் - ஷான் வலதுகால் எடுத்து வைத்துப் பிரவேசித்தான். 1992-ம் ஆண்டு ஏப்ரலில் முதல் எபிசோடு டெலிகாஸ்ட் ஆனது. எடுத்தவுடன் ஆஹோ ஓஹோவென வரவேற்பு கிடைக்கவில்லை. நான்கு சதவிகித ரேட்டிங்தான் கிடைத்தது. ஆனால், இந்தத் தொடர் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாக பத்தே மாதங்களில் 20 சதவிகித ரேட்டிங்கில் வந்து நின்றது. இவ்வளவு குறுகிய காலத்தில் எந்த கார்ட்டூன் தொடரும் இப்படி ஒரு வரவேற்பைப் பெற்றதில்லை. பட்டித்தொட்டி எல்லாம் பேசுபொருளானான் ஷின் - ஷான்.

டிவி தொடருக்குக் கிடைத்த சிவப்புக் கம்பள வரவேற்பு சினிமா உலகை உறுத்த, ஷின் - ஷானை அனிமேஷன் படமாக உருவாக்கத் திட்டமிட்டார்கள். உடனே வேலைகளைத் தொடங்கி படத்தையும் வெளியிட்டார்கள். படமும் ஹிட். அன்றிலிருந்து இன்று வரை ஜப்பானில் ஷின் - ஷான் ராஜ்ஜியம்தான். 940 எபிசோடுகளைக் கடந்து, 25 முழு நீள அனிமேஷன் படங்களாக அவதரித்து 30-க்கும் மேற்பட்ட மொழிகளில் சக்கைபோடு போடுகிறான் ஷின் - ஷான். இது அவனுக்கு 25-வது ஆண்டு.

அப்படி என்ன இருக்கிறது ஷின் - ஷானில்?

ஐந்து வயது கிண்டர்கார்டன் சிறுவனான ஷின் - ஷானுக்கு, ஓரிடத்தில் இருக்கவே முடியாது. ஏதாவது செய்து தன்னை பரபரப்பாகவே வைத்துக்கொள்வான். அவன், அம்மா மிஷே, அப்பா ஹிரோஷி, தங்கை ஹிமாவாரி, நாய் ஷிரோ என அளவான குடும்பம். தன் குடும்பத்தையும், ஏரியாக்காரர்களையும், நண்பர்களையும் தன் சேட்டைகளின் மூலம் எப்படி பாடாய்படுத்துகிறான் அவன் என்பதுதான் இந்த காமிக்ஸின் மையக்கதை. 

ஆளைப் பார்க்கவே சிரிப்பாக இருக்கும். இதுபோக அந்தக் `கியா கியா...' குரலும் கிச்சுகிச்சு மூட்டும் வசனங்களும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துப்போக, ஷின் - ஷானைக் கொண்டாடத் தொடங்கினார்கள். மழலை மனதுக்கு மொழி முக்கியமல்லவே. எனவே, ஜெர்மனி, அமெரிக்கா, இந்தியா, சீனா, டென்மார்க், பிரான்ஸ் என ஏகப்பட்ட நாடுகளில் இவனுக்கு ரசிகர்கள் உருவானார்கள். இந்தியாவில் 2006-ம் ஆண்டு முதல் ஷின் - ஷான் தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கியது. தமிழ், தெலுங்கு, இந்தி என வெளியான மூன்று மொழிகளிலும் செம ஹிட். முக்கியமாக தமிழில் ஷின் - ஷான் பேசும் வசனங்கள் எல்லாம் ரகளை ரகம். `அமைதி அமைதி அமைதியோ அமைதி' என்ற ஷின் - ஷான் வசனம் இப்போது நிறைய பேரின் காலர் ட்யூன்! மீம்ஸ்களும் பறக்கின்றன.

குவிந்த விமர்சனங்கள்:

குழந்தைகள் கொண்டாடிய அளவுக்கு பெற்றோர்களால் ஷின் - ஷானைக் கொண்டாட முடியவில்லை. காரணம், ஷின் - ஷான் கேட்கும் கேள்விகள். அவை எல்லாம் வயதுக்கு மீறிய கேள்விகள் எனக் கொந்தளித்தார்கள் ஜப்பானிய பெற்றோர்கள். `அதிகப்பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கும் ஒரு கேரக்டரை, குழந்தைகள் இந்த அளவுக்குக் கொண்டாடுவது துரதிர்ஷ்டவசமானது' என விமர்சகர்கள் ஊடகங்களில் எழுதித் தள்ளினார்கள். போதாகுறைக்கு சில இரட்டை அர்த்த வசனங்கள், அடல்ட்ஸ் ஒன்லி காட்சிகள் எல்லாம் வர, விமர்சனங்கள் வலுத்தன. டப் செய்யப்பட்ட நாடுகளிலும் இதே பிரச்னை உருவாக, குடும்பத்தோடு பார்க்கும் விதமாகக் காட்சிகளையும் வசனங்களையும் மாற்றி அமைத்தார்கள். 

இந்தியாவிலும் இதே பிரச்னை எழுந்தது. வரிசையாக எழுந்த விமர்சனங்களால் செய்தி ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்தத் தொடருக்கு 2008-ம் ஆண்டில் தடை விதித்தது. தடைக்கு எதிராகவும் குரல்கள் எழ, சென்சார் போர்டின் தணிக்கைக்குப் பிறகு தொடர்ந்து வெளியானது ஷின் - ஷான். 2009-ம் ஆண்டில் ஷின் - ஷானை உருவாக்கிய யோஷிடோ மரணமடைய, ஒரிஜினல் தொடர் நிறுத்தப்பட்டது. அடுத்த ஆண்டு அவரின் உதவியாளர்கள் துணையோடு புதிதாக அடுத்த சீஸன் தொடங்கப்பட, இப்போது வரை ஜப்பானின் கார்ட்டூன் ராஜாவாக வலம்வருகிறான் ஷின் - ஷான்.

2006-ம் ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய தொடர் ஏன் இப்போது வைரலானது? ஃபேஸ்புக்கில் இதற்காக திடீரென பக்கங்களும் மீம்ஸ்களும் தோன்ற ஆரம்பித்ததுதான் இதற்குக் காரணம். அவர்களின் புண்ணியத்தில் மீசை வைத்த குழந்தைகளை அடையாளம் கண்டுகொண்டதுதான் இதில் நடந்த ஒரே சாதனை!  

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்