வெளியிடப்பட்ட நேரம்: 09:17 (02/12/2017)

கடைசி தொடர்பு:15:06 (02/12/2017)

விலங்குகளை வேட்டையாடும் மனித மிருகம்! #AnimalTrafficking - அத்தியாயம் 1

"காசு எதையும் செய்யும் என்றால் அந்தக் காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்வேன்" என்றொரு சினிமா வசனம் வரும். அதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு உலகம் முழுக்க நடக்கும் விலங்குகள் கடத்தல்கள். உயிரோடு இருக்கும் காண்டாமிருகத்தின் கொம்புகளைத் துடிதுடிக்க வெட்டுவதில் ஆரம்பித்து தேவாங்கின் பல்லை உயிரோடு பிடுங்குவது வரை ஹிட்லர் காலத்துச் சித்ரவதைகள் எல்லாம் இப்போது விலங்குகளுக்குச் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். 

புலி, யானை, காண்டாமிருகம், பாம்பு, தேவாங்கு, எறும்புத் தின்னி, தவளை, பூச்சிகள், ஆமைகள், மீன்கள், பறவைகள் என ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு சந்தை இருக்கிறது. லட்சங்களில் ஆரம்பித்து கோடிகளில் விலை  நிர்ணயிக்கப்படும் விலங்குகள் எல்லாம் அழிந்து வரும் உயிரினங்களின் முதன்மைப் பட்டியலில் இருப்பவை. உலகெங்கிலும் செயல்படும் கறுப்புச் சந்தைகள் விலங்குகள் கடத்தலை மறைமுகமாக உலகமயமாக்கி வருகிறது. இந்தக் கடத்தல் உலகின் இப்போது ஹாட் பாம்பு விஷம் கடத்தல்.

விலங்கு கடத்தல்

சம்பவம் 1:
2016-ம் ஆண்டும் அக்டோபர் மாதம். மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டம் பெலகோபா பகுதியில் பாம்புகள் கடத்தப்படுவதாக வனத்துறைக்குத் தகவல் வருகிறது. சோதனைச்சாவடியில் தேடுதலைத் தீவிரமாக்குகிறார்கள். அப்போது அங்கே வந்த 3 பேரிடம் விசாரிக்க, அவர்கள் பையில் குங்குமப்பூ இருப்பதாகச் சொல்கிறார்கள். உள்ளே, கண்ணாடிக் குவளையில் குங்குமப்பூக்கள் மணக்கின்றன. இருந்தும் சந்தேகம் குறையாமல் குவளைகளைத் திறந்த வனத்துறைக்கு அதிர்ச்சி. உள்ளே இருந்தது பாம்பு விஷம். கைப்பற்றப்பட்ட விஷத்தின் இந்திய மதிப்பு 250 கோடி. சர்வதேச சந்தையில் 2000 கோடி. 2000 கோடியை அப்படி அசால்ட்டாக எடுத்துச் செல்வார்களா?. ஆம் என்கிறார்கள் சர்வதேச விலங்கு ஆர்வலர்கள். உங்களுக்குத் தெரியுமா, வானில் பறக்கும் ஒவ்வொரு விமானத்திலும் ஒரு பாம்பாவது கடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறதாம்.


சம்பவம் 2:
மே 10 2017. எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மேற்கு வங்க மாநிலம் மல்டா நகரத்துக்கு WB-59-A-5762 எண் கொண்ட பேருந்தில் தங்கம் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைக்கிறது. உடனடியாக களத்தில் இறங்கிய வீரர்கள் கசல் புனியட்புர் சாலையில் காத்திருக்கிறார்கள். தவுலத்பூர் என்கிற கிராமத்தில் பேருந்தை மடக்கி சோதனை செய்ததில் லக்கேஜ் பகுதியில் கிடந்த கறுப்பு நிற பையை போலீஸ் கைப்பற்றியது. தங்கம் என நினைத்து சோதனை செய்ததில் உள்ளே இருந்தது 1.170 கிலோ பாம்பின் விஷம். மூன்று ஜார்களில் கடத்தியிருக்கிறார்கள். அந்த மர்மப் பையை சோதனை செய்ததில் அதன் அடையாளங்கள் பிரான்சில் தயாரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பிரான்சிலிருந்து கடத்திவரப்பட்ட அந்த விஷம் பங்களாதேஷ் வழியாகக் கடத்தப்பட்டது தெரியவந்தது. ஜாடி மற்றும் அதன் உள்ளடக்கங்கள் மல்டாவில் உள்ள வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதன் இந்திய மதிப்பு 100 கோடி. பூட்டான் மற்றும் நேபாளத்தில் விஷம் கொண்ட ஒரு  ஜாரை எல்லைதாண்டி கடத்துவதற்கு ரூ.1 லட்சம் வரை கடத்தல்காரர்கள் தருவதாகப் பிடிபட்ட நபர்கள் போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள்.

வேறெந்த நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் மேற்கு வங்க மாநிலத்தில் வருடத்துக்கு 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள பாம்பு விஷம் கடத்தல்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்படுகிறது. பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் இந்தியாவின் எல்லையில் 50 கி.மீ. தொலைவில் அமைந்திருப்பதால், சிலிக்கூரி நகரம் தரைவழி கடத்தலுக்கு முக்கியப் பங்காற்றுகிறது. நேபாளத்துக்கும் பூட்டானுக்கும் இடையேயான எல்லைகளைக் கடந்துசெல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. இதனால் சர்வதேச நிலத்தடி நடவடிக்கைகளுக்கு மேற்குவங்க எல்லைகளைப் பயன்படுத்துகிறார்கள். தரைவழியாக எளிதில் கடத்திவிடலாம் என்பதால் கடத்தல்காரர்கள் இந்திய பங்களாதேஷ் எல்லையையும் குறி வைத்திருக்கிறார்கள். 

சில வருடங்களுக்கு முன்பு மண்ணுளிப் பாம்புக்கு இந்திய அளவில் மிகப் பெரிய மார்க்கெட் இருப்பதாகத் தகவல் பரவியது. இருக்கிற தொழிலையெல்லாம் விட்டுவிட்டு இரவுப் பகலாக ஒரு கும்பல் மண்ணுளிப் பாம்பை தேடித் திரிந்தது. “மாப்ள என்கிட்ட ஒரு பார்ட்டி இருக்கு. ஒரு பீஸுக்கு (மண்ணுளி) 30 லட்சம். எங்க இருந்தாலும் புடிச்சிட்டு வந்திரு மாப்ள” இப்படிப் படித்தவர் படிக்காதவர் என எல்லோரையும் சில காலம் அலைய வைத்தது மண்ணுளிப் பாம்பு. ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து கோடி வரை விலை போவதாக அதைத் தேடியவர்கள் பிடிபட்டதும் சொல்லியிருக்கிறார்கள். மண்ணுளிப் பாம்பினால் எந்தப் பயனுமில்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் மண்ணுளிப் பாம்புதான் முன்னிலையில் இருக்கிறது. 

பாம்புகளின் விஷம்தான் பாம்புக் கடிக்கு மருந்தாக உலகம் முழுவதும் பயன்பட்டு வருகிறது. நல்லப் பாம்பு, கண்ணாடி விரியன், கட்டை விரியன், சுருட்டைப் பாம்பு ஆகிய நான்கு பாம்புகளின் விஷத்தையும் சரிவிகித அளவில் கலந்து விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது. தயாரிக்கப்பட்ட விஷமுறிவு மருந்தைத் தேர்ந்தெடுக்கப்படுகிற குதிரைகளுக்குச் செலுத்துகின்றனர். அவ்வாறு செலுத்தப்பட்டிருக்கும் விஷத்துக்கு எதிர் மருந்தை (ANTIBODIES) குதிரையின் உடல் தானாகவே உற்பத்தி செய்துகொள்ளும். விஷ முறிவு (ANTIVENOM) குதிரையின் உடலில் உற்பத்தி செய்யப்பட்டவுடன் குதிரையின் எடையில் ஒரு சதவிகிதம் என்கிற கணக்கில் குதிரையின் ரத்தம் எடுக்கப்படும். விஷமுறிவு திரவம் பிரித்தெடுக்கப்பட்டபின், எடுக்கப்பட்ட அளவுக்கான ரத்தம் உடனடியாக குதிரைக்குச் செலுத்தப்படும். உலக அளவில் எல்லா நாடுகளிலும் விஷமுறிவு மருந்து தயாரிக்க இந்தமுறைதான் பயன்படுத்தப்படுகிறது. 

பாம்பு

பாம்பு விஷயத்தில் பல கடுமையான சட்ட திட்டங்கள் அமலில் இருக்கின்றன. விஷம் கொண்ட பாம்புகளிலிருந்து விஷமில்லா பாம்புகள்வரை எல்லாப் பாம்பு இனங்களும் பாதுகாக்கப்பட்ட பட்டியலில்தான் இருக்கிறது. இன்றைய தேதியில் பாம்பு விஷம் உலகமெங்கும் தேவைப்படுகிற முக்கியமான வணிகப் பொருளாக கறுப்புச் சந்தை முதலாளிகள்  உருவாக்கி வைத்திருக்கிறார்கள். உலக அளவில் இந்தியாவில்தான் விஷ முறிவுக்கான பாம்புகள் அதிகமாக இருக்கின்றன. பாம்புகள் பிடிப்பதற்கும் விஷம் எடுப்பதற்கும் தொழில் நுட்பங்கள் எதுவும் தேவையில்லாததால் எளிதாகப் பாம்பைப் பிடித்து விஷம் எடுத்துவிடுகின்றனர். சட்ட விரோதமாகப் பாம்புகளைப் பிடிப்பதால் விஷம் எடுத்த பிறகு அவற்றைக் காடுகளில் மீண்டும் விடுவதில்லை. மாறாக அப்பாம்புகளைக் கடத்தல்காரர்கள் கொன்று வீசி விடுகிறார்கள்.   

பாம்பின் விஷம் மருத்துவப் பயன்பாடு என்பதைக் கடந்து போதைப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிராம் பாம்பின் விஷத்தைத் திரவமாகவோ பவுடராகவோ தனி நபர் ஒருவர் வைத்திருப்பது சர்வதேச அளவில் சட்டத்துக்குப் புறம்பான செயலாக சர்வதேச விலங்குகள் நலவாரியம் அறிவித்திருக்கிறது. உலக அளவில் பாம்பு விஷம் வைத்திருந்து பிடிபட்டவர்கள் எல்லோருமே ஸ்லீப்பர் செல்கள்தான். உண்மையில் கடத்தலுக்கு மூளையாகச் செயல்படுகிற ஒருவரைக் கூட உள்ளூர் போலீஸும் சரி உலக போலீஸும் சரி இதுவரை கைதுசெய்யமுடியவில்லை என்பதுதான் மிகப் பெரிய சிக்கல்.  இவர்களைக் கண்டுபிடித்து கைதுசெய்யாத வரை எல்லாக்கடத்தலும் சர்வசாதாரணமாக நடந்துகொண்டே இருக்கும் என்கின்றனர் விலங்குகள் நல ஆர்வலர்கள்.


டிரெண்டிங் @ விகடன்