வெளியிடப்பட்ட நேரம்: 08:52 (04/12/2017)

கடைசி தொடர்பு:08:52 (04/12/2017)

“அம்மாவும் அப்பாவும் போன் பண்ணிப் பேசுவாங்கனு நம்புறேன்!” - முதல் திருநங்கை மருத்துவ மாணவி தாரிகா பானு

“சித்த மருத்துவம் படிக்க சீட் கிடைச்சதை அண்ணன்கிட்ட சொன்னேன். ரொம்ப சந்தோஷப்பட்டார். வீட்டுக்கு வரச் சொன்னார். அம்மாவும் அப்பாவும் நிச்சயமா சந்தோஷப்பட்டிருப்பாங்க. அவங்க எப்ப போன் பண்ணுவாங்கனு காத்துக்கிட்டிருக்கேன்” நெகிழ்ச்சியுடன் பேசினார் திருநங்கை தாரிகா பானு.

திருநங்கை தாரிகா பானு

தமிழகத்திலேயே முதல்முறையாக `திருநங்கை' என்ற அடையாளத்துடன் பன்னிரண்டாம் வகுப்பை முடித்தவர், தற்போது முதல் திருநங்கை சித்த மருத்துவராகவும் ஆகப்போகிறார். ஆம், `திருநங்கை' என்ற அடையாளத்துடனே கல்லூரியிலும் சேர்ந்துள்ளார். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கல்வியைப் பெற்ற பூரிப்புடனும், திருநங்கைகள் மீதான பொதுப் பார்வையை மாற்றும் முனைப்புடனும் பேசினார் தாரிகா பானு.

“தூத்துக்குடி மாவட்டத்துல இருக்கும் நிலக்குடிதான் என் சொந்த ஊர். அம்மா, அப்பா நாலு அண்ணங்க, அப்புறம் நான். 2014ல சொல்லிக்காம வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். என் அடையாளத்தோடு நான் இருக்கிறது அவங்களுக்குப் பிடிக்கலை. என் அடையாளத்தை என்னால எப்படி மாத்திக்க முடியும்? அதுக்கப்புறம் சென்னை வந்ததுல இருந்து என்னை நல்லாப் பார்த்துக்கிட்டது, எனக்குப் படிப்பு கிடைக்க உதவினது எல்லாமே எனக்கு ஆதரவு கொடுத்து அன்பா பார்த்துக்கிட்ட `அம்மா' கிரேஸ் பானுதான்" என, தன் வாழ்க்கையின் வழிகாட்டியாக இருக்கும் திருநங்கை  கிரேஸ் பானுவைப் பற்றிக் குறிப்பிட்டார்.

கிரேஸ் பானு முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரி. திருநங்கைகளின் உரிமைக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பவர். தாரிகா பானுதிருநங்கைகளுக்குத் தனி இடஒதுக்கீடு கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

நமது சமூகச் சூழலில், கிராமப்புறத்தில் பிறந்து மருத்துவம் போன்ற படிப்புகளைப் படிப்பதற்கு பல்வேறு போராட்டங்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. அப்படியிருக்கையில், கிராமத்துச் சூழலில் திருநங்கையாக வளர்ந்து, பிறகு குடும்பத்தைவிட்டு வெளியேறி, தனது அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் தனக்கு வந்த இன்னல்களை எல்லாம் மீறி தாரிகா பானு இன்று அடைந்திருக்கும் நிலை வரவேற்கத்தக்கது. 

தாரிகா பானுவை, அம்பத்தூரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்ப்பதற்காகக் கேட்டபோது, பள்ளியில் இடம் கொடுக்க மறுத்துவிட்டனர். அதன் பிறகு, முதன்மைக் கல்வி அலுவலரிடம் சென்று  `திருநங்கை' என்ற மூன்றாம் பாலின அடையாளத்தோடு படிக்க அரசு அனுமதி வழங்கியுள்ள உத்தரவைக் காட்டியிருக்கிறார்  கிரேஸ் பானு. அதன்பிறகு  அந்தப் பள்ளியிலேயே சேர்ந்து படித்து வெற்றி கண்டார் தாரிகா பானு.

பள்ளிப் படிப்பை முடித்தபிறகு, கல்லூரியில் உடனடியாக சீட் கிடைக்கவில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தில் கிரேஸ் பானு வழக்கு தொடர்ந்து நீதி கேட்ட பிறகே சீட் கிடைத்திருக்கிறது. அதன் பிறகு அரசுக் கல்லூரியிலேயே வாய்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக ஒரு காத்திருப்பு, வழக்கு எனத் தொடர்ந்த போராட்டங்கள். கடைசியாக உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவின்படி அரும்பாக்கத்தில் உள்ள அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் படிப்பைத் தொடங்கியுள்ளார் தாரிகா பானு.

சில வார்த்தைகளில் நாம் எழுதியிருக்கும் இந்தப் போராட்டம், வழக்கு இவற்றை,  ஒவ்வொரு முறை கல்விக்காக முன்னேறும்போதும் தாரிகா பானுவும் கிரேஸ் பானுவும் முன்னெடுத்துள்ளனர். அடிப்படையான கல்வியைப் பெறுவதற்கே 2017-ம் ஆண்டிலும் திருநங்கைகள் போராடவேண்டியுள்ளது. பிச்சை எடுப்பவர்களாகவும், பாலியல் தொழில் செய்பவர்களாகவும்தான் பொதுப்புத்தியில் திருநங்கைகள் பார்க்கப்படுகிறார்கள். ஆனால், `TG' என்ற முன்றாம் பாலின அடையாளத்தோடு பொறியியல் கல்லூரியில், கலைக் கல்லூரியில் தற்போது பல திருநங்கைகளும் படித்துக்கொண்டிருக்கிறார்கள். பலர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனங்களில் பொறுப்பான வேலைகளிலும் உள்ளனர். சிலர் காவல் துறையிலும் பணிபுரிகின்றனர். ஆனால், அப்படி நல்ல நிலைக்குச் செல்வதற்குப் பல இன்னல்களையும் போராட்டங்களையும் சந்திக்கவேண்டியுள்ளது. இதன் காரணமாகத்தான் கிரேஸ் பானு திருநங்கைகளுக்குத் தனி இட ஒதுக்கீடு வேண்டும் என வழக்குத் தொடர்ந்துள்ளார். 

திருநங்கை தாரிகா பானுபடிப்பை முடித்துவிட்டு சென்னைப் போன்ற பெருநகரங்களில் வேலை தேடுவது என்பதே சிரமமான ஒன்று. தன் குடும்பத்தினருடன் எந்தவிதமான தொடர்புமில்லாமல் பொருளாதாரரீதியாகவும் சமூகத்தில் தங்களுக்கான அடையாளத்தைப் பெறுவதற்கும் திருநங்கைகள் படும் துயரத்தின் வலியை நாம் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.

“டாக்டராகப் போறீங்க. எவ்வளவு சந்தோஷமா உணர்றீங்க?'' என அவரிடம் கேட்டபோது

திருநங்கைனாவே பிச்சை எடுக்கிறவங்க, பாலியல் தொழில் பண்றவங்கங்கிற எண்ணம் மாறும்ல?" என்றார். ஒரு பாலினத்தின் மீது ஒட்டுமொத்தமாகப் பூசப்பட்டிருக்கும் தவறான அபிப்பிராயத்தைக் கலைத்து, அவர்களை முன்னேற்ற வேண்டும் என்பதே தாரிகா பானுவின் கனவு.

“நீங்க போன் பண்ணி உங்க அப்பா, அம்மாகிட்ட பேசவேண்டியதுதானே?'' என அவரிடம் கேட்டதற்கு

“இல்ல. அவங்களே போன் பண்ணுவாங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு'' என்றார்.

உங்கள் குழந்தை ஓர் உயர்ந்த இடத்தை அடைய ஆயத்தமாகியிருக்கிறது. அழைத்து வாழ்த்துங்கள் பெற்றோரே!


டிரெண்டிங் @ விகடன்