வெளியிடப்பட்ட நேரம்: 16:25 (03/12/2017)

கடைசி தொடர்பு:16:25 (03/12/2017)

"பழங்குடி இன மக்கள் வாழ்க்கையும் மாறிடுச்சு... காட்டைப் பத்தி அவங்களுக்கும் தெரியல..!” - புகைப்படக்காரர்களுக்கு வழிகாட்டும் நீலகிரிவாசி

நீலகிரி


மாலை ஐந்து மணி மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் முள்ளூர் சாலையின் ஒரு வளைவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் மரம் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள். வெட்டப்பட்ட மரங்களை லாரியில் ஏற்றப்படுகின்றன. ஒரு மரத்தை வெட்டுகிற சத்தம் மலை முழுவதும் எதிரொலிக்கிறது. கத்தி, வாள் என ஆயுதங்கள் கொண்டு மரம் வெட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  அதற்கு நேர் எதிரே   வனத்தை ஒட்டிய பகுதியில் மூன்று பேர் நிற்கிறார்கள். இரண்டு பேர் கவ்பாய் தொப்பி அணிந்திருக்கிறார்கள். இரண்டு பேருடைய கையிலும் கேமரா  வைத்திருக்கிறார்கள். இன்னொருவர் அவர்களுக்கு ஏதோ அறிவுரைகளைச் சொல்கிறார். மரம் வெட்டுகிற சத்தம் அவர்களைத் தொந்தரவு செய்கிறது. அதைக் கவனத்தில் கொள்ளாது பறவைகளின் வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். மும்பையில் இருந்து வந்திருக்கிற இந்த இருவரும் காட்டுயிர் புகைப்படக்காரர்கள். மூன்று நாட்களாக ஒரு பறவைக்காக அதே இடத்தில் காத்திருக்கிறார்கள். இன்னொருவர் அகால் சிவலிங்கம். இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நீலகிரி மாவட்டத்திற்கு வரும் காட்டுயிர் புகைப்படக்காரர்களின் வழிகாட்டியாக இருக்கிறார்.  அகால் சிவலிங்கம் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து போகிற எல்லா வகையான   பறவைகள் குறித்த தகவல்களையும் கைக்குள் வைத்திருக்கிறார். எந்த மாதத்தில் எங்கு, என்ன பறவை இருக்கும் என்பதில் அனுபவம் பெற்றவர். நீலகிரி மாவட்டத்திற்கு வருகிற புகைப்படக்காரர்களின் முதல் சாய்ஸ் சிவலிங்கம்.  

பறவைகள் புகைப்படம் பற்றி அவரிடம் பேசினோம். 

சிவலிங்கம்“நீலகிரியில் வெளிய தெரியாம நெறைய இடம் இருக்கு. அந்த இடங்களில் அதிக பறவை இனங்கள் இருக்கு. அந்த மாதிரி இடங்களை வெளிய கொண்டு வரணும். அந்த மாதிரியான இடங்களை நன்கு தெரிந்தவர்கள் வெளியே சொல்வது இல்லை. எனக்கு தெரிந்த இடங்களை, பறவைகளை நிறைய பேருக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். இந்தியா முழுவதுமிருந்து அதிக புகைப்படக்காரர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். "ஃபேரி ப்ளு பேர்ட் (FAIRY BLUE BIRD) பறவையைப் போட்டோ எடுக்க மூணாவது நாளாக இங்க வந்துருக்கோம். பத்து வருசத்துக்கு முன்னாடி போட்டோ எடுக்க வந்தால் பத்தில் இருந்து இருபது நிமிசத்துல புகைப்படம் எடுத்துவிட்டு போய்டலாம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மூன்று நாளுக்கு மேலாகக் காத்திருந்தும் இது வரை எடுக்க முடியவில்லை. வருத்தமா இருக்கு. சில பறவைகளின் வருகை எனக்கு நன்கு பரிச்சயமாகி இருந்தது. ஆனால் இப்போது அந்தப் பறவைகள் எல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை. சில பழங்குடி இன மக்கள் வசிக்கிற இடங்களில் புது வகையான பறவைகள் இருக்கின்றன. ஆனால் அவை எப்போது வருகின்றன, போகின்றன என்கிற விவரங்கள் நமக்குத் தெரிவதில்லை. பழங்குடி இன மக்களிடம் பணம் கொடுத்து பறவைகளின் வருகை குறித்து தகவல் சொல்ல சொல்கிறோம். ஆனால் அவர்கள் எந்தத் தகவல்களும்  சொல்வது இல்லை. "நமக்கு எதுவும் தெரியாது நம்மை வைத்துத் தெரிந்து கொள்கிறார்கள்" என்கிற தவறான கருத்து பழங்குடி இன மக்களிடம் இருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பெல்லாம் இயற்கை மூலிகைகள் பற்றிய எல்லாத் தகவல்களும் பழங்குடி இன மக்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இன்று அவர்களும் இயற்கை பற்றிய புரிதல் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை முறையை முற்றிலும் மாறி விட்டார்கள். நாமே நம் கலாசாரத்தில் இருந்து மாறி விட்டோம் அவர்களைத் தவறு சொல்கிற தகுதி நமக்கு இல்லை” என்கிறார். 

பறவை

சிவலிங்கம் அடிப்படையில்  புகைப்படக்காரராக இருப்பது பல இடங்களுக்குப் பயணிக்க முக்கிய காரணமாக இருக்கிறது. பல இடங்களுக்குய் பயணித்து அநேகப் பறவைகளின் படங்களை எடுத்துள்ளார். முக்கியமாக ’நீலகிரி சோலைக்கிளி’ என்கிற பறவை இனத்தை உலகறிய செய்திருக்கிறார்.  நீலகிரிக்குப் புகைப்படம் எடுக்க வருகிறவர்கள் அத்தனை புகைப்படக்காரர்களும் பிளாஸ்டிக் என்கிற வார்த்தைக்கு எதிரானவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களோடு பயணித்ததில் எங்கும் பிளாஸ்டிக் என்கிற ஒன்றைப் பயன்படுத்துவதில்லை. நீலகிரியின் காடுகளில் புகைப்படம் எடுக்க வனத்துறை இப்போது அனுமதிப்பதில்லை. வனத்தை ஒட்டிய பகுதிகளில்தான் புகைப்படம் எடுக்க வேண்டும். புகைப்படம் எடுப்பதற்காக வனத்தை ஒட்டி இருக்கிற தனியார் தோட்டங்களில் தோட்டக்காரர்களின் அனுமதியோடு சில இடங்களைத் தயார்படுத்தி இருக்கிறார். பலர் பல நாட்களாக அங்கேயே இருந்து படங்கள் எடுக்கிறார்கள். புகைப்படம் எடுக்க வருகிறவர்களின் எல்லோருடைய வருத்தமும் ஒன்றே ஒன்றுதான். அது, "முன்ன மாதிரி பறவைகள் எதுவும் வருவது இல்லையே" என்பதுதான். 

பறவை

பறவைகளில் தரைதளத்தில் இருக்கிற பறவைகள், மரங்களில் வசிக்கிற பறவைகள் என வித்தியாசம் உண்டு. எல்லாப் பறவைகளும் தரைகளில் அமர்வதில்லை. மரங்களில் இருக்கிற பறவை இனங்கள்தான் அதிகம். புகைப்படம் எடுக்கிற இடங்களுக்கு எதிர் பக்கத்தில் மரங்களை வெட்டி இருக்கிறார்கள். இந்த இடத்திற்கு வழக்கமாக வருகிற பறவைகள் எங்கே செல்லும். இதுவரை வந்து சென்ற பறவைகள் இனி எங்கே செல்லும் என்பதை யாராலும் அவ்வளவு எளிதில் கணித்துவிட முடியாது.