வெளியிடப்பட்ட நேரம்: 07:39 (03/12/2017)

கடைசி தொடர்பு:07:39 (03/12/2017)

“எனக்கு மன நோய்… என் ஓவியங்களை பாக்கற தைரியம் இருக்கா?” - இன்ஸ்டாகிராமில் திகிலூட்டும் பெண்

“இன்று கண்விழித்தவுடன் நீங்கள் முதலில் பார்த்த காட்சி நிஜமானது தானா?” இந்தச் சந்தேகம் உங்களுக்கு எப்போதாவது தோன்றியது உண்டா?

“இல்லையே!” என்று பதிலளிக்கும் முன், இந்தச் சந்தேகம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குத் தோன்றினால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். நீங்கள் காண்பது நிஜமா அல்லது உங்களின் அதீத கற்பனையா என்று தெரியாமல் உங்களால் ஓர் அடி கூட எடுத்து வைக்க முடியாது. இப்படிப் பட்ட மனநிலைகளில் இருப்பவர்களுக்கு, வாழும் ஒவ்வொரு நாளும் நரகமாகிப் போய்விடுகிறது. காட்சிகளைக் கூட விட்டு விடுங்கள். ஏதேனும் செய்து, குழப்பி எடுத்து, இது நிஜம் இது பொய் என்று நம் மன அலமாரியில் அடுக்கிக் கொள்ளலாம். வினோத சப்தங்கள், காதின் அருகில் கிசுகிசுக்கப்படும் வசவுச் சொற்கள், தூரத்து அறையில் இருந்து வந்து பார்க்க சொல்லி அடம்பிடிக்கும் ஒரு குழந்தையின் குரல், இதெல்லாம் கூட பலருக்கு நடப்பதுண்டு என்கிறார்கள் மருத்துவர்கள். இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு வந்திருக்கும் பிரச்னையின் பெயர் “மனச்சிதைவு நோய்”, ஆங்கிலத்தில் ஸ்கிசோஃப்ரினியா (Schizophrenia).

மனநோய்

உங்களுக்கு இந்த நோய் தாக்கினால், இப்படி ஒரு குறை உங்களிடம் இருக்கிறது என்பதை அறியவே பல காலம் ஆகும். மிகவும் ஆபத்தான மனநோயாகக் கருதப்படும் இதன் கொடூரத்தை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. விடாமல் துரத்தும் பிரச்னைகள், சர்ச்சைகள் மற்றும் மன உளைச்சல்கள் நிறைந்த பால்யப் பருவம் போன்றவை தான் இந்த நோய்க்கு அடித்தளம். அவர்களால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியும் என்று நம்பிக்கை ஏற்படுத்தும் ஒரு விஷயம் என்றால் அது இசை மற்றும் கலைதான். அதிலும் ஓவியக்கலை அவர்களை எப்போதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.இன்ஸ்டாகிராமில் திகிலூட்டும் பெண்

கேட் ஃபென்னர் (Kate Fenner) என்ற இந்தப் பெண்ணிற்கும் ஓவியங்கள் தான் உதவுகின்றன. இவருக்கு 17 வயதில் ஸ்கிசோஃப்ரினியா இருப்பதாகக் கண்டறியப்பட்டது. தற்போது, தன் குறையை மறந்து, தன் அன்றாட வாழ்வை ஓவியங்களால் நிரப்பிக் கொண்டிருக்கிறார் இந்தப் பதின்பருவப் பெண். அதை இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை ஐம்பதாயிரம் வரை போயிருக்கிறது.

“நான் பிறப்பிலேயே ஓவியத் திறமையுடன் இருந்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். ஆனால், இந்த நோய் தான் என் திறமையை எனக்கே அடையாளம் காட்டியிருக்கிறது. எனக்குத் தோன்றும் மாயத்தோற்றங்களை நான் வரைகிறேன். என் ஓவியங்கள் தான் என் உற்றத் துணை. என் ஓவியங்களில் பிரதான இடத்தைப் பிடிப்பவை சிறிய பூச்சிகள், அதிலும் முக்கியமாக ஈக்கள். ஒருவேளை, நானும் இந்த ஈக்களை போலப் பயனற்ற ஒன்றாக இருக்கிறேன், என்று என் கற்பனைகள் உணர்த்தப் பார்ப்பதாய் நினைக்கிறேன்” என்று படபடக்கிறார். அவர் பதிவிட்ட படங்களில் சில…

 

“என் அறையின் மேலுள்ள சிறுதுளை வழியாக இது ஊர்ந்து வந்தது. ‘கிளிக்’ செய்யும் ஒலியை இது எழுப்புகிறது. சில சமயம் பொருள்களின் அடியில் இருந்து கூட இது வெளியே எட்டிப்பார்க்கும்.”

மன நோய்

“இது என் முகம் தான். ஒருநாள் கண்ணாடியை பார்க்கும் போது இப்படி தான் தெரிந்தது.”

இன்ஸ்டாகிராம் படங்கள்

“எனக்குள் தீவிரமான எண்ணங்கள் சில அவ்வப்போது தோன்றும். வித்தியாசமான குரல்கள் வந்து பொருள்களை தீயிட்டு எரிக்கச் சொல்லி தூண்டி விடும்.”

இன்ஸ்டாகிராம் படங்கள்

இன்ஸ்டாகிராம் படங்கள்

“இந்தப் பறவை எனக்காகப் பாடல்கள் பாடும்.”

இன்ஸ்டாகிராம் படங்கள்

Photos Courtesy: Kate Fenner

ஸ்கிசோஃப்ரினியா இருந்தும் உச்சம் தொட்டவர்கள் நிறையப் பேர் உண்டு. ஜான் நேஷ் என்ற பிரபல கணித மேதை இந்த நோய் இருந்தும், பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெரும் அளவிற்கு உயர்ந்தார். இவரின் வாழ்க்கை ‘A beautiful mind’ என்று ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளியது. இந்தப் பிரச்னை உள்ள பெரும்பாலானோர் இசையில் சாதித்துள்ளனர். இயற்பியல் மேதை ஐன்ஸ்டீன் மகனான எட்வர்ட் ஐன்ஸ்டீன் அவர்களுக்குக் கூட இந்த பிரச்னை இருந்தது.

இந்தப் பெண்ணின் ஓவியத் திறமையும் அவர் படங்கள் வழியே நன்கு வெளிப்படுகிறது. இவ்வகை பிரச்னைகளை சமாளிக்கத் தேவை மற்றவர்களின் அன்பும் ஆதரவும் தான். அதையும் தாண்டி பாதிக்கப்பட்டவர்களும் இப்படி ஏதேனும் ஒரு கலையில் ஆர்வம் கொண்டவர்களாய் இருக்கலாம். அதை அறிந்து கொண்டு, அவர்களுக்கு உதவ வேண்டியது இயல்பான வாழ்க்கையை வாழும் நம்முடைய கடமை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்