வெளியிடப்பட்ட நேரம்: 08:30 (04/12/2017)

கடைசி தொடர்பு:08:35 (04/12/2017)

உயிரின் விலை ஒரு டாலர் பதினோரு சென்ட் - அன்பு வென்ற கதை! #MotivationStory

தன்னம்பிக்கை கதை

ற்புதம், அதிசயம்... இவற்றின் மேலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா... என்றாவது ஒருநாள் நம் வாழ்க்கையிலும் அற்புதமெல்லாம் நிகழும் என்கிற உறுதியோடு இருக்கிறீர்களா? அப்படியென்றால், நிச்சயம் அது நடக்கும். அப்படி நடக்கப் போகும் அதிசய நிகழ்வுகளுக்கு அடிநாதமாக இருப்பது ஏதோ ஒரு மாய மந்திர சக்தி அல்ல... உங்களின் நம்பிக்கை. அது, நம்மை எப்போதும் கைவிடாது. அந்த உண்மையை வெகு அநாயசமாக உணர்த்தும் கதை இது.

சிறுமி

அந்த சின்னஞ்சிறு பெண்ணின் பெயர் டெஸ் (Tess). அவளுக்கு ஆண்ட்ரூ என்ற ஒரு குட்டித் தம்பியும் உண்டு. கொஞ்ச நாள்களாக வீடு சுமுக நிலையில் இல்லை.  அம்மாவும் அப்பாவும் வித்தியாசமாக நடந்துகொள்கிறார்கள். வழக்கமான சிரிப்போ, கலகலப்போ அவர்கள் முகத்தில் இல்லை. அம்மாவும் அப்பாவும் தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக் கேட்டு டெஸ், ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டாள். `தம்பிக்கு உடம்பு சரியில்லை. தம்பியின் நோயைக் குணப்படுத்த அம்மா, அப்பாவிடம் பணமில்லை. அவனுடைய மருத்துவச் செலவு கூடிவிட்டபடியால், இப்போதிருக்கும் வசதியான வீட்டை விட்டுவிட்டு, கூடுபோன்ற அப்பார்ட்மென்ட் குடியிருப்பு ஒன்றுக்கு இடம்பெயரப் போகிறார்கள். தம்பியின் நோய் குணமாக வேண்டுமென்றால், அவனுக்குப் பெரிய ஆபரேஷன் ஒன்றைச் செய்ய வேண்டும்; அதற்கு நிறையச் செலவாகும். அந்தப் பணத்தைக் கடனாகக் கொடுக்கக்கூட யாரும் தயாராக இல்லை.’

கண்ணீருடன் நின்றுகொண்டிருந்த அம்மாவிடம் அப்பா ஒருநாள் இப்படிச் சொல்லிக்கொண்டிருந்தார்... ``ஏதாவது ஒரு அதிசயத்தால மட்டும்தான் அவனைக் காப்பாத்த முடியும்...’’

`அதிசயம்...’ அந்த வார்த்தை டெஸ்ஸின் மனதில் அழுத்தமாக விழுந்துவிட்டது. இதைக் கேட்ட கணத்தில் தன் அறைக்குப் போனாள் டெஸ். யாருக்கும் தெரியாமல்(!) அதுவரை அவள் ஒளித்துவைத்திருந்த தன் சின்ன உண்டியலை எடுத்தாள். உண்டியலைக் கவிழ்த்து, அதிலிருந்த மொத்தப் பணத்தையும் மெதுவாக எண்ணினாள். இரண்டு, மூன்று முறை கவனமாக அந்தக் காசுகளை எண்ணினாள். மொத்தம் ஒரு டாலர் 11 சென்ட் பணம் அவளிடமிருந்தது. டெஸ்ஸுக்கு, அவள் வீட்டிலிருந்து சற்று தூரத்திலிருந்த மருந்துக்கடை நினைவுக்கு வந்தது. உண்டியல் காசை எடுத்துக்கொண்டாள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தெரியாமல், பின் கதவைத் திறந்துகொண்டு வெளியே போனாள்.

உதவி கேட்கும் சிறுமி

அந்த ரெக்ஸால்’ஸ் மருந்துக்கடை (Rexall's Drug Store) முன்னால் போய் நின்றாள். பிறகு, அந்த மருந்துக்கடையின் கண்ணாடிக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனாள். வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை. மருந்துக்கடைக்காரர் அங்கிருந்த யாரிடமோ மும்முரமாக எதையோ பேசிக்கொண்டிருந்தார். டெஸ், அவர் தன்னைப் பார்ப்பாரா என்று கொஞ்ச நேரம் காத்திருந்தாள். அவர் இவள் பக்கம் திரும்பக்கூட இல்லை. கொஞ்ச நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, டெஸ் தன் தொண்டையைச் செருமினாள். அப்போதும் அந்த மருந்துக்கடைக்காரர் அவள் பக்கம் திரும்பவில்லை. கடைசியாக, அவள் தன் உண்டியல் பணத்திலிருந்து கொஞ்சத்தை எடுத்து அவருக்கு முன்னால் இருந்த கண்ணாடி மேஜையில் சத்தம் எழுகிற மாதிரி வைத்தாள். அவ்வளவுதான்.

மருந்துக்கடை

``உனக்கு என்ன வேணும்? பல வருஷம் கழிச்சு இப்போதான் சிகாகோவுல இருந்து வந்திருக்குற என் சகோதரன்கிட்ட பேசிக்கிட்டிருக்கேன்... அது பொறுக்கலையா உனக்கு?’’

``நல்லது சார். நான் என் தம்பியைப் பத்தி உங்ககிட்ட சொல்லணும்... அவனுக்கு... அவனுக்கு உண்மையிலேயே உடம்பு சரியில்லை. அதனால... அவன் சரியாகணும்னா எனக்கு... எனக்கு... ஒரு அதிசயம் விலைக்கு வேணும்...’’

``என்னம்மா சொல்றே? எனக்குப் புரியலை.’’

``என் தம்பி பேரு ஆண்ட்ரு. அவன் தலைக்குள்ள மோசமா, கெட்டதா ஏதோ வளர்ந்துடுச்சாம். எங்க அப்பா, அம்மாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு... `அதிசயத்தால மட்டும்தான் அவனைக் காப்பாத்த முடியும்’னு. அந்த அதிசயத்தோட விலை என்னனு சொன்னீங்கன்னா, காசைக் குடுத்துட்டு வாங்கிட்டுப் போயிடுவேன்.’’

``இங்க பாரு குட்டிப் பொண்ணு... அதிசயத்தையெல்லாம் நாங்க இங்கே விக்கிறதில்லை... சாரி.’’ அவள் நிலையைப் புரிந்துகொண்டவராக மென்மையான குரலில் சொன்னார் அந்த மருந்துக்கடைக்காரர்.

டெஸ் பிடிவாதமான குரலில் சொன்னாள்... ``இங்கே பாருங்க... அதிசயத்தை வாங்குறதுக்கு என்கிட்ட காசு இருக்கு. இது பத்தலைன்னா சொல்லுங்க... மிச்சத்தையும் எப்படியாவது கொண்டுட்டு வர்றேன். அதோட விலை என்ன... அதை மட்டும் சொல்லுங்க...’’

இதுவரை நடந்த உரையாடல்கள் அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தார், மருந்துக்கடைக்காரரின் சகோதரர். ஆஜானுபாகுவான உடல்வாகுடன், நேர்த்தியான உடை அணிந்திருந்த அந்த மனிதர், கடையைவிட்டுக் கீழே இறங்கி, டெஸ்ஸின் அருகே வந்தார்.

``உன் தம்பிக்கு என்ன மாதிரியான அதிசயம் வேணும் பாப்பா?’’ என்று கேட்டார்.

``எனக்குத் தெரியலை. அம்மா அவனுக்கு ஆபரேஷன் செய்யணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அப்பாகிட்ட அதுக்குப் பணமில்லை. அதனாலதான் நான் என் காசை எடுத்துக்கிட்டு வந்தேன்.’’

``சரி... எவ்வளவு பணம்வெச்சிருக்கே?’’

``ஒரு டாலர், 11 சென்ட் சார்...’’

பரிசோதிக்கும் மருத்துவர்

மருந்துக்கடைக்காரரின் சகோதரர், டெஸ்ஸிடம் இருந்து அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டார். தன்னை அவள் வீட்டுக்கு பெற்றோர் குழந்தைஅழைத்துப்போகும்படி சொன்னார். ``நான் உன் அம்மா, அப்பா, தம்பியைப் பார்க்கணும். அப்போதான் உனக்குத் தேவையான அதிசயம் என்கிட்ட இருக்கானு என்னால சொல்ல முடியும்’’ என்றார்.

அவர் சாதாரண ஆளில்லை. டாக்டர். அதுவும், நியூரோ சர்ஜரியில் புகழ்பெற்றவர். டாக்டர் கார்ல் ஆர்ம்ஸ்ட்ராங் (Dr. Carl Armstrong) என்பது அவர் பெயர். டெஸ்ஸின் வீட்டுக்கு வந்தவர், ஆண்ட்ருவைப் பார்த்தார். பரிசோதித்தார். அறுவைசிகிச்சை செய்தார். அதற்காக ஒரு பைசாவைக்கூட அவர் மேற்கொண்டு கேட்கவில்லை. ஆண்ட்ரு பிழைத்துக்கொண்டான். 

சில மாதங்கள் கழித்து அம்மா, அப்பாவிடம் ஹாலில் பேசிக்கொண்டிருந்தது டெஸ்ஸின் காதில் விழுந்தது. ``அந்த ஆபரேஷன் உண்மையிலேயே அதிசயம்தான்... இல்லே? இந்த மாதிரி ஒரு ஆபரேஷனுக்கு எவ்வளவு பணம் செலவாகும்னு நான் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்.’’

இதைக் கேட்ட டெஸ் சிரித்துக்கொண்டாள். அவளுக்குத் தெரியும்... `ஒரு டாலர் 11 சென்ட்’ என்று. நமக்குத் தெரியும்... அந்தச் சிறுமியின் அசைக்க முடியாத நம்பிக்கை, தம்பியின் மேல் அவள் கொண்டிருக்கும் பாசம் என்று.

(அமெரிக்க வலைதளங்களில் மிகவும் பிரபலமான ஒரு கதை இது...)

***

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்