வெளியிடப்பட்ட நேரம்: 09:26 (04/12/2017)

கடைசி தொடர்பு:15:25 (04/12/2017)

சோலார் மீட்டர் கேட்டால் மின்வாரியத்தின் பதில் இதுதான்..! #VikatanExclusive

சோலார்


மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வாரம் ஒருமுறை சார்ஜ் போடப்பட்ட மொபைலுக்கே இன்று தினமும் இரண்டு முறை சார்ஜ் தேவைப்படுகிறது. வீடு ஸ்மார்ட் ஆக ஆக, மின்சாரத்தின் தேவை அதிகரிக்கிறது. சூடு வைக்கப்பட்ட ஆட்டோ மீட்டரைப் போல மின் மீட்டர் ஓடுகிறது. மின்சாரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்தாலும், அதற்கான மூலப்பொருள்களான புதைப்படிவ எரிபொருள் (fossil fuel), நிலக்கரி இயற்கை வாயுக்கள் போன்றவற்றின் அளவு குறைவாகவே உள்ளது. இதற்கு மாற்று வழியாக, புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களைப் (Renewable energy source) பயன்படுத்தும் கட்டாயத்தில் நாம் உள்ளோம். அத்தகைய வழிகளில் முதன்மையானது சூரியனிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் முறையே. 

பொதுமக்கள் பயன்பாட்டுக்கும் தொழிற்துறை பயன்பாட்டுக்கும் சூரிய மின்னாற்றலைப் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் மாசு அடைவதை கணிசமாகத் தடுக்கலாம். சோலாரை அதிகரிக்க வேண்டும் என்று எண்ணிய மத்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் ‘சூரிய ஒளியியல் மற்றும் சிறுசூரிய சக்தி மின்நிலைய திட்டத்தை' (Grid  connected solar rooftop and small power plant  scheme ) கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ம் தேதி அறிவித்தது.

இதன்படி, தங்கள் கட்டடத்தின் கூரையிலும் பயன்பாட்டில் இல்லாத நிலங்களிலும் சூரியத்தகடு (Solar panel) அமைக்கப்பட்டால், அதற்கு 30% மானியம் அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 

இத்திட்டத்தைச் செயல்படுத்த எண்ணிய பொதுமக்கள் மற்றும் தொழிற்சாலை நிறுவனங்கள் தங்கள் இடங்களில் சூரியத்தகடுகளை நிறுவினர். ஒரு சிலர் இத்திட்டத்தின்  நன்மையை அறிந்து கடனுதவி பெற்றும் சூரியத் தகடுகளை நிறுவினர். பின்னர் மின்சார உற்பத்தியைத் தொடங்க, தமிழக மின்சாரக்கழகம் வழங்கும் இருவழி எனர்ஜி மீட்டரைப் பெறச் சென்றபோது, பயன்பாட்டாளர்கள் மாதக்கணக்கில் அலைக்கழிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. விகடனிலும் சோலார் பற்றிய பதிவுகள் வரும்போது, கமென்ட் பாக்ஸில் பலர் இந்த மீட்டர் கிடைப்பதில்லை என்பதைக் குறிப்பிட்டிருந்தனர். இதைப்பற்றிய தகவல்களை அறிய சென்னையிலுள்ள ஒரு மின்சாரக் கழகத்துக்குச் சென்று அதிகாரிகளைச் சந்தித்தோம். ஊடகம் எனச் சொல்லாமல், சோலார் நிறுவ முயலும் வாடிக்கையாளர் என்று மட்டுமே அறிமுகப்படுத்திக்கொண்டோம்.

"சார்.. எங்க வீட்டுக்கு சோலார் பேனல் இன்ஸ்டால் பண்ணலாம்னு இருக்கோம். அதுக்கான ப்ராசஸ் பத்தி கொஞ்சம் சொல்லமுடியுமா?" எனத் தொடங்கினேன்

அதற்கு அவர் "மொதல்ல நீங்க உங்க பவர் கன்சம்ப்ஷன் கணக்குப் பண்ணி, அதற்கு ஏத்த இன்ஸ்டாலேஷன் கெபாசிட்டி இன்வாய்ஸ் வாங்கிட்டு வாங்க. அப்புறமா இதைப் பத்தி பேசலாம்"என்றார்.

"இன்ஸ்டாலேஷன் முடிச்சிட்டு பை டைரக்‌ஷனல் எனர்ஜி மீட்டர் விநியோகம் பண்றதுல தாமதம் ஆகுதுன்னு ஃப்ரெண்டு சொன்னான் சார். அது உண்மையா?" என்று நாங்கள் கேட்ட கேள்விக்கு, "நீங்க உங்க வீட்டுக்கு இன்ஸ்டாலேஷன் பத்தி கேக்கவந்தீங்களா? இல்ல மத்தவங்க வீட்டுக்கு ஏன் வரலனு கேக்க வந்தீங்களா" என்றார்.

அப்போது அங்கு வந்த இன்னொருவர், "ஒரு  சில இடத்துல டிமாண்ட் அதிகமாக இருப்பதால், இதுபோல நடக்க வாய்ப்பிருக்கு. அது தவிர்க்க முடியாதுதான். அப்ளை பண்ணுங்க. வந்துடும்" என்றார். 

solar meter

இதே திட்டத்தை அமல்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள், மக்கள் தங்கள் பயன்பாட்டுக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டு மீதமுள்ள மின்சார சக்தியை விநியோக நிலையத்துக்கு அளிப்பதற்கு தக்க சன்மானம் அளிக்கிறது. ஆனால், "சன்மானம் வழங்கவேண்டும் என்ற உத்தரவு இன்னும் பிறப்பிக்கப்படவில்லை" என்பதே அதிகாரிகளின் பதிலாக இருக்கிறது.

கடந்த ஏழு ஆண்டில் சூரிய மின்னாற்றலின் மூலம் மின்சார உற்பத்தி செய்வது பன்மடங்கு உயர்ந்துள்ளது. 2010-ம் ஆண்டில் 161 மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு உற்பத்தி எண்ணிக்கை 12,288 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. மாநில வாரியாக ஆந்திர மாநிலம் முதல் இடத்திலும் ராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும் தமிழகம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இத்தகைய திட்டத்துக்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தாலும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளின் ஒத்துழைப்பு குறைவாகவே உள்ளது. நடைமுறைப்படுத்தும் மக்களை வரவேற்றும், போதிய விவரம் தெரியாமல் உள்ள மக்களுக்கு விழிப்பு உணர்வையும் அரசு அளித்தால் பொதுமக்கள் பயன்பெறுவதுடன் பாதுகாப்பு நிறைந்த வளமான சுற்றுச்சூழல் அமையவும் இத்திட்டம் வழிவகுக்கும்.

மக்களுக்கு விழிப்பு உணர்வு இருக்கிறது. அரசுக்கும், அதிகாரிகளுக்கும்தான் அது தேவைப்படுகிறது.


டிரெண்டிங் @ விகடன்