அமீரகத்தில் கார் கழுவியே பல கார்களுக்கு அதிபரான இந்தியர்!

சுமார் 27 ஆண்டுகளுக்கு முன் அமீரகம் சென்ற இந்தியர் ஷாஜஹான் அப்பாஸுக்கு, மற்ற இந்தியர்களைப்போல் வேலை செய்துவிட்டு ஓய்வுக்குப் பிறகு இந்தியா திரும்பும் எண்ணமில்லை. அமீரகத்திலேயே, தொழில் தொடங்க வேண்டும் என்பதுதான் அவரின் இலக்கு. ஷாஜஹானின் தந்தை, அபுதாபியில் கார் கழுவும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். கேரளாவில் தகவல் தொடர்புத் துறையில் டிப்ளோமா பெற்றிருந்த ஷாஜஹானுக்கு, அரபி மொழியும் தெரியும். இந்தத் தகுதிகளுடன் அமீரகம் சென்ற அவருக்கு, தந்தையைப்போலவே கார் கழுவும் வேலைதான் கிடைத்தது. செய்யும் தொழில்தான் ஷாஜஹானுக்குத் தெய்வம். 

அமீரகத்தில் தொழிலதிபரான இந்தியர்

Photo courtesy : Kaleej Times

கார் கழுவும் வேலையை மனநிறைவுடன் செய்தார். எப்படியாவது வாழ்க்கையில் சாதித்துக்காட்ட வேண்டும் என்ற எண்ணம் மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது காலம் அந்த நிறுவனத்தில் ஷாஜஹான் பணிபுரிந்தார். பிறகு சேமிப்பை எல்லாம் திரட்டி, கார் கழுவும் நிறுவனத்தை உருவாக்கினார். அபுதாபியின் புறநகர்ப் பகுதியில் `ஒயாஸிஸ்' என்ற பெயரில் நிறுவனம் தொடங்கப்பட்டது. 

தன் படிப்பு, தன்னை உயர்த்தும் என்பதுதான் ஷாஜஹானின் நம்பிக்கை. நிறுவனத்தைத் தொடங்கியது முதல் கடுமையாக உழைக்க ஆரம்பித்தார். வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்தும் மனதைப் புரிந்துகொண்டும் பணியாற்றினார். விரைவிலேயே, அபுதாபி மக்களிடையே ஒயாஸிஸ் நிறுவனம் பிரபலமடைந்தது. கார் ப்ரியர்களான அரபிகளுக்கு, ஷாஜஹானின் தொழில்நேர்த்தி பிடித்துபோனது. ஒயாஸிஸ் கார் நிறுவனம் வளரத் தொடங்கியது. தன் நிறுவனத்தில் பணிபுரிபவர்களையும் கனிவுடன் நடத்தினார் ஷாஜஹான்.

ஒயாஸிஸ் கார் கழுவும் நிறுவனம் வெற்றிபெற்று பெரும் லாபம் ஈட்டியது. கிடைத்த லாபத்தை மற்ற துறைகளிலும் முதலீடு செய்தார். ரியல்எஸ்டேட், ஹெல்த் கேர் எனத் தொழிலை விரிவுப்படுத்தினார். அமீரகம் முழுவதுமே சலூன் கடைகளைத் திறந்தார். சூப்பர்மார்க்கெட்டுகளையும் ஆங்காங்கே ஏற்படுத்தினார். பணியாளர்களை இந்தியாவிலிருந்து வரவழைத்தார். ஏராளமான இந்தியர்களுக்கு அமீரகத்தில் அடைக்கலம் கொடுக்கும் நிறுவனமாக ஒயாஸிஸ் குழுமம் திகழ்ந்தது. 

ஷாஜகான் கால் வைத்த இடமெல்லாம் பணம் கொட்டியது. தொழிலை மென்மேலும் விரிவுப்படுத்திக்கொண்டு சென்ற ஒயாஸிஸ், இன்று அமீரகத்தில் பாப்புலரான நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அரபு நாட்டில் இந்தியர் தொழில் தொடங்கி, பெரிய நிறுவனமாக வளர்த்தெடுப்பது என்பது  சாதாரண விஷயமல்ல, சாதனைக்குரியது. 

ஷாஜகானின் சாதனையைப் பாராட்டி, புகழ்பெற்ற வளைகுடா பத்திரிகையான `கலீஜ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.  ஷாஜகான் அளித்துள்ள பேட்டியில் “1990-ம் ஆண்டு வெறுங்கையுடன் இந்த நாட்டுக்கு வந்தேன். ஆனால், தெளிவான பார்வை என்னிடம் இருந்தது. நான் படித்த படிப்பு என்னைக் கைவிடாது என்ற நம்பிக்கைகொண்டிருந்தேன். பிரச்னைகள் வராமல் இல்லை. அவற்றை எல்லாம் தைரியமாக அணுகினேன். பிரச்னைகளை அணுகத் தயங்கக் கூடாது. என்னைப் பலரும் ஏமாற்றிச் சென்றுள்ளனர். அந்தச் சமயங்களில் `தாய்நாட்டுக்குப் போய்விடலாமா?' என்றுகூட தோன்றும். பிரச்னைகள்தான் எனக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தன. ஒரு காலத்தில் கார் கழுவிய நான், இப்போது பல கார்கள் வைத்துள்ளேன். 

அமிரகத்தில் ஷாஜஹான் நடத்தும் கார் கழுவும் நிறுவனம்

Photo courtesy : Facebook

என் நிறுவனம் வளர்ந்துவிட்டாலும், கடைநிலை ஊழியர்களுடன் நின்று இப்போதும் பணிபுரிகிறேன். அமீரக அரசர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட பழக்கம் இது. அமீரகம் போன்ற நாடுகளில் மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் தொழில் புரிந்து வெற்றிபெறுவது கடினம் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். இங்கே நான் எவ்வளவு பிரச்னைகளை எதிர்கொண்டேனோ, அதே அளவுக்கு நல்ல மனிதர்களையும் சந்தித்தேன். அவர்கள் செய்த உதவிகளை மறக்க முடியாது'' என நெகிழ்ந்துள்ளார். 

ஷாஜகானுக்கு, ஃபாத்திமா என்கிற மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். அனைவருமே அமீரகத்தில்தான் வசித்துவருகின்றனர். தன் நிறுவனத்திலிருந்து கிடைக்கும் லாபத்தின் ஒரு பகுதியைக்கொண்டு இந்தியாவில் வசிக்கும் ஏழை மக்களுக்கு ஷாஜஹான் உதவி செய்துவருகிறார். 

உழைப்பு, உயர்த்தும் என்பதற்கு ஷாஜஹான் ஓர் உதாரணம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!