வெளியிடப்பட்ட நேரம்: 21:54 (04/12/2017)

கடைசி தொடர்பு:22:26 (04/12/2017)

கோட்டைச்சாமி... தொழிலாளிகளுக்காக வெண்கலக் குரலில் பாடிய செம்போத்துப் பறவை!

 மகள்:   "அம்மா பாவாடை சட்டை கிழிஞ்சு போச்சுதே 

                என்ன பள்ளிக்கூட பிள்ளையெல்லாம் கேலி பேசுதே

 

அம்மா:  கையிலொரு காசுயில்ல தெரிஞ்சுக்க கண்ணே

                 ஏழை கடன் கேட்டா கெடைக்காது புரிஞ்சுக்க கண்ணே"

தன் கிழிந்து போன பாவாடையை மாற்றி புதுசு வாங்கித் தரச் சொல்லும் ஏழைச் சிறுமிக்கும், வறுமையை மட்டுமே ஆகப் பெரும் சொத்தாகக் கொண்டிருக்கும் ஆடு மேய்க்கும் அவளது தாய்க்கும் இடைய நிகழும் உரையாடலைப் போல இருக்கும் இந்த கிராமியப் பாடல். மேடையில் இந்த நாட்டுப்புறப்பாடலை மாரியம்மாளும், கோட்டைச்சாமியும் தாயும், மகளுமாக மாறி மாறி பாடியபோது கள்ளி முள் தைத்த தங்கள் பாதங்களை வருடியபடியே தங்களுக்கான குரலைக் கேட்டது போல மனதுக்கு நெருக்கமாக உணர்ந்தனர்.

ஆம், கோட்டைச்சாமி கிராமத்துத் தாய்மார்களுக்காக, உழைத்துக் களைத்த விவசாயிகளுக்காக, ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்காக, தங்கச்சிப் பாப்பாக்களை வளர்க்கும் சிறுமிகளுக்காக, சுரண்டலை கேள்வி கேட்கும் தொழிலாளி வர்க்கத்துக்காக மேடையில் வெண்கலக் குரலில் பாடிய செம்போத்துப் பறவை. குரலையும், நினைவுகளையும் நம்மிடத்தே விட்டுவிட்டு டிசம்பர் 3-ம் தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார் கோட்டைச்சாமி. நாட்டுப்புற பாடல்களையும், நாட்டுப் புறபாடல்களின் வழியே கம்யூனிச கருத்துகளையும் கிராமத்து மக்களுக்குக் கொண்டு சேர்த்த பாவலன் கோட்டைச்சாமி.

கோட்டைச்சாமி

 

சிவகங்கை மாவட்டம் வேலங்குளம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைச்சாமி, சிறு வயது முதலே கிராமியப் பாடல்கள் பாடி வந்தவர். முதன்முதலாக நாட்டுப்புறப் பாடல்களை மேடை போட்டு பாட ஆரம்பித்த சிலரில் கோட்டைச்சாமி முக்கியமானவர். மறைந்த நாட்டுப்புற பாடகர், பேராசிரியர் கே.ஏ. குணசேகரனுடன் இணைந்து பல பாடல்களைப் பாடியுள்ளார். தொடர்ச்சியாக நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வந்த கோட்டைச்சாமி, தோழர் எஸ்.ஏ.பெருமாள் மூலம் பொதுவுடைமைப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். கம்யூனிச மேடைகளில் தோன்றி கோட்டைச்சாமி பாடிய பாடல்கள், பாட்டாளி வர்க்கத்தின் குரலாய் ஒலித்தன. உழைத்து, உழைத்து களைத்துப் போன கிராமத்து மக்கள் சுரண்டப்படும் கொடுமையை, தன் பாடல்களின் கண்ணிகளில் சேர்த்துப் பாடினார். மறக்காமல், வரிசையில் காத்து நின்று ஓட்டுப் போட்டு ஏமாந்த மக்களின் மனக்குரல்களை, அதிகார வர்க்கத்துக்குத் தன் குரல் மூலம் கொண்டு சென்ற மக்கள் பாடகர் அவர்.

"என்னம்மா தேவி ஜக்கம்மா
ஒலகம் தலைகீழா சுத்துதே நியாயம்மா..!

இப்ப சின்னஞ்சிறுசெல்லாம்
சிகரேட்டு புடிக்குது
சித்தப்பம்மார்கிட்ட 
தீப்பெட்டி கேக்குது..

இப்ப காய்கறி கடையில
கால்வைக்க முடியல்ல..
கருவாட்டுக் கடையில
தலைகாட்ட முடியல்ல...

அடி..என்னம்மா தேவி ஜக்கம்மா
ஒலகம் தலைகீழா சுத்துதே நியாயம்மா..!" 

என, கே.ஏ குணசேகரனுடன் அவர் தெருக்களில் பாடிய பாடல்கள் மக்களைச் சிந்திக்க வைத்தன. அவருடனான பழக்கம் குறித்தும் அவரது பாடல்கள் குறித்தும் அவரது தோழரும், நாட்டுப்புறக் கலைஞருமான பூபாளம் பிரகதீசுவரனிடம் பேசினோம்.

கோட்டைச்சாமி

" கோட்டைச்சாமி நாட்டுப்புறப் பாடல்களை நாட்டுப்புற பாடல்களுக்கே உரிய தன்மையுடன் கடைசி வரை பாடி வந்த மகா கலைஞன். நாட்டுப்புறக்கலை எந்த மக்களுக்காக உருவானதோ அல்லது எந்த மக்கள் அதை உருவாக்கினார்களோ அவர்களின் குரலாகவே பாடியவர். இறுதி வரையிலும் பாடல்களை கண்ணி அமைப்பிலேயே பாடியவர். பலரும் பல்வேறு மாற்றுமுறைகளில் ராகம் அமைத்துப் பாடிய போதும், தன் கலையை அதன் இயல்பிலேயே பாடியவர். நாட்டுப்புற பாடல்களைத் திருவிழாக்களில், மேடைகளில் ஆரம்ப நிலைகளிலேயே பாடியவர். அவரது இழப்பு பேரிழப்பு. கம்யூனிச மேடைகளில் கடைசி வரை பாடியவர். எப்போதும் மக்கள் நலன் சார்ந்த, மக்களுக்கான குரலாகவே அவர் இருந்து வந்தார்’’ என, அவரது பாடல்கள் சிலவற்றை பாடிக் காட்டினார்

"காரு போட்டு ஓடிவந்து 

கையெடுத்து சலாம் போட்டு;

அம்மானு அக்கானு 

அவசரமா உறவ சொல்லி 

ஓட்டு கேட்டு வந்தாங்களே சின்னாத்தா

இப்ப ஒருத்தரையும் காணலியே என்னாத்தா" எனத் தன் இரங்கலை பதிவு செய்தார்.

தங்கள் பிரச்னைகளை, வலிகளைச் சொல்ல வாய்ப்பில்லாத ஏழை மக்களின் குரலாய் ஒலித்துக் கொண்டிருந்தவர் கோட்டைச்சாமி. கிராமத்துக் காற்றில் கரைந்து கிடக்கும் அவரது குரல், குடிசை வீட்டுத் தாயின் தாலாட்டாய் ஆட்டுக் குட்டிகளின் கழுத்து மணி ஓசைக்கு இசைவாய் ஒலித்துக்கொண்டே இருக்கும்.


டிரெண்டிங் @ விகடன்