நோக்காலிகாய்... சிரபுஞ்சி அருவிக்கு இந்தப் பெயர் வந்த கொடூர கதை தெரியுமா? #NohkalikaiFalls

சிரபுஞ்சி அருவி

மேகாலயா மாநிலம் மலைகளுக்கு மட்டுமல்ல; மழைக்கும் அருவிக்கும் பெயர்பெற்றது. இந்தியாவில் அதிக மழைப்பொழியும் மாநிலம் மேகாலயாதான். மழை என்றதும் நமக்கு சிரபுஞ்சிதான் நினைவுக்கு வரும். இந்தியாவில் அதிக மழைப் பொழியும் இடம் சிரபுஞ்சி என்றுதான் பள்ளியில் படித்திருப்போம். ஆனால், உண்மையில் முதலிடத்தில் இருக்கும் ஊரின் பெயர் மாவ்சின்ராம். சிரபுஞ்சியிலிருந்து சில கி.மீ தூரத்தில் உள்ளது இந்த ஊர். மழை விஷயத்தில் இதற்கும் சிரபுஞ்சிக்கும் கடும்போட்டிதான்.

சிரபுஞ்சி நகரம் மேகாலயா தலைநகரம் ஷில்லாங்கிலிருந்து 70 கி.மீ தூரமிருக்கும். மலைகளில் பயணிக்க வேண்டும் என்பதால் 2 மணி நேரம் ஆகிறது. சிரபுஞ்சிக்குள் கார் நுழைந்ததுமே ஓட்டுநர் “வந்தாச்சு” என்றார். ஆனால், நகரில் இருந்த போர்டுகள் அனைத்திலும் SHORA என்றே எழுதப்பட்டிருந்தது. ”யார ஏமாத்துறீங்க” என்றதற்கு ஒரு கதை சொன்னார் ஓட்டுநர்.

அந்த ஊரின் பெயர் ஷோராதான். எளிதில் இந்தியாவுக்குள் நுழைந்த வெள்ளைக்காரர்களின் வாயில் அந்த இரண்டு எழுத்துகள் நுழையவில்லை. தூத்துக்குடியை tuticorin என்றாக்கியதைப் போல இந்தப் பேரையும் மாற்றிவிட்டார்கள். சிரபுஞ்சி என்றால் “ஆரஞ்சுகளின் நிலம்” என்று அர்த்தமாம். மெட்ராஸ் சென்னை ஆனதுபோல, கல்கத்தா கொல்கத்தா ஆனது போல மேகாலயா அரசும் சிரபுஞ்சியை பழைய பெயரான ஷோரா என்றே மாற்றியிருக்கிறது. ஆக, நாங்கள் போனது ஷோராக்குத்தான்.

Mawsmai Caves:

குகை


ஷோராவின் முதல் அதிசயம் மாஸ்மாய் குகைகள் (Mawsmai Caves) தான். குகைக்குச் செல்லும் வழியெல்லாம் சொர்க்கம்தான். ஒருபக்கம் ஆழமான பள்ளத்தாக்கு. இன்னொரு புறம் மலை. அந்த நுனியில் அழகாய் செப்பனிடப்பட்டிருக்கும் பாதையில் நடந்து செல்வது அழகான அனுபவம். திரும்ப மனமின்றி அப்படியே போய்க் கொண்டேயிருக்கலாம். குகைக்குள் சென்றால் அது இன்னொரு சொர்க்கம். ஓரிடத்தில் தவழ்ந்துதான் செல்ல வேண்டும். இன்னொரு இடத்தில் 40 அடி உயரம். இயற்கையாக உருவான இந்தக் குகைக்குள் நடந்தால் போய்க்கொண்டேயிருக்கலாம். அவ்வளவு நீளம். ஆங்காங்கே விளக்குகள் போட்டிருக்கிறார்கள். அதனால் பயமில்லை; பரவசம் மட்டுமே.

சிரபுஞ்சி

அங்கிருந்து நாம் போனது ஜீவா ரிசார்ட்ஸ் என்ற ஹோட்டலுக்கு. இங்கிருக்கும் அறைகள் வேறு எங்கும் பார்க்க முடியாதவை. அறை ஜன்னலின் வழியே எட்டிப்பார்த்தால் பள்ளத்தாக்கு. கதவைத் திறந்தால் சமவெளி. மைக்கேல் மதன காமராஜனின் க்ளைமாக்ஸ் வீடு போல நம்மை பதற்றத்திலே வைத்திருக்கும். ஷோராவின் மிக முக்கியமான ரிசார்ட் இது.

Nohkalikai Falls:

நோக்காலிகாய் அருவி


ஷோராவிலிருந்து சில கி.மீ தொலைவில் இருக்கிறது நோக்காலிகாய்(Nohkalikai) அருவி. உலகின் நான்காவது பெரிய அருவி. 1115 அடி உயரம் கொண்ட அருவியில் குளிக்கவெல்லாம் முடியாது. தூரத்திலிருந்து தரிசனம் மட்டுமே. ஆனால், அதுவே எல்லையில்லா ஆனந்தம் தரவல்லது. இந்த அருவிக்கும் ஒரு கதை இருக்கிறது. நிச்சயம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அருவியை மறக்காமல் இருக்கவும், ஷோரா வந்தவர்கள் இந்த அருவியைப் பார்க்காமல் போகவும் விடாத கதை.

லிகாய் என்பது அந்தப் பெண்ணின் பெயர். திருமணமாகி ஒரு குழந்தையும் அவளுக்கு இருந்திருக்கிறது. திடீரென அவள் கணவன் இறந்துவிடுகிறான். லிகாய் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறாள். புதிய கணவன் குழந்தையையும் அவளையும் நன்கு பார்த்துக்கொள்கிறான். சில நாள்களில் அவன் சுயரூபம் தெரிகிறது. அவளை வேலைக்குச் செல்லுமாறு அடிக்கிறான். அந்தப் பணத்தில் வாழ்கிறான். ஒருநாள் வேலையிலிருந்து வீடு திரும்புகிறாள்; வீட்டில் இருவரையும் காணவில்லை. ஆனால், மேஜையில் உணவு தயாராக இருந்திருக்கிறது. களைப்பாக இருந்த அவளுக்கு பசித்தது. உணவை சாப்பிடுகிறாள். சாப்பிட்டபின் வெற்றிலைப் போட கூடையை எடுக்கிறாள். உள்ளே அவள் மகளின் கைவிரல் துண்டாக கிடக்கிறது. நல்லவன் போல் நடித்தவன் குழந்தையைக் கொன்று, அதை சமைத்தும் வைத்திருக்கிறான். தன் மகளை தானே தின்றுவிட்டோமே என்ற சோகத்தில் லிகாய் அருகிலிருக்கும் அருவியில் குதித்து உயிரை விட்டிருக்கிறாள். அந்த இடம் தாம் நோக்காலிகாய் அருவி. Noh என்றால் குதிப்பது என்ற அர்த்தம். லிக்காய் குதித்த இடம் என்பதே Nohkalikai.

”இனி அருவியைப் பார்க்குறப்பலாம் இதுதானடா ஞாபகத்துக்கு வரும்” என வடிவேலு போல புலம்ப விடுகிறார்கள்.

ஷோரா மலையுச்சி. எங்கிருந்து பார்த்தாலும் பள்ளத்தாக்கு. ஷோராவின் என்ன பார்த்தோம் என்பதைவிட ஷோராவைப் பார்த்தோம் என்பது போதுமானதாக இருக்கிறது. மிஸ் பண்ணிடாதிங்க.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!