Published:Updated:

சென்னைக்கு உதவியவர்கள் குமரிக்கு உதவ வருவார்களா?

இரா.வாஞ்சிநாதன்
ச.அ.ராஜ்குமார்
சென்னைக்கு உதவியவர்கள் குமரிக்கு உதவ வருவார்களா?
சென்னைக்கு உதவியவர்கள் குமரிக்கு உதவ வருவார்களா?

டந்த 30-ம் தேதி வங்கக்  கடலில் உருவான 'ஒகி'  புயல் குமரி  மாவட்டத்தை பலத்த சேதத்திற்கு உள்ளாக்கியது. இதில் நூற்றுக்கணக்கான வீடுகளிலும் 3000க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் மரங்களும் பெரும்  சேதாரம் அடைந்துள்ளன.

இதையடுத்து நேற்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் கேட்டு குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சென்னைவாசிகள் ஒருங்கிணைத்த நிகழ்வு சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்தது.அதில் பேசிய ஜெகத் கஸ்பர் ராஜ்,"கடந்த 20ஆம் தேதி உருவான புயலைக்  கூட கண்டறியாமல் இந்திய வானிலை மையம் செயல்பட்டுள்ளது. இதுவரை வந்துள்ள தகவலின்படி,குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 200க்கும் மேலானோர் காணவில்லை,3000 பேர்வரை உதவி தேடி தஞ்சம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் நிலப்பரப்பில் வாழை, ரப்பர், தென்னை போன்ற பல்லாயிரக்கணக்கான மரங்கள் சேதமடைந்துள்ளன. குமரி மாவட்டத்தில் உள்ள பாதிப்பை ஆய்வு செய்ய , 'விவசாய உற்பத்தி ஆணையர் மற்றும் முதன்மைச் செயலாளர்' ககன்தீப் சிங் அவர்கள் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்றை அமைக்க தமிழக அரசை வேண்டுகிறோம். இந்தப் பேரிடருக்கு முக்கியக் காரணம் ஆறு வழி  கொண்ட தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதே ஆகும். நீர் ஓடும் வழியில் அதைத் தடுத்து ,சாலைகள் அமைத்ததால், தற்போது நீர் செல்ல வழியில்லாமல் போனது. நீரின் போக்குவரத்தை அறிந்து சாலை அமைத்திருந்தால் இந்தப் பாதிப்பைத்  தவிர்த்திருக்கலாம். அமைச்சர்கள் குமரி மாவட்டத்தை வந்து பார்வையிட வேண்டும் என்று இல்லாமல், தங்களுக்குக் கீழ் உள்ள அரசு அதிகாரிகளை இதற்கான துரித வேலைகளில் ஈடுபடுத்தினாலே போதுமானது. சென்னையில் மட்டும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் இரண்டரை லட்சம் பேர் வசிக்கின்றோம். மேலும் வரும் 14ஆம் தேதி அனைத்துக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, இது தொடர்பான எங்கள் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம்." என்றார்.

பின்னர் பேசிய மூத்த பத்திரிகையாளர் அருள் எழிலன், "தமிழகத்தின் 'வெதர் மேன்'  என்று கூறப்படும் பிரதீப் ஜான் 'நவம்பர் இறுதியில் குமரி மாவட்டத்தைப் புயல்தாக்க வாய்ப்புள்ளது' என்று கணித்தார். ஆனால் புயலைப் பற்றிய எந்த ஒரு விவரத்தையும் இந்திய வானிலை நிலையம் முன்கூட்டியே அறிவிக்கவில்லை" என்றார். இதனால் மீனவ குடும்பங்கள் தற்போது உயிரழப்பைச் சந்தித்துவருகிறது. எனவே இந்த நிகழ்வை பேரிடராக அறிவித்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் உரிய நிவாரண உதவிகளை அரசு செய்ய வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஷாநவாஸ் பேசுகையில்,"கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெரும் வெள்ளம் வந்த போது,'100 ஆண்டுகளில் தமிழகம் காணாத பாதிப்பு இது ' என்று தமிழக அரசு கூறியது. ஆனால் இப்போது குமரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்திற்கு என்ன காரணம் கூறி தப்பிக்கவுள்ளனர் எனத் தெரியவில்லை. தற்போது வரை பொதுமக்களே தங்களுக்குத் தேவையான நிவாரணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அரசு சார்பாக எந்த ஒரு உதவியும் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் இல்லை"என்றார்,

மேலும் இக்கூட்டத்தில் மூத்த பத்திரிகையாளர் அபு பக்கரும் பேசினார். கூட்டத்தில் பேசிய அனைவரும், புயலால் திசை மாறிப்போன மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்க உதவிய கேரள முதல்வர் பினராயி  விஜயனுக்கும், கோவா முதல்வர் மனோகர் பாரிக்கருக்கும் மற்றும் மஹாராஷ்ட்ரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸுக்கும் நன்றி கூறினார்கள்.