Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்திய வரலாற்றில் டிசம்பர் 6 முக்கியமான நாள்... குறும்படம் சொல்லும் குறியீடு!

Chennai: 

கோடம்பாக்கத்தை கனவாகக்கொண்ட பலரும் தங்களின் திறமையை குறும்படம் மூலமாகவே வெளிப்படுத்திவருகின்றனர். அசுர வளர்ச்சியாக யூடியூப் எங்கும் நிரம்பி வழிகின்றன குறும்படங்கள். ஆனால், அவற்றிலும் பெரும்பான்மை கமர்ஷியல் படங்களின் குறுகிய வடிவமாகவே  உள்ளன. அரசியல் சார்ந்தோ, திரைப்படங்களின் வழியே சொல்ல முடியாத சிரமமான கதைக் களங்களையோ அல்லது பரீட்சார்த்த முயற்சியோ பல குறும்படங்களில் இருப்பதில்லை. அவ்வாறு இல்லாமல், தனித்தன்மையுடன் வெளிவந்துள்ளது 'டிசம்பர் 5,6  குறும்படம்'.

டிசம்பர் 5,6 குறும்படம்

 

சென்ற ஆண்டு இதேசமயம், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்தார். அவர் இறந்த அன்று இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட குறும்படம்தான் டிசம்பர் 5,6. குறும்படம் என்ற கலை வடிவத்தை கச்சிதமாகக் கையாண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. காட்சி ரீதியாகவும், உள்ளடக்க ரீதியாகவும் வலுவானதொரு படைப்பாக வெளிவந்துள்ளது.

தலைப்பில் தொடங்கி படத்தில் காட்டப்பட்டுள்ள சுவர், கதாபாத்திரத்தின் பெயர், கதவு, பேருந்து என காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அனைத்தும் அரசியல் பேசியுள்ளன. படத்தின் ஆகப் பெரும் பலமே, பிரசாரமாக இல்லாமல் காட்சியின் வழியாகவே படத்தை நகர்த்தியிருப்பதுதான். படத்தின் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான சுஜித்திடம் பேசினோம். யூடியூபில் பிரபலான 'நக்கலைட்ஸ் ' சேனலின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் இவர்.

டிசம்பர் 5,6 குறும்படம்

பொலிட்டிக்கல் சட்டையர், அப்பா- மகள் அலப்பறைகள், அம்மா -மகன் அலப்பறைகள் என வெரைட்டியான வீடியோக்களைத் தயாரித்து வெளியிடும் 'நக்கலைட்ஸ்' மற்றும் இக்குறும்படம் உள்ளிட்ட பல விஷயங்கள்குறித்து பேசினோம். 

"ஷார்ட் ஃபிலிம் எடுக்கணும்னு பிளான் பண்ணிலாம் எடுக்கல தலைவா. போன டிசம்பர் 5-ம் தேதியும் 6-ம் தேதியும் நைட் கோயம்புத்தூர் எப்படி இருந்ததுனு லைவ் ஷூட் பண்ணிருந்தேன். நான் திருப்பூர்ல இருந்து வந்து கோயம்புத்தூர்ல தங்கியிருக்கேன். அன்னைக்கு நைட்  சாப்பிட போனப்ப எந்தக் கடையுமே இல்ல. ஏ.டி.எம்-லயும் காசே இல்ல. அதை அப்படியே டாக்குஃபிக்‌ஷன் மாதிரி பண்ணலாம்னு பண்ணினதுதான். கிட்டதட்ட எல்லா ஊர்லயுமே என்னைய மாதிரி சிலர் இருந்துருப்பாங்க. அப்படி யோசிச்சு பண்ணினது தான்" என்றார் சுஜித். ‛படத்துக்கு எவ்வளவு செலவு’ எனக் கேட்டதற்கு, "செலவல்லாம் இல்லை தலைவா. நண்பர்களோட சேர்ந்து ஜீரோ பட்ஜெட்ல எடுத்தது’’ என்றார், விஸ்காம் படித்து, திரைப்படம் இயக்கும் முயற்சியில் உள்ள சுஜித்.

டிசம்பர் 5,6 குறும்படம்

“நடக்குமென்பார் நடக்காது" என்ற எம்.ஜி.ஆர் பாடலுடன் தொடங்கும் குறும்படம். சிறுபான்மை சமூகத்தினைத் தொடர்ந்து தவறாகவே சித்திரித்து வரும் இன்றைய காலப்போக்கிலிருந்து விலகி நிதர்சனத்தைக் காட்சிப்படுத்தியுள்ளது. கடந்த ஓராண்டாக சாமானியர்கள் அனுபவித்துவரும் பிரச்னைகள் பலவற்றைப் போகிற போக்கில் காட்சிப்படுத்தியுள்ளனர். டிசம்பர் 6 இந்திய வரலாற்றில் ஏன் மிக முக்கியமான நாள் என்பதை படத்தின் இறுதிக் காட்சிகள் விவரிக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை, எடிட்டிங் என அனைத்திலுமே ஸ்கோர் செய்துள்ளனர். கலை எப்போதுமே மக்களுக்கானது. அது மக்களை, மக்களின் வாழ்வை, மக்களுக்கான அரசியலை பிரதிபலிக்கக் கூடியது என்பதற்கு இக்குறும்படம் சிறந்த உதாரணம். மக்களுக்கான புரட்சியை, அரசியலை கலைகளின் வழியாகவும் முன்னெடுக்க முடியும் என உணர்த்தியிருக்கிறது டிசம்பர் 5,6 குறும்படக் குழு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ