Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

விமர்சனங்களைப் புறம் தள்ளுங்கள்... வெற்றி மிக அருகில் - ஓர் உற்சாகக் கதை! #MotivationStory

கதை

போராடும் குணத்தைக் கைவிட மறுக்கும் மனிதனுக்கு வெற்றி என்பது எப்போதுமே சாத்தியமான ஒன்றுதான்’ என்கிறார் பல சுயமுன்னேற்ற நூல்களை எழுதியிருக்கும் அமெரிக்க எழுத்தாளர், நெப்போலியன் ஹில் (Napoleon Hill). எது வந்தாலும் மோதிப் பார்த்துவிடத் துணிகிற மனிதர்கள்தான் எந்தத் துறையில் இருந்தாலும் சாதிக்கிறார்கள். அதற்கு மன உறுதி, தைரியம் எல்லாம் வேண்டும். பயிரை வளர்க்கிறீர்களா... அதை அறுவடை செய்தே ஆக வேண்டும். இல்லையென்றால் நிலம்தான் பாழாகப் போகும். ஒரு வேலையை ஆரம்பித்தால், அதன் இறுதிக்கட்டம் வரை நின்று பார்த்துவிட வேண்டும். இல்லையென்றால் அதுவரை செய்த முயற்சி, செலவழித்த சக்தி, பொருள் அத்தனையும் வீணாகத்தான் போகும். இந்தக் கதை அந்த உண்மையைத்தான் அழுத்தம் திருத்தமாக உணர்த்துகிறது.

பால்

அவர் பெயர் ஸ்டூவ் லியோனார்டு (Stew Leonard). இருபத்தோரு வயது. வாழ்க்கையின் அத்தனை சந்தோஷங்களையும் கொண்டாடித் தீர்த்துவிடத் துடிக்கும் இளமைப் பருவம். கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகியிருந்தன. சில வேளைகளில் ஒரு பேரிழப்பு, பெரிய பொறுப்பைத் தலையில் சுமக்கவைத்துவிடும். ஸ்டூவ் விஷயத்தில் நடந்தது அதுதான். அதுவரை குடும்பத் தொழிலைப் பார்த்துக்கொண்டிருந்த அப்பா இறந்துபோனார். அந்தத் தொழிலைப் பார்க்கவேண்டிய மிகப் பெரிய பொறுப்பு ஸ்டூவிடம் வந்தது.

ஸ்டூவின் குடும்பத்தினரின் பரம்பரைத் தொழில் பால் வியாபாரம். பண்ணையில் சில மாடுகள் வைத்திருந்தார்கள். பாலைக் கறந்து, வீடு வீடாகக் கொண்டுபோய் விநியோகிக்கும் வேலை ஸ்டூவுக்கு. அவர் திறமைசாலி. துறுதுறுப்பானவர். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறிவிட வேண்டும் என்கிற வேட்கை கொண்டவர். அன்றாடம் உலகம் முழுக்க நடக்கும் பல மாற்றங்களை அசைபோடுபவர். பல புதிய நுட்பங்களைத் தன் தொழிலில் புகுத்த வேண்டும் என்கிற ஆர்வம் நிறைந்தவர். அது ஃபிரிட்ஜ் (Refrigerator) அறிமுகமாகியிருந்த காலம். அதைக்கொண்டு என்னென்னவோ செய்யலாம் எனத் திட்டம் போட்டார் ஸ்டூவ். `தயிர், சீஸ், நெய்... எனப் பலவிதமான பால் பொருள்களைப் பதப்படுத்தி வைக்க ஏற்றது. மொத்தமாக நிறைய ஃபிரிட்ஜ்களை வாங்கி, பால் பொருள்களுக்காகவே ஒரு கடையை (Dairy Store) ஆரம்பித்தால் என்ன என நினைத்தார்.

சூப்பர் மார்க்கெட்

கையில் இருந்த பணத்தைக் கொண்டு, லோன் வாங்கி ஒரு கட்டடத்தைக் கட்டவும் ஆரம்பித்துவிட்டார். அங்கே நிறைய வாடிக்கையாளர்கள் வருகிறார்கள்; அவர் கடையில் பாட்டில்களில் சேமித்துவைத்திருக்கும் பால், ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டிருக்கும் நெய், சீஸ் முதலான பால் பொருள்களைக் கண்ணாடி வழியாகப் பார்க்கிறார்கள்... இப்படியெல்லாம் கனவு கண்டார். ஒரு விஷயத்தை முன்னெடுத்துச் செய்யும்போதுதான் பல இடக்கான வேலைகளும் நடக்கும். நாலு பேர் நாலுவிதமாகப் பேசுவார்கள். `இதெல்லாம் வேலைக்காகாது’, `இவ்வளவு செலவழிச்சுப் பண்ற தொழில் எப்படி நடக்குது பார்க்கலாம்’ என்றெல்லாம் குத்தலாகப் பேசுவார்கள். ஸ்டூவ் விஷயத்தில் இதுதான் நடந்தது.

கடைக்கான கட்டட வேலை முக்கால்வாசி முடிந்திருந்தபோது, பலரும் சந்தேகம் கிளப்பினார்கள். `சூப்பர் மார்க்கெட்டுக்குப் போற ஒருத்தர் பால் பொருள்களை வாங்குறதுக்காக தனியா உங்க கடைக்கு ஒரு ட்ரிப் அடிப்பாரா?’ என்று கேள்வி கேட்டார்கள். ஒரு எதிர்மறையான விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, எப்படிப்பட்ட தைரியசாலியும் தளர்ந்துபோய்விடுவான்; மனமொடிந்து போவான். ஸ்டூவும்கூட ஒரு கட்டத்தில் சோர்ந்துதான் போனார். கடையின் கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கொண்டிருந்தவர் ஒருநாள், இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டார்... ``இதுவரை ஒரு லட்சம் டாலருக்கு மேல செலவழிச்சிட்டோம். இதுக்கு மேல தாங்க முடியாது. இன்னும் அதிகமா செலவழிச்சு, கடை வியாபாரம் நல்லா நடக்கலைன்னா, திவாலாகிவிடுவோம்.’’

அன்று இரவு ஸ்டூவுக்குத் தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தார். பிறகு எழுந்து, கீழே வந்தார். கெட்டிலில் இருந்த காபியை எடுத்து, சூடுபடுத்திக் குடித்தார். அங்கேயே அமர்ந்து ஆர அமர யோசித்தார். கடை நடத்துவதில் இருக்கும் பாசிட்டிவ், நெகட்டிவ் இரு அம்சங்களையும் அசைபோட்டார். எதிர்மறை அம்சங்கள் பெரிய பட்டியலாக நீண்டிருந்தன. நேர்மறைக்குக் கொஞ்சமே கொஞ்சம் வாய்ப்புத்தான் இருந்தது. அந்த நேரத்தில் ஸ்டூவ் இறைவனிடம் வேண்டினார்... `என் பிரச்னைகளையெல்லாம் தீர்த்துவை ஆண்டவரே’ என்று அல்ல. `பிரச்னைகளை எதிர்கொள்ளும் தைரியத்தையும் சக்தியையும் எனக்குக் கொடு கடவுளே’ என்று பிரார்த்தித்தார். அங்கேயே அமர்ந்திருந்தார்.

பால் நிறுவனம்

அடுத்த நாள் ஸ்டூவின் மனைவி மர்யான் (Maryann) எழுந்து கீழே வந்தார்.

“இங்கே என்ன பண்றீங்க?’’

`எனக்கு ரொம்பக் கவலையா இருக்கு மர்யான்.’’

``ஏன்?’’

``நம்ம தொழில் நல்லா நடக்காதுனு பல பேர் சொல்றாங்க. அது உண்மையாகிடுச்சுன்னா, நாம நொடிச்சுப் போயிடுவோம்.’’

``நெகட்டிவா பேசறவங்களோட வார்த்தைகளுக்கு மதிப்புக் குடுக்காதீங்க. நாம் யாருக்கு என்ன கெடுதல் செஞ்சோம்? ஒரு தொழிலை ஆரம்பிச்சு நடத்தப்போறோம். அவ்வளவுதானே.. தைரியமா இருங்க. ஒரு நிமிஷம்...’’ என்றவர் தன் அறைக்குப் போனார். திரும்பி வந்தபோது அவர் கையில் ஒரு சின்ன ஹேண்ட் பேக் இருந்தது. அதில் கைவிட்டு எதையோ எடுத்தார்.

``இந்தாங்க... இதுல 3,300 டாலர் பணம் இருக்கு. இது, என் அம்மா எனக்காகச் சேர்த்துவெச்சிருந்த பணம். இதை நம்ம பிள்ளைங்களோட படிப்புக்கு ஆகுமேனு எடுத்துவெச்சிருந்தேன். இந்தப் பணத்தையும்வெச்சுக்கோங்க. ஆனா, நீங்க தொழில் நடத்தி நல்ல லாபம் சம்பாதிச்சதுக்குப் பிறகு, அதை எனக்குத் திருப்பிக் குடுத்துடணும்... சரியா?’’

கடை

ஸ்டூவுக்கு உடம்பில் புது ரத்தம் பாய்ந்ததுபோல் இருந்தது. மனைவியை அன்போடு அணைத்துக்கொண்டார்... நன்றி சொன்னார். என்ன நடந்தாலும் ஒருகை பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தார். விமர்சனங்களை இடது கையால் ஒதுக்கித் தள்ளினார். கடையை ஆரம்பித்தார். அவருடைய வியாபாரம் சூடுபிடித்தது. பல கிளைகளுடன் பரந்துவிரிந்தது. உலகின் சக்சஸ்ஃபுல் தொழில்களில் ஸ்டூவ் லியோனார்டின் டெய்ரி ஸ்டோரும் ஒன்று.

***

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement