வெளியிடப்பட்ட நேரம்: 11:51 (06/12/2017)

கடைசி தொடர்பு:16:30 (06/12/2017)

“பெண்களுடன் இயல்பாகப் பேசிப் பழக, தயக்கத்தைத் தரும் அந்த விஷயம்" ஓர் ஆணின் குற்றவுணர்வு பதிவு #SpeakUp #உடைத்துப்பேசுவோம்

சென்னையில் சாப்ட்வேர் துறையில் பணிபுரிபவர், பரணிதரன். அவரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இன்றும் குற்றவுணர்வோடு நினைவுகூர்கிறார். 

பெண்கள்

"எங்க ஊர் சின்ன நகரம். பதின்ம வயதுக்குரிய விருப்பங்கள் எனக்குள் படர்ந்திருந்த காலம். அப்போது நடந்த ஒரு சம்பவம் இப்பவும் மனசுக்குள் குறுகுறுப்பை ஏற்படுத்திட்டே இருக்கு. 

நான் ப்ளஸ் டூ படிச்சுட்டிருந்த நேரம். நண்பர்களோடு எப்பவும் மகிழ்ச்சியாக இருப்பேன். எங்கள் ஊரில் 'ரிலீஃப் கேம்ப்' அமைத்திருந்தார்கள். இலங்கையிலிருந்து இந்தியாவுக்குத் தஞ்சம் வந்த அகதிகள் அந்த கேம்ப்பில் இருந்தாங்க. அதில், இரண்டு பேர் எங்கள் ஊரின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் டூ படிச்சுட்டு இருந்தாங்க. நானும் ப்ளஸ் டூ என்றாலும், அந்தப் பெண்களுடன் பேசமுடியாத சூழல். காரணம், நான் படிப்பது, ஆண்கள் பள்ளியில். எங்கள் பள்ளி முடிந்த கால் மணி நேரம் கழித்தே, அந்தப் பள்ளி முடியும். நானும் நண்பர்களும் அந்தப் பெண்கள் பள்ளிக்கு எதிரில் இருக்கும் பெட்டிக் கடையில் காத்திருப்போம். பள்ளி விட்டதும் அந்த இரண்டு பெண்களின் பின்னாடியே சைக்கிளைத் தள்ளியபடி நண்பர்கள் பேசிட்டே போவோம். அந்தப் பள்ளியில் அவ்வளவு பெண்கள் படிக்க, குறிப்பிட்ட இரண்டு பெண்கள் மட்டும் ஸ்பெஷலானதற்குக் காரணம், அவர்கள் அணிந்திருந்த உடை. ஸ்கூல் யூனிஃபார்ம் அணிந்திருந்தாலும், தாவணிப் பெண்களுக்கு மத்தியில், குட்டைப் பாவாடை அணியும் அவர்கள் எனக்குத் தனித்துத் தெரிந்தார்கள். 

அந்தப் பெண்களின் அருகில் சென்று பேச முயல மாட்டோம். கிண்டலோ, கேலியோ செய்ய மாட்டோம். ஆனால், தினமும் பின்னாடிப் போக மறந்ததே இல்லை. ஆரம்பத்தில், அந்தப் பெண்கள் எங்களைக் கண்டுகொள்ளவில்லை. பள்ளிவிட்டு வீட்டுக்குச் செல்பவர்கள் என்றே நினைத்தார்கள். அப்புறம், அவங்களைத்தான் பின்தொடர்கிறோம் எனத் தெரிந்ததும் அவர்களின் பள்ளியில் புகார் செய்திருக்கிறார்கள். இது தெரியாமல் வழக்கம்போல எங்களின் நிழல் பணி தொடர்ந்தது. அந்தப் பெண்கள் பயத்துடன் விரைவாக நடை போட்டதையும் விபரீதமாக உணரவில்லை. ஏதோ ஒரு மாற்றம் நடப்பதை மட்டும் புரிஞ்சுக்கிட்டோம். அதை எப்படிக் கையாள்வது என்பதை யோசிக்கக்கூட இல்லை. 

பெண்கள்

ஓரிரு மாதங்கள் கழித்து, எங்கள் பள்ளி விடும் நேரமும் அவர்கள் பள்ளி நேரமும் மாற்றியமைக்கப்பட்டது. எங்களுக்கு முன்பே அவர்கள் பள்ளி விடப்பட்டது. அந்தச் சம்பவம் நடைபெற எங்களின் பின்தொடரலே காரணமாக இருந்ததா என்று இதுவரை தெரியாது. ஆனால், அப்படித்தான் ஒரு பேச்சு இருக்கிறது. நண்பர்கள் அந்த விஷயத்தைச் சொல்லி கேலி செய்வார்கள். அந்தப் பெண்கள் இயல்பாகப் பள்ளிக்குச் சென்றிருந்தவர்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டது வருத்தத்தைத் தந்தது.

பள்ளிக்குப் புறப்படுவதற்காக காலையில் எழுந்திருப்பதில் தொடங்கி, காலை உணவு தயாரிப்பது, பேருந்தைப் பிடிப்பது உள்படப் பலவும் அழுத்தம் தருவதாக மாறியிருக்கும் என்பதை உணர்ந்தேன். அதிலும், அவர்கள் தங்கள் நாட்டில் வாழ முடியாத நிலையில், உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நம் நாட்டுக்குத் தஞ்சமாக வந்தவர்கள் அவர்களுக்குச் சிக்கலை உருவாக்கி விட்டோமே என்ற எண்ணம், குற்ற உணர்ச்சியைத் தந்தது. அதன்பிறகு, ஒரு பெண்ணிடம் நானாகச் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு பழகுவது என்னால் முடியவில்லை. இப்போதும் ஆபீஸ் அல்லது வெளியூர் செல்கையில் பள்ளி செல்லும் மாணவிகளைப் பார்க்கும்போது, என்னை மாதிரி யாராவது பின்தொடர்வதால், அவர்கள் ஏதேனும் சிக்கலுக்கு உள்ளாவார்களோ என்ற பதற்றம் வந்துவிடும். இவர்களுக்கு அப்படியேதும் நடந்துவிடக் கூடாது என்று பிரார்த்திப்பேன்."


டிரெண்டிங் @ விகடன்