Published:Updated:

அம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார்? - நினைவு தினப் பகிர்வு

அம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார்? - நினைவு தினப் பகிர்வு
அம்பேத்கர் ஏன் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார்? - நினைவு தினப் பகிர்வு

ள்ளிப் படிப்பில் படுசுட்டி. என்றாலும், வகுப்பில் கடைசி வரிசையில் கோணிப்பையை விரித்துத்தான் உட்கார வேண்டும். யாரும் அந்தச் சிறுவனைத் தொட்டுத் தண்ணீர் தர மாட்டார்கள். ஒரு உயரத்தில் இருந்து தண்ணீர் ஊற்றுவார்கள். அப்படியே அண்ணாந்து அந்தத் தண்ணீரைக் குடிக்க வேண்டும். பதின்ம வயதிலேயே திருமணம் முடித்த பின் பட்டப்படிப்பு படிக்கச் செல்கின்றார் அவர். எந்த இடத்தில் அவருடைய சமூகப் பின்னணியைக் காட்டி, அவரைத் தொட்டால் தீட்டு என்று ஒதுக்கினார்களோ, அதே இடத்தில், அவருடைய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கப்படுகின்றது.

ஏன் அம்பேத்கர் வரலாற்றின் தேவையாக இருக்கின்றார்? 

இந்தியா போன்ற ஒரு நாட்டின் வரலாற்றினையும், அதன் சமூகத்தினுள் இருக்கும் உறவுச் சிக்கல்களையும், கருத்துப் பரிமாற்றங்களையும், சாதி இல்லாமல் பார்ப்பது வெகுகடினம். பெரும்பாலும் ஒரு நாட்டின் வரலாறும் சித்தாந்தங்களும், யாருடைய கை ஓங்கி இருக்கின்றதோ அவர்களாலேயே வடிவமைக்கப்படுகின்றது. கீழே இருப்பவர்களின் குரல்கூட, எப்படித் தொனிக்க வேண்டும் என்பது மேலே இருப்பவர்களாலேயே தீர்மானிக்கப்படுகின்றது. 

அப்படி இருக்கும்போது, கீழே இருப்பவர்களின் குரல் எவ்வித மாற்றங்களும் இல்லாமல், உண்மையான காத்திரத்தோடு ஒலிக்க வேண்டும். அப்படி கீழே இருப்பவர்களின் அச்சு அசலான குரலாக ஒலித்தது அம்பேத்கருடைய குரல். 

அந்தக் குரல்தான், வட்டமேசை மாநாட்டில் அவரை ஊமைகளின் பிரதிநிதியாகப் பேசவைத்தது. அவருடைய குரலை வெறும் வலிகளின் - உணர்ச்சிகளின் பதிவாக நம்மால் ஒருநாளும் ஒதுக்கிவிட முடியாது.

ஏனென்றால், இந்தியாவில் உள்ள சாதிக்கட்டுமானத்தின் அடிநாதம்வரை கற்றுத்தேர்ந்து, ‘சாதியை அழித்தொழித்தல்’ என அதை தகற்பதற்கான  கோட்பாடாக வடிவமைத்தது, அம்பேத்கரின் முக்கியமான பங்களிப்பு ஆகும். இன்று பெரும்பாலான தலித்தியம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும், சாதி-சமூகம் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும் நிறையக் குறிப்புகள் அம்பேத்கரிடம் இருந்தே தொடங்குகின்றன. 

சாதியக்கட்டுமானத்தின் கோட்பாடுகள் மட்டுமல்லாமல், பொருளாதாரம், தத்துவம், அரசியல் அறிவியல் என்று அம்பேத்கருடைய பங்களிப்பு, அறிவுசார் தளத்தினால் போற்றப்படுவது. முக்கியமாக, உலகின் மிக நீளமான அரசியலமைப்புச் சட்டங்களுள் ஒன்றாக இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தினை வடிவமைத்தது. பன்முகத்தன்மை நிறைந்த ஒரு நாட்டில், அனைத்து மக்களின் உரிமைகளும் கண்ணியத்துடன் காப்பாற்றப்பட வேண்டும் என்பது மட்டும் அல்லாமல், மத்திய அரசின் உரிமைகள், மாநில அரசின் உரிமைகள், நிர்வாகத் துறை ஆற்ற வேண்டிய கடமைகள் என்று மிகவும் விரிவாக எழுதப்பட்ட ஒன்றாகத் திகழ்கின்றது இந்திய அரசியல் அமைப்புச் சட்டம். 'வாக்குரிமை என்பது அனைவருக்கும் பொதுவாக அளிக்கப்பட வேண்டும் என்பதில், ஒரு நாட்டின் குடியரசுத்தன்மை காக்கப்படுகின்றது' என்று உறுதியாக நம்பினார். விளிம்புநிலை மக்களுக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதனை முதலில் அனைவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அப்படி அளிப்பதுதான் அவர்களுடைய குரல்களும் கேட்பதற்கு வழிவகுக்கும் என்பதில் அம்பேத்கர் திடமாக இருந்தார்.

இந்தியாவில் முதல் முறையாக பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றதும் அம்பேத்கர்தான். இந்தியப் பொருளாதாரத்தில், தொழில் வளர்ச்சியும், வேளாண்மை வளர்ச்சியும் இரு கண்களாகக் கருதப்பட வேண்டும் என்று அவர் எண்ணினார். நிலச்சீர்திருத்தம், வருவாய்த்துறை ஆகியவற்றில் மேற்கோள்காட்டத்தக்க அடிகளை எடுத்து வைத்தார் அம்பேத்கர்.

சமூகத்தில் உள்ளச் சிக்கல்களை மிகத்துல்லியமாகக் கவனித்து, அதைக் கோட்பாடுரீதியாக அணுகி ஆராயும் திறன் படைத்தவர் அவர். எடுத்துக்காட்டாக, வேதங்களை மேற்கோள்காட்டி, ஆரிய-திராவிடச் சிந்தனைகளைக் குறித்து விமர்சனம் செய்தது. அவருடைய சாதி ஒழிப்பு உரையில், வெளிப்படையாக இந்து மதத்தில் உள்ள நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டி, சாதி ஒழிக்கப்படவில்லை எனில், மதம் மாறுவதைத் தவிர தனக்கு வேறு வழி இல்லை என்று கூறியது மட்டும் அல்லாமல், அதைச் செய்தும் காட்டினார் அவர். 

சாதி குறித்து எழுப்பப்பட்ட பெரும்பாலான வாதங்கள் ஆதாரமற்றவை என்று நிரூபணம் செய்த அவர், இந்தியாவில் அரசியல் சுதந்திரம் மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு அடிப்படையாகவும், அவசியமானதாகவும் இருப்பது சமூக விடுதலைதான் என்று ஆணித்தரமாக உரைத்தார் அம்பேத்கர். 

அரசியலமைப்புச் சட்டம் முழுவதும், தனிமனிதருடைய கண்ணியத்தைப் பேணிக்காக்கவும், அவனுடைய/அவளுடைய அனைத்து அடையாளங்களும் சிதையாமல் காப்பாற்றப்படுவதற்கும், மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இந்நாட்டினைச் சரியான முறையில் ஆள்வதற்கும் என்னென்ன தேவையோ, அவை அனைத்தையும் அளிக்கும்விதமாக, அதனை வடிவமைத்த சிற்பி அவர். 

எவ்வளவு வருந்தத்தக்கச் சூழ்நிலையில் இருந்து வந்தாலும், கடினமான உழைப்பும், அர்ப்பணிப்பும், தன்னைச் சுற்றி உள்ள மக்களின் வலிகளைத் தன் வலி என்று உணர்ந்து செயல்படும் ஒருவரை, உலகம் உச்சாணிக்கொம்பில் வைத்துப் போற்றும். 

அவ்வகையில், அண்ணல் அம்பேத்கரும் இன்று மக்களுக்காகப் பாடுபடும் அனைவருக்குமான ஒரு சின்னமாக உயர்ந்து நிற்கின்றார்.