வெளியிடப்பட்ட நேரம்: 18:33 (06/12/2017)

கடைசி தொடர்பு:19:50 (06/12/2017)

ஒருவேளை விஷால் வேட்பாளராக இருந்திருந்தால்... என்ன சின்னம் கொடுக்கலாம்?

ஒரு மாதத்திற்கு முன்னால் 'என்ன சார் அடுத்து ஆர்.கே நகர் எலெக்‌ஷனா?' என விஷாலை கலாய்த்தவர்கள் எல்லாம் அவரின் ஆர்.கே நகர் அறிவிப்பைக் கண்டு அதிர்ச்சியில் ஆழ்ந்தார்கள். சிலைகளுக்கு மாலை, படை பரிவாரம் சூழ வேட்புமனுத்தாக்கல் என எல்லாம் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது. அதன்பின் நடந்தது அதிர்ச்சிக்கெல்லாம் அதிர்ச்சி. விஷாலின் வேட்புமனுவை வைத்து 'உள்ளே - வெளியே' ஆடிய தேர்தல் அதிகாரி கடைசியில் வேட்புமனுவை ரத்தும் செய்துவிட்டார். சரி, ஒருவேளை விஷால் தேர்தலில் போட்டி போட்டிருந்தால் அவருக்கு பொருத்தமான தேர்தல் சின்னம் என்ன? யோசிச்சுப் பார்த்தா...

விஷால்

பஸ்:

சண்டக்கோழி விஷாலை புரட்சித்தளபதி விஷாலாக மாற்றிய பெருமை முழுக்க முழுக்க சென்னை - திருச்சி - மதுரை ஹைவேயில் செல்லும் பேருந்துகளையே சேரும். இவற்றில் ஏறிவந்துதான் நார்த் மெட்ராஸ் தொடங்கி நாகர்கோவில் வரை ரவுடிகளை வளைத்து வளைத்து போட்டுத் தள்ளுவார். போக, பஸ்ஸின் பம்பர், முன்பக்க கண்ணாடி போன்றவற்றை சண்டைக் காட்சிகளுக்கும் பயன்படுத்திக்கொள்வார். இப்படி தமிழகத்தை விஷாலோடு நமக்கு சுற்றிக் காட்டிய அந்த பஸ்களையே அவரின் சின்னமாக ஒதுக்கியிருக்கலாம்.

சுமோ:

அமெரிக்காவிற்கு சூப்பர்மேன், இத்தாலிக்கு அர்கோமேன் வரிசையில் தென்னிந்தியாவின் இரண்டாவது சூப்பர் ஹீரோ (முதல் சூப்பர்ஹீரோ பாலகிருஷ்ணா) என்ற பெயரை விஷாலுக்கு வாங்கித் தந்தது இந்த வெள்ளை நிற சுமோதான். இன்றுவரை மீம் க்ரியேட்டர்களின் பேவரைட் டெம்ப்ளேட்டும் இந்த சுமோ சீன்தான். அரசியல்வாதிகளின் ஆஸ்தான வண்டியாக ஒருகாலத்தில் இருந்த சுமோவை சின்னமாக அறிவித்தால் புரட்சித்தளபதியின் புண்ணியத்தில் அவற்றுக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கும்.

டி.வி.டி:

'சினிமாவுல மட்டுமில்ல, நிஜத்துலயும் எனக்கு ஆக்‌ஷன்தான் வரும்' என விஷால் தெரியவைத்தது திருட்டு டி.வி.டிக்களை வேட்டையாடிய சம்பவம் மூலமாகத்தான். திருட்டு டி.வி.டிக்களை ஒழித்தமாதிரி ஊழலையும் ஒழிப்பேன் என்பதற்கு குறியீடாக டி.வி.டி சின்னத்தை பயன்படுத்தியிருக்கலாம். போக, பெட்டிக்குள் இருக்கும் மதகஜராஜாவை டி.வி.டியாக மாற்றி வீட்டிற்கு வீடு விநியோகித்தால் படம் ரிலீஸான மாதிரியும் இருந்திருக்கும். ஓட்டு கேட்டமாதிரியும் இருந்திருக்கும்.

மைக்:

சினிமாவில் பேசிய வசனங்களைவிட பிரஸ்மீட்களில் விஷால்  பேசியவைதான் அதிகம். இதில் சென்டிமென்ட், சவால், கோபம், அழுகை, பெருந்தன்மை என எல்லா எமோஷன்களும் அடக்கம். இப்படி பேசிப் பேசி சங்கத் தேர்தல்களில் ஜெயித்து இப்போது கள அரசியலுக்கும் வந்துவிட்டார். எனவே அவரை இந்தளவிற்கு அழைத்து வந்த மைக்க மறக்காத வண்ணம் அவருக்கு மைக் சின்னம் அளித்தால் பிரசாரம் செய்யவும் வசதியாக இருந்திருக்கும். 

ஜிகிர்தண்டா, மதுரை மல்லி மற்றும் பல:

'நானும் மதுரக்காரன்தாண்டா' - விஷாலை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு போய் சேர்த்தது இந்த வசனம்தான். அந்த ராசியினாலோ என்னவோ, அவர் நடித்ததில் முக்கால்வாசி மதுரைப் படங்கள்தான். 'சண்டக்கோழி', 'திமிரு', 'சிவப்பதிகாரம்', 'அவன் இவன்', 'தோரணை', 'பாண்டிய நாடு', 'பாயும் புலி' என இந்த லிஸ்ட் ரொம்பவே நீளம். எனவே ஜிகிர்தண்டா, மதுரை மல்லி, கறிதோசை, மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் போன்ற மதுரை தொடர்பான சின்னங்களை அறிவித்திருந்தால்... சிறப்பு, மிகச் சிறப்பு!

ஓட்டுப்பெட்டி:

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், கிரிக்கெட் டீம் கேப்டன் என ஒரு ஏரியாவிடாமல் மல்லுக்கு நிற்கிறார். இவருக்குப் பயந்து ட்ரம்ப், கிம் ஜோங் உள்ளிட்ட படா படா ஆட்களே பதவி விலகினாலும் விலகியதுதான். இப்படி ஒரு தேர்தல்விடாமல் போட்டியிடும் அண்ணனின் மனதைரியத்தைப் பாராட்டி ஓட்டுப்பெட்டியையே அவரின் சின்னமாக அறிவிக்கவேண்டும். அதுவே புரட்சித் தளபதிக்கு செய்யப்படும் உரிய மரியாதையாக இருக்கும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்