வெளியிடப்பட்ட நேரம்: 07:43 (08/12/2017)

கடைசி தொடர்பு:10:29 (08/12/2017)

பலவீனத்தைப் பலமாக மாற்றும் வித்தை கற்க என்ன தேவை? - வாழ்க்கைப் பாடம் சொல்லும் கதை #MotivationStory

கதை

`ருவரின் மனப்பான்மை பலவீனமாக இருந்தால், அவருடைய குணமும் பலவீனமாக மாறிவிடும்’ என்கிறார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். இழப்புகள் மனிதர்களுக்குத் தவிர்க்க முடியாதவை. நெருக்கமானவர்களைப் பறிகொடுத்தல், வியாபாரம் நொடித்துப்போவது, விபத்துகளில் உடல் உறுப்புகளை இழப்பது... என மனித வாழ்வில் இழப்புகள் எண்ணிலடங்காதவை. அவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவமனான மனநிலை வாய்த்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். அவர்களில் சிலர், சாதனை படைப்பதும் உண்டு. இழப்பை, இழப்பாகக் கருதாத மனநிலை வாய்த்தால்தான் சாதனை சாத்தியம். அதோடு தங்களின் பலவீனத்தை பலமாக மாற்றும் வித்தை அவர்களுக்குக் கைவர வேண்டும். ஒருவேளை உங்களின் மிகப்பெரிய பலவீனமே பலமாக மாறலாம் என்பதை தெளிவுபடுத்தும் கதை இது.

அந்தச் சிறுவனுக்குப் பத்து வயது. ஜூடோ கற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவனின் தீராத ஆசை. இத்தனைக்கும் அவன் இருந்தது ஜப்பானின் பெரிய நகரம் ஒன்றில். ஜூடோவுக்குப் பேர் போன நாடு. அவன் இருந்த ஊரிலும் ஜூடோ கற்றுத்தரப் பல பள்ளிகள் இருந்தன. ஒன்றே ஒன்றுதான் ஜூடோ கற்றுக்கொள்ள அவனுக்குத் தடையாக இருந்தது. ஒரு வருடத்துக்கு முன்னர் அவனுக்கு நடந்த கார் விபத்து. அதில், அவன் தன் இடது கையைப் பறிகொடுத்திருந்தான்.

சிறுவனின் தாய், ஜூடோ பள்ளிகளை அணுகினார். `இரு கைகள் இல்லாமல் ஜூடோவா..? அது மிகச் சிரமம்’ என்பதே பதிலாகப் பல பள்ளிகளில் கிடைத்தன. ஒரு பள்ளியில் மட்டும் ஜூடோ மாஸ்டர் சிறுவனைச் சேர்த்துக்கொள்ள ஒப்புக்கொண்டார். ஆனால், வயதில் முதிர்ந்தவராக இருந்தார். எப்போது வர வேண்டும், எவ்வளவு நேரம் பயிற்சி, கட்டணம் எவ்வளவு... அனைத்தையும் சிறுவனின் தாயிடம் சொன்னார்.

ஜூடோ

அடுத்த நாள்... சிறுவன், குரு சொன்ன நேரத்துக்கு ஜூடோ பள்ளிக்குப் போனான். அவர் கற்றுக் கொடுத்த பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தான். மூன்று மாதங்கள் முடிந்தன. நல்ல பயிற்சிதான்... என்ன... அவனுடைய குரு அவனுக்கு அது வரை ஜூடோவில் ஒரே ஒரு அசைவை, நுட்பத்தைத்தான் கற்றுத் தந்திருந்தார்.

ஒருநாள் குருவிடமே கேட்டுவிட்டான்... ``மாஸ்டர்... எனக்கு ஜூடோவுல ஒரே ஒரு நுட்பத்தை மட்டும்தான் கத்துக் குடுத்திருக்கீங்க... வேற எதுவும் கத்துத் தர மாட்டீங்களா?’’

``உண்மைதான். ஜூடோவுல இந்த ஒரே ஒரு நுட்பம் மட்டும்தான் உனக்குத் தெரியும். ஆனால், இதை மட்டும்தான் நீ அவசியம் தெரிஞ்சிருக்கணும்.’’ அதற்குப் பிறகு குரு பேசவில்லை. `நீ போகலாம்’ என்பதுபோலத் தலையை அசைத்தார். சிறுவன் தன் பயிற்சிக்குத் திரும்பினான். மேலும், பல மாதங்கள் கழிந்தன. அப்போதும் மேற்கொண்டு அவனுக்கு ஜூடோவில் வேறு எந்த நுட்பத்தையும் குரு கற்றுத் தரவில்லை.

உள்ளூரில் ஒரு ஜூடோ போட்டி. அதில் கலந்துகொள்ள பள்ளியின் சார்பாக அந்தச் சிறுவனின் பெயரையும் கொடுத்திருந்தார் மாஸ்டர். சிறுவன் தன் அம்மாவிடம் வந்து விஷயத்தைச் சொன்னான். அம்மா, மகனைக் கட்டியணைத்துக்கொண்டார். தானும் போட்டியைக் காண வரப்போவதாகச் சொன்னார். சிறுவனுக்கு ஒரே ஒரு சந்தேகம்தான். அவன் பள்ளியில் பல மாணவர்கள், ஜூடோவில் பல நுட்பங்களைக் கற்றறிந்தவர்கள். அவனுக்குப் பல மாதங்களாகப் பயிற்சியளிக்கப்பட்டிருந்தாலும், அவனுக்குத் தெரிந்ததெல்லாம் ஒரே ஒரு நுட்பம்தான். இதைவைத்துக்கொண்டு போட்டியில் ஜெயிக்க முடியுமா?

பயிற்சி

ஒரு கையை வைத்துக்கொண்டு அவனால் ஜூடோ போட்டியில் பங்கேற்க முடியுமா? போட்டியில் அவனுக்கு அடி எதுவும் படாமல் இருக்க வேண்டுமே என்கிற பயம் அம்மாவுக்கு. போட்டி தினம் வந்தது. அந்தச் சிறுவன் பங்கேற்ற முதல் போட்டி... அவன்தான் ஜெயித்தான். கூட்டம் அதிசயத்தோடு அவனைப் பார்த்துக்கொண்டிருந்தது. குரு கற்றுக்கொடுத்த ஒரே ஒரு ஜூடோ நுட்பத்துக்கு இவ்வளவு சக்தியா? சிறுவன் ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்த்தான். இரண்டாவது போட்டி... அதிலும் அந்தச் சிறுவனுக்கே வெற்றி. மூன்றாவது..? அதில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கே அவன் தகுதியாகிவிடுவான். மூன்றாவது போட்டி, கூட்டம் மொத்தமும் மூச்சுவிடாமல் பார்த்துக்கொண்டிருந்தது. அதிலும் அவன் ஜெயித்துவிட்டான். கூட்டம் எழுப்பிய ஆராவாரமும் கைதட்டலும் அடங்க வெகு நேரமானது.

இறுதிப் போட்டி நடக்கும் நாள் வந்தது. சிறுவனின் எதிர்ப் போட்டியாளன் ஆஜானுபாகுவாக இருந்தான். அவனுக்கு முன்னால் சிறுவன் குட்டி ஆடுபோலத் தெரிந்தான். சிறுவனால் அவனை எதிர்த்து நின்று வெற்றிபெற முடியுமா? போட்டியை நடத்தும் நடுவர், சிறுவனின் குருவிடம் வந்தார்.

``இந்தப் பையன் பாவம் ஐயா.. வேணாம். போட்டியிலிருந்து அவனை விலகச் சொல்லிடுங்க. அவன்கூட இவன் மோதினா, பலமா அடிவிழக்கூட வாய்ப்பு இருக்கு’’ என்று சொல்லிப் பார்த்தார்.

``பரவாயில்லை. ரெண்டு பேரும் மோதட்டும்’’ என்று சொல்லிவிட்டார் குரு.

போட்டி ஆரம்பமானது. இரண்டுமுறைதான் அந்தச் சிறுவன் தடுமாறினான். மூன்றாம் முறை வெற்றி பெற்றுவிட்டான். அந்த ஆண்டு, அந்த நகரத்தில் நடந்த ஜூடோ டோர்னமென்ட்டில் அந்தச் சிறுவன்தான் சாம்பியன்.

அடுத்த நாள் சிறுவன், தன் குருவிடம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கேட்டேவிட்டான். ``குருவே.. நீங்க கத்துக்குடுத்த ஒரே ஒரு நுட்பத்தைவெச்சுக்கிட்டு நான் எப்பிடி ஜெயிச்சேன்?’’

தனித்திறமை

``நீ ஜெயிச்சதுக்கு ரெண்டு காரணம்தான். ஜூடோவுல எதிராளியைத் தூக்கி வீசியடிக்கிற வித்தையிலேயே கஷ்டமான ஒண்ணுல நீ மாஸ்டராகிட்டே. இன்னொண்ணு, அந்த நுட்பத்தை உன் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தும்போது எதிராளி உன் இடது கையைத்தான் இழுக்க முடியும். அது சாத்தியமில்லை. அதனாலதான் நீ ஜெயிச்சே!’’

தன் பலவீனத்தை பலமாக மாற்றித் தந்த குருவை நெகிழ்ச்சியோடு வணங்கினான் சிறுவன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்