Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

• இலியானா ஒரு வருடமாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. இத்தனைக்கும் அவர் கடைசியாக நடித்த இந்தி, தெலுங்குப் படங்கள் ஹிட்! 'நடிக்கக் கேட்டு வர்ற கதைகள் எதுவும்  எனக்குப் பிடிக்கலை. வித்தியாசமா எதுவுமே இல்லை. எனக்கே சந்தோஷம் தராத கதையில் நான் ஏன் நடிக்கணும்? நல்ல படம்னா நடிக்கலாம். அதுவரை ரெஸ்ட்!’ என்கிறார் தடாலடியாக. இதற்கு இடையே தெலுங்கில், ராம் சரணுடன் ஒரு பாடலுக்கு 'அயிட்டம் நம்பர்’ ஆடக் கேட்டிருக்கிறார்கள். 'ஜஸ்ட் 1.5 கோடி ரூபா தந்துடுங்க’ என்று கிலி கிளப்பியிருக்கிறது இலி. நாலு பேருக்கு சந்தோஷம்னா, கொடுக்கலாமே! 

இன்பாக்ஸ்

•  சென்ற வார டிரெண்டிங் சச்சின் - ரஹ்மானின் முஸ்தபா ஃப்ரெண்ட்ஷிப். முன்னர் சென்னை வந்த சச்சின், ரஹ்மான் வீட்டுக்குச் சென்றிருக் கிறார். அப்போது சச்சின், ரஹ்மானுக்கு தன் மும்பை வீட்டுக்கு வர அழைப்புவிடுத்தார். கடந்த வாரம் மும்பை சென்ற ரஹ்மான், சச்சின் வீட்டுக்குச் சென்று விருந்து சாப்பிட்டிருக்கிறார். 'இனிமையான சந்திப்பு’ என இருவரும் நட்பில் திளைத்து நெகிழ,  ஏக உணர்ச்சிவசப்பட்டார்கள் நெட்டிசன்ஸ். முஸ்தஃபா... முஸ்தஃபா! றீ நரம்புப் பிரச்னையால் பாதிக்கப்பட்ட விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு உதவ ஒரு மென்பொருளை வடிவமைத்தது 'இன்டெல்’ நிறுவனம். அவரது கண்கள் மற்றும் முக அசைவுகளை வைத்தே, அவர் பேச விரும்புவதை அது புரிந்துகொள்ளும். இப்போது அந்த மென்பொருளை 'யார் வேண்டுமானாலும் உபயோகித்துக்கொள்ளலாம்’ என்று அறிவித்து இருக்கிறது இன்டெல். 'ஸ்டீபனைப் போல உலகம் எங்கும் அவதிப்படும் பலருக்கு இது பயன்படவேண்டும் என்பதே எங்கள் நோக்கம்’ என்கிறது இன்டெல். இன்டெலிஜென்ட் இன்டெல்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
இன்பாக்ஸ்

•  அமெரிக்க ரகசியங்களைக் கசியவிட்டு கடுப்பேற்றுவது உளவாளி எட்வர்டு ஸ்னோடெனின் பொழுதுபோக்கு. இந்த முறை அவருடைய டார்கெட்... ஒசாமா பின்லேடன். 'பின்லேடன் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார். அப்போது நடந்தது போலித் தாக்குதல். அதனால்தான் அவரது உடலைக்கூட யாருக்கும் அமெரிக்கா காட்டவில்லை. பின்லேடன் தாடியை எடுத்துவிட்டு மாறுவேடத்தில் இருப்பதால் யாராலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மாதம் 1 லட்சம் டாலர் அவர் வங்கிக் கணக்குக்கு அமெரிக்கா உதவியுடன் செல்கிறது!’ எனச் சொல்கிறார் ஸ்னோடென். ஒபாமா காலிங் ஒசாமா!

•  அக்கட தேச சூப்பர் ஸ்டார்களுக்கும் வயது கூடிவிட்டது. சிரஞ்சீவி தன் 60-வது பிறந்தநாளை மொத்த இந்தியத் திரை உலகையும் அழைத்து வந்து சிறப்பாகக் கொண்டாட, நாகர்ஜுனா 56-வது பிறந்த நாளை தாய்லாந்து சென்று கொண்டாடி யிருக்கிறார். நாகார்ஜுனாவின் 'சோகடே சின்னி நாயனா’ மற்றும் அவர் மகன் அகிலின் முதல் படமான 'அகில்’ ஆகிய இரண்டு படங்களின் டீசரை ஒரே நாளில் ரிலீஸ் செய்து ரசிகர்களையும் குஷிப்படுத்தி யிருக்கிறார்கள். ஹேப்பி பர்த்டேஸ்!

•  வித்யா பாலனின் தற்போதைய கால்ஷீட் சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வுக்கு. உத்தரப் பிரதேசம், பீகாரில் இருக்கும் பின்தங்கிய கிராமங்களுக்குச் சென்று கழிவறை சுகாதாரம் பற்றிப் பாடம் எடுக்கிறார். 'இந்தியாவில் அனைத்துப் பெண்களும் தங்கள் உரிமைகளைப் பெறப் போராட வேண்டியிருக்கிறது. பெண்ணுரிமை என்பது தேசியப் பிரச்னை அல்ல; ஒவ்வொரு பெண்ணும் உணர வேண்டிய சொந்தப் பிரச்னை. நான் பெண்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன். அதுபோன்ற படங்களையே தேர்வு செய்கிறேன்’ என அக்கறை பொங்கப் பேசுகிறார் வித்யா. க்ளீன் பிக்சர்! 

இன்பாக்ஸ்

•  ஹாலிவுட் ஆதர்ச ஜோடி ஏஞ்செலினா ஜோலியும், பிராட் பிட்டும் லண்டனில் தீவிரமாக வீடு தேடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஏற்கெனவே அமெரிக்காவில் மூன்று வீடுகள் இருக்கின்றன. ஆனால், ஜோலியின் அடுத்த எண்ணம், ஐரோப்பிய யூனியன் அரசியலில் ஈடுபடுவது. அரசியல் ஆசைக்கு அமெரிக்காவைவிட லண்டன்தான் சரியாக இருக்கும் என்பதால்,  அங்கு குடியேற விரும்புகிறார் ஜோலி. புரட்சித் தலைவி!

•  மெட்ரோ ரயில் தெரியும். கவர்ச்சி ரயில் தெரியுமா? சமூக அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி திரட்ட ஸ்வைப் கார்டின் பின்புறம் ஜப்பானிய 'அடல்ட்ஸ் ஒன்லி’ நடிகை யூய் ஹட்டானோவின் புகைப்படங்களை அச்சிட்டிருக்கிறது தைபே மெட்ரோ ரயில் நிறுவனம். 'இது பெண்களை இழிவுபடுத்துவது, குழந்தைகளுக்குத் தவறான பாடம்’ என மக்கள் பொங்கினாலும், அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. அச்சடித்த 15,000 கார்டுகளும் விடிவதற்கு முன்பே விற்றுத்தீர, அடுத்த நாள் காலை மீண்டும் முன்பதிவு தொடங்கிவிட்டது. 'ஏதோ எங்களால முடிஞ்ச சமூகசேவை’ எனப் பூரிக்கின்றனர் ஹடானோ ரசிகர்கள். ஹ்ம்...!

•  2017-ம் ஆண்டு 17 வயதுக்கு உட்பட்டோ ருக்கான கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி நடக்க இருப்பது இந்தியாவில். இதன் முக்கிய ஸ்பான்ஸர் கோக். கால்பந்தையும் அதன் பிராண்டையும் இளைஞர்களிடம் பிரபலப்படுத்த யார் சரியாக இருப்பார் என்று தேட, சிக்கினார் கங்குலி. 'கிரிக்கெட்டையும் தாண்டி பிரபலமானவர். ஐ.பி.எல் வர்ணனை, சமூக ஈடுபாடு, தடகளப் போட்டிகளுக்கு உதவி, கொல்கத்தா கால்பந்து அணியின் உரிமையாளர்’ என எந்த நேரமும் விளையாட்டுடன் இருப்பதால், அவர்தான் சரியான நபர் என டிக் அடித்திருக்கிறது கோக். தாதா கோலா.

•  'பாகுபலி’ பாய்ச்சலுக்குப் பின் ராணாவின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. இந்தியாவில் முதல்முறையாக நீர்மூழ்கிக் கப்பலிலேயே நடக்கும் கதை கொண்ட தெலுங்குப் படத்தில் நடிக்கிறார் ராணா. இந்தியா - பாகிஸ்தான் போரின்போது இந்தியாவின் 'ஷி21’ என்கிற நீர்மூழ்கிக் கப்பலுக்கும்  பாகிஸ்தான் நாட்டின் 'பி.என்.எஸ் காசா’ என்னும் நீர்மூழ்கிக் கப்பலுக்கும் இடையே நடந்த மோதல் மற்றும் வெற்றிகள்தான் கதை. தண்ணியா செலவாகுமே!

இன்பாக்ஸ்

•  சாய்னா நெய்வால், இப்போது உலகத் தர வரிசையில் நம்பர் 1. அதனால் விளம்பர வாய்ப்புகள் சாய்னாவின் இன்பாக்ஸை நிரப்புகின்றன. 'உள்ளூர் மற்றும் வெளிநாட்டுப் போட்டிகளில் எனது பங்களிப்பு சிறப்பாகவே இருக்கிறது. அதே நேரத்தில் என்னுடைய விளம்பரங்கள் மற்றும் வணிக வாய்ப்புகளை சரியான முறையில் நிர்வகிக்க வேண்டிய பொறுப்பும் இருக்கிறது!’ எனச் சிரிக்கிற சாய்னாவுக்கு இன்னும் இரண்டு வருடங்களில் 25 கோடி ரூபாய் விளம்பர வருமானம் கொட்டுமாம். செம ஹிட்டு பாப்பா!