வெளியிடப்பட்ட நேரம்: 07:56 (11/12/2017)

கடைசி தொடர்பு:12:35 (11/12/2017)

அகதியாக வந்தவர் ரெஸ்ட்டாரன்ட் அதிபரான கதை #MotivationStory

கதை

வெற்றி என்பது என்ன? ஃப்ரேம் போட்டு சுவரில் மாட்டிவைத்திருக்கும் நாம் வாங்கிய சான்றிதழ்களா... கண்ணாடி அலமாரியில் அடுக்கிவைத்திருக்கும் பரிசுக்கோப்பைகளா... வங்கிக் கணக்கில் கணிசமாகச் சேர்ந்திருக்கும் பணமா... சம்பந்தப்பட்ட துறையில் கிடைத்திருக்கும் பெயரும் புகழுமா? ஆம், நிச்சயமாக இவையெல்லாம் வெற்றிகள்தான். இவற்றையும் தாண்டியது உண்மையான வெற்றி. ஏதோ ஒருநாள் ஆளுயரக் கண்ணாடிக்கு முன் நிற்கிறீர்கள். ‘ஏ யப்பா... இந்த அளவுக்கு உயர்ந்திருக்கோமா?!’ என்று உங்களுக்கு நீங்களே பாராட்டிக்கொள்கிறீர்கள். ‘என் ஃபீல்டுல என்னால எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு சாதிச்சுட்டேன்’ என்று பெருமைகொள்கிறீர்கள். அதுதான் உண்மையான வெற்றி. கியோ சனானிகோன் (Keo Sananikone) என்கிற மிகச் சாதாரணமான மனிதர், அதிலும் ஓர் அகதியாக அமெரிக்காவுக்கு வந்தவர், எப்படிச் சாதனையாளர் ஆனார் என்ற கதையைத் தெரிந்துகொண்டால், வெற்றிக்கான உண்மையான அர்த்தம் நமக்குப் புரியும்.

தென்கிழக்கு ஆசியாவின் லாவோஸ்தான் (Laos) கியோ சனானிகோனுக்குப் பூர்வீகம். அந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோது அகதியாக வெளியேற வேண்டிய சூழல். அங்கிருந்து வெளியேறி, அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தார் கியோ சனானிகோன். ஏற்கெனவே அவர் அமெரிக்காவில்தான் படித்திருந்தார். ஏதோ ஒரு படிப்பு, பெயருக்கு ஒரு பட்டம். ஆனால், அவருடைய ஆசையெல்லாம் அற்புதமான, மக்கள் அனைவரும் விரும்புகிற அருமையான ஒரு ரெஸ்ட்டாரன்ட்டை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்பதுதான். அதற்குக் காரணமும் இருந்தது. அவர், அமெரிக்காவில் இருந்த பல ரெஸ்ட்டாரன்ட்களைப் பார்த்துவிட்டார். அங்கெல்லாம் ஒன்று, சுவை பிரமாதமாக இருக்கும்; ஹோட்டல்காரர்கள் பரிமாறும் முறை, நடத்தும்விதம் சரியாக இருக்காது. அப்படி இல்லையென்றால், ரெஸ்ட்டாரன்ட்டில் கவனிப்புப் பிரமாதமாக இருக்கும்; உணவின் சுவை நன்றாக இருக்காது. இவை இரண்டும் சேர்ந்ததுபோல் ஒரு ரெஸ்ட்டாரன்ட்டைத் தொடங்கி நடத்த வேண்டும் என்பது அவருடைய மிகப்பெரும் கனவாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு ஹோட்டலில் வருமானம் கிடைக்கிறதோ இல்லையோ, பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது அவர் எண்ணம்.

Keo sananikone

சமையலில் தீராத ஆர்வம் அவருக்கு இருந்தது. ஃபிரெஞ்ச், இத்தாலி, தாய்... என அனைத்து சமையல் முறைகளையும் கற்றுத் தேர்ந்திருந்தார் கியோ. ஆனாலும், ஒரு ரெஸ்ட்டாரன்ட்டை ஆரம்பித்து நடத்தலாம் என்கிற நம்பிக்கை அவருக்கு வரவில்லை. `இன்னும் பயிற்சி வேண்டும்... இன்னும் கற்க வேண்டும்... இன்னும் அனுபவம் வேண்டும்...’ என்கிற எண்ணம் அவருக்கு மேலோங்கியிருந்தது. அப்போது கியோ, அமெரிக்காவிலுள்ள ஒரு மெக்கின்லே பள்ளியில் (McKinley School) கணக்கு வாத்தியாராக வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பகலில் வாத்தியார் வேலை... இரவில்? ஒரு ஹோட்டலில் போய், சாப்பிட்ட பாத்திரங்களைக் கழுவினார். சில மாதங்களுக்குப் பிறகு அவருடைய சின்சியாரிட்டிக்கு புரொமோஷன் கிடைத்தது... சர்வர் வேலை! அந்த வேலையையும் சின்சியராகச் செய்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சமையலறையிலேயே கிடந்தார். உணவு செய்யப்படும் முறை, சேர்க்கப்படும் சேர்மானங்கள் அத்தனையையும் உற்றுக் கவனித்தார். சந்தேகங்கள் கேட்டுக் கேட்டு, சமையலைப் பார்த்துப் பார்த்து ஒரு ரெஸ்ட்டாரன்ட்டின் அத்தனைச் சூட்சுமங்களையும் கற்றுக்கொண்டார் கியோ.

அந்த நாளும் வந்தது. அது 1977-ம் ஆண்டு. சிறுகச் சிறுக, தான் சேர்த்துவைத்திருந்த பணத்தோடு, நண்பர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி, அதைக்கொண்டு ஒரு `தாய்’ (Thai) பாணி ரெஸ்ட்டாரன்ட்டை ஹவாய் மாகாணத்திலுள்ள ஹோனோலுலுவில் ஆரம்பித்தார். ரெஸ்ட்டாரன்ட்டின் பெயர், `மிகோங் ரெஸ்ட்டாரன்ட்’ (Mekong Restaurant). `மிகோங்’ என்பது தென்கிழக்கு ஆசியாவில் ஓடும் ஓர் அழகான நதி. கியோவின் ஒரே எண்ணம் வருகிற வாடிக்கையாளர், திருப்தியோடு சாப்பிட்டுத் திரும்பிப் போக வேண்டும் என்பதுதான். அதில் மிகக் கறாராக இருந்தார். ஆரம்பத்தில் அந்த ரெஸ்ட்டாரன்ட்டுக்கெனத் தனியாகப் பணியாளர்கள் யாரையும் அவர் அமர்த்தவில்லை. மிக மிகச் சிறிய ஹோட்டல். ஆனாலும், வெகு விரைவில் புகழ்பெற்றுவிட்டது மிகோங் ரெஸ்டாரென்ட். காரணம், அங்கே கிடைக்கும் அற்புதமான சுவை நிரம்பிய உணவு, குறைந்த விலை, பிரமாதமான சேவை.

கியோவால் அதிகம் வாடகை கொடுக்க முடியவில்லை. ஒரு சுமாரான கட்டடம்தான் கிடைத்தது. அதிலும் பக்கவாட்டுச் சுவரில் பெரிதாக ஓட்டை ஒன்று இருந்தது. இடத்துக்குச் சொந்தக்காரர் அதையெல்லாம் சரிசெய்து கொடுக்க முடியாது, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அந்த ஓட்டையை மறைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார் கியோ. அவருக்கு ஒரு ரசனை இருந்தது. மங்கலான விளக்கொளியில், அமைதியான சூழலில் சாப்பிடுவது அவருக்குப் பிடிக்கும். அந்த முறையை தன் ரெஸ்ட்டாரன்ட்டிலும் கடைப்பிடித்தார் கியோ. பகலோ, இரவோ ரெஸ்ட்டாரன்ட் மங்கலான விளக்கொளியில் இருந்தது. அதனால் வருகிற வாடிக்கையாளர்களுக்கு சுவரில் இருந்த ஓட்டை தெரியவில்லை.

கியோவின் குடும்பத்தினர் பல வேலைகளில் இருந்தனர். அவர்களில் இரவில் வேலைக்குப் போனவர்கள், பகலில் மிகோங் ரெஸ்ட்டாரன்ட்டில் பணியாற்றினார்கள். பகல் நேரத்தில் வேலைக்குப் போனவர்கள், இரவில் ரெஸ்ட்டாரன்ட்டுக்கு வந்து வேலை செய்தார்கள். ரெஸ்ட்டாரன்ட்டைத் தொடங்கி எட்டு மாதங்கள் கழித்து, இரண்டுபேரை வேலைக்குச் சேர்த்தார் கியோ. அவர் வியாபாரம் கிடுகிடுவென்று வளர்ந்தது. சரியாகப் பத்து வருடங்கள் கழித்து, கியோவின் நான்கு ரெஸ்ட்டாரன்ட்டுகளில் 142 தொழிலாளிகள் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவருடைய தாய் ஹோட்டலில் வேலைக்குசேர விருப்பப்பட்டு, மேலும் 300 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அந்த அளவுக்கு ஹோட்டல் பிசினஸில் வெற்றியாளராகிவிட்டார் கியோ.

வெற்றி

ஒரு பத்திரிகைக்குப் பேட்டி அளித்தபோது, தான் அடைந்த வெற்றிக்கான காரணத்தை கியோ சனானிகோன் இப்படிக் குறிப்பிட்டார்… “எனக்கு மனிதர்களுடன் வேலை பார்ப்பது பிடிக்கும். அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றிவிடுவேன். ரெஸ்ட்டாரன்ட்டை நடத்தும்போது அதை ஒரு தொழிலாக நான் நினைக்கவில்லை. `நான் என் வீட்டில் ஒரு விருந்துவைக்கிறேன். என் உறவினர்களும் நண்பர்களும் வந்து விருந்துச் சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டுப் போகிறார்கள்’ என்று நினைத்துக்கொள்வேன். நான் நடத்திய எல்லா விருந்துகளும் சிறப்பாக நடந்தன. `நான் வெற்றி பெறுவேன்’ என்பது எனக்கு நன்றாகத் தெரியும். வெற்றி என்றால், நான் எவ்வளவு சம்பாதித்தேன் என்ற அர்த்தத்தில் அல்ல. என் பிசினஸில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன்; அந்தக் கணங்களில் நான் நிறையச் சிரித்தேன். நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்பதை உணர்ந்தேன். நல்ல படிப்பு, நல்ல சூழ்நிலை, நல்ல நண்பர்கள்… வேறு என்ன வேண்டும் எனக்கு?’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்