வெளியிடப்பட்ட நேரம்: 10:56 (12/12/2017)

கடைசி தொடர்பு:10:56 (12/12/2017)

உலகின் 75 சதவிகித எரிமலைகள் இங்கேதான் உறங்குகின்றன... என்ன காரணம்? #PacificRingOfFire

லகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று, இந்தோனேஷியாவில் அமைந்திருக்கும் பாலித் தீவு. எப்போதும் சுற்றுலா சார்ந்த செய்திகளில் மட்டுமே அடிபட்டுக்கொண்டிருந்த இந்தத் தீவின் பெயர் தற்போது மற்றொரு விஷயத்துக்காக முக்கியச் செய்திகளில் இடம்பெற்றுவருகிறது. இதற்கு காரணம், அகங் எரிமலை. 

இந்தோனேஷியா

கடந்த 54 ஆண்டுகளாக உறங்கிக்கொண்டிருந்த இந்த எரிமலை, இந்த ஆண்டு சீற்றம் கொள்ளத் தொடங்கியது. செப்டம்பர் மாதத்தில் இருந்தே இந்த எரிமலையிலிருந்து சாம்பல் புகையும், வித்தியாசமான ஒலிகளும் வெளிவரத்தொடங்கிவிட்டன. உச்சமாக கடந்த நவம்பர் மாதம் அதிகளவில் கரும்புகை வெளியேறியது. சிறிய அளவில் வெடிக்கவும் செய்தது. உடனே சுதாரித்த இந்தோனேஷிய அரசு, எரிமலையைச் சுற்றி 10 கி.மீ. தொலைவுக்கு இருக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அங்கிருந்து சுமார் ஒரு லட்சம் மக்களை உடனடியாக வெளியேறச் சொன்னது. ஆனால், விவசாயம், கால்நடைகள், வீடுகள் அனைத்தையும் விட்டுவிட்டு உடனே வெளியேறமாட்டோம் என நிறையபேர் வெளியேறவில்லை. சிலபேர் மட்டுமே அரசு அமைத்த சிறப்பு முகாம்களுக்குச் சென்றனர்.

அகங் எரிமலை

கடவுளின் கையில்!

தற்போது மெதுவாக சீறிக்கொண்டிருக்கும் இந்த அகங் எரிமலை, இந்தோனேஷியாவின் உயர்ந்த மலைகளில் ஒன்று. கடைசியாக இது வெடித்த வருடம் 1963. அப்போது சுமார் 1100 பேருக்கும் மேலானோர் இந்த விபத்தால் உயிரிழந்தனர். எரிமலை வெடிப்பு என்பது அபூர்வமான இயற்கை சீற்றங்களில் ஒன்று என்றாலும், இந்தோனேஷியாவுக்கு அது புதிதல்ல. காரணம், இந்தோனேஷியாவின் புவியியல் அமைப்பு.

உலகிலேயே, எரிமலைகள்... அதுவும் உயிருடன் இருக்கும் எரிமலைகள் அதிகம் இருக்கும் நாடு இந்தோனேஷியாதான். தீவுக்கூட்டங்களால் ஆன நாடான இந்தோனேஷியாவில் இருப்பது மொத்தம் 139 எரிமலைகள். இந்த நாட்டின் மொத்த மக்கள்தொகை சுமார் 258 மில்லியன். இதில் 69 மில்லியன் மக்கள், அதாவது 30 சதவிகிதம் மக்கள், எரிமலையில் இருந்து 30 கி.மீ. தூரத்துக்குள்தான் வசிக்கின்றனர். எனவே, எரிமலைகள் என்பது இவர்களின் வாழ்வோடு இணைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால்தான் மக்கள், அரசு எச்சரிக்கை விடுத்தும்கூட வெளியேறாமல் இன்னும் வீடுகளில் இருந்து கடவுளை வேண்டிக்கொண்டிருக்கின்றனர். 1963-ம் ஆண்டு நடந்த எரிமலை விபத்தின்போது சுமார் 1100 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்தின்போது தப்பிப்பிழைத்தவர்கள் இன்னும் இதே மலையின் அடிவாரங்களில்தான் வசித்துவருகின்றனர். அவர்கள்தான் இந்தத் தலைமுறை மக்களுக்கு வழிகாட்டிகள்.

இந்தோனேஷிய பெண்

எரிமலை வெடித்தால் என்ன ஆகும்?

எரிமலை வெடிப்பின்போது லாவா எனப்படும் நெருப்புக் குழம்பு மட்டும் வெளிவருவதில்லை. நிலநடுக்கம், விஷவாயு, பாறைகள் சிதறுவது என எல்லாம் கலந்ததுதான் எரிமலைச் சீற்றங்கள். 1963-ல் அகங் எரிமலை சீற்றத்தில் இருந்து தப்பித்தவர்கள் இதே நினைவுகளைத்தான் பகிர்ந்துகொள்கின்றனர். "பல கிலோமீட்டர் தூரத்துக்குப் பாறைகள் சிதறிவந்து எங்கள் மேல் விழுந்தன. எரிமலைக் குழம்பு ஒருபக்கம் ஓடியது. நச்சுவாயுக்கள் கரும்புகையாக எங்களைச் சூழ்ந்துகொண்டன" என்கிறார் பாலி தீவில் வசிக்கும் முதியவர் ஒருவர். 
சரி... இப்போது இந்த எரிமலை வெடித்தால் என்ன ஆகும்? மேலே அவர் விவரித்த அதே காட்சிகள்தான். ஆனால், வெடிக்கும்வரை எதனையும் உறுதியாகக் கூறமுடியாது என்கின்றனர் இந்தோனேஷிய அதிகாரிகள். காரணம், எரிமலை சீற்றத்தின் அளவைப் பொறுத்தே அதன் பாதிப்பும் இருக்குமாம். எனவே, இந்த மலை சிறிய அளவில் மட்டுமே சீறும்பட்சத்தில் அதிக பாதிப்பில்லை. 

இந்தோனேஷிய எரிமலை

பசிபிக் ரிங் ஆப் ஃபயர் (Pacific Ring of fire)

எரிமலை வெடிப்பும், நிலநடுக்கமும் இந்தோனேஷியாவுக்கு மட்டுமல்ல. பசிபிக் ரிங் ஆப் ஃபயரில் இருக்கும் எல்லா நாடுகளுக்குமே அச்சுறுத்தல்கள்தான். அது என்ன பசிபிக் ரிங் ஆப் ஃபயர்? பசிபிக் கடலில், தென்அமெரிக்காவின் சிலி முதல் நியூசிலாந்து வரைக்கும் இடைப்பட்ட பிரதேசம்தான் ரிங் ஆப் ஃபயர் என அழைக்கப்படுகிறது. சிலியில் இருந்து நியூசிலாந்து வரைக்கும் இருக்கும் நேரடியான பாதை அல்ல இது. தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி, வடஅமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், தெற்காசியத் தீவுகள் ஆகிய இடங்களின் எல்லைகளை எல்லாம் தொட்டுவிட்டு, நியூசிலாந்தில் வந்து முடிகிறது பசிபிக் ரிங் ஆப் ஃபயர். வரைபடத்தில் பார்த்தால் ஒரு வளையம் போல தோன்றும், சுமார் 40,000 கி.மீ தூரப் பிரதேசம். இந்த பூமியில் இருக்கும் இயற்கையின் அதிசயங்களில் அல்லது புதிர்களில் ஒன்று. 

Mount Agung

இந்தப் பிரதேசத்தில் இருக்கும் நாடுகளுக்கு நிலநடுக்கமோ, எரிமலை வெடிப்போ புதியவை அல்ல. உலகின் பெரும்பாலான எரிமலைகள் துயில்கொள்வதே இங்கேதான். பூமியில் இருக்கும் எரிமலைகளில் 75 சதவிகித எரிமலைகள் இந்த பசிபிக் ரிங் ஆப் ஃபயரில்தான் அமைந்திருக்கின்றன. உலகில் ஏற்படும் பெரிய அளவிலான நிலநடுக்கங்களில் 90 சதவிகித நிலநடுக்கங்கள் இந்தப் பகுதியில்தான் ஏற்படுகின்றன. இப்படி புவியியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த, அதே சமயம் சவாலான ஒரு பரப்புதான் பசிபிக் ரிங் ஆப் ஃபயர். இந்தளவுக்கு புவியியல் ஆச்சர்யங்கள் இங்கே நடைபெறக் காரணம், இந்தப் பகுதியில் இருக்கும் புவிஅடுக்குகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் காரணம்.

எப்படி பசிபிக் ரிங் ஆப் ஃபயர் உருவானது?

பசிபிக் ரிங் ஆப் ஃபயர்

Credits: USGS

நிலப்பரப்புக்கு அடியில் இருக்கும் கடல் தட்டுகளும், புவி தட்டுகளும் எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. அப்படி நகரும்போது ஏற்படும் உராய்வுகளால்தான் நிலநடுக்கங்கள் உருவாகின்றன. இந்த நிகழ்வு கடலின் அடிப்பகுதியில் நடக்கும்போது, கடலின் கீழ்ப்பரப்பில் அகழி போன்று பள்ளம் உருவாகும். இந்நிகழ்வால்தான் கடலுக்கடியில் பூகம்பம் ஏற்படுகிறது. தட்டுகள் ஒன்றோடொன்று நகரும் பகுதிகள் அதிகம் இருக்கும் இடம்தான் இந்த பசிபிக் ரிங் ஆஃப் பயர். இதனால்தான் இந்தப் பகுதியில் இருக்கும் நாடுகளில் எப்போதும் நிலநடுக்கம் உருவாவதற்கான வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. சிலி, மெக்சிகோ, அமெரிக்கா, இந்தோனேஷியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து போன்ற நாடுகளில் அடிக்கடி நிலநடுக்கம் உருவாகவும் இதுதான் காரணம் என்கின்றனர் புவியியல் ஆராய்ச்சியாளர்கள்.

இந்தப் பூமியில் மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையேயான புதிர் விளையாட்டில், மனிதன் விடுவிக்காத புதிர்கள் இப்படி இன்னும் நிறையவே இருக்கின்றன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்