வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (13/12/2017)

கடைசி தொடர்பு:14:06 (13/12/2017)

லாஸ் வேகாஸ் துப்பாக்கிச் சூட்டில் ஹீரோவான இளைஞர்... வைரல் ஆன புகைப்படம் சொல்வது என்ன?

அக்டோபர் மாதம், அமெரிக்காவில் இருக்கும் லாஸ் வேகாஸ் நகரில் மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.  இசை விழா ஒன்றுக்காக 22000க்கும் அதிகமான ரசிகர்கள் கூடியிருந்தார்கள். அப்போது, அருகிலிருந்த ஹோட்டலிலிருந்து ஸ்டீஃபன் பேடாக் (Stephen Paddock) என்பவன் கூட்டத்தை நோக்கி சராமரியாக சுட்டான். அந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஸ்டீஃபனால் 59 பேர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.  அந்தச் சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் அப்போது வைரல் ஆனது.

வைரல்

அந்தப் புகைப்படத்தில், பெண் ஒருவரின் மீது பாதுகாப்பு கேடயமாயிருந்து, குண்டுகள் படாமல் ஓர் இளைஞர் காப்பாற்றுகிறார். அந்த இளைஞர் அந்தப் பெண்ணின் கணவனாகவோ அல்லது பாய் ஃப்ரெண்டாகவோ இருக்க வேண்டுமென அப்போது சமூக வலைதளங்களில் அவரைப் பாராட்டி நிறைய எழுதப்பட்டது. அவரைப்  பற்றிய தகவல்கள் பின்னர் வெளியாகின. அவர் பெயர் மேத்யூ கோபோஸ்  (Matthew Cobos). அவர் ஒரு ராணுவ வீரர்.

மேத்யூவும் அந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார். அவருடன் அவர் தங்கையும் இன்னும் சில நண்பர்களும் சென்றிருந்தார்கள். 
மேத்யூ, ராணுவத்தில் பயிற்சி பெற்றவர் என்பதால் எப்படி மனிதக் கேடயமாக செயல்பட்டு ஒருவரைக் காப்பாற்ற வேண்டும் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. மேலும், ஆபத்து காலத்தில் பெண்களையும் குழந்தைகளையும் முதலில் காப்பாற்ற வேண்டுமென்பதை அந்த நெருக்கடிச் சூழலிலும் மேத்யூ மறக்கவில்லை. 

மேத்யூ அந்தப் பெண்ணைக் காப்பாற்ற மட்டும் செய்யவில்லை. அப்போது, அவர் கண்களை தனது கைகளால் மூடிக்கொண்டார். சுற்றியும் சடலங்கள். உயிர் பயத்தில் ஓடும் ஆயிரக்கணக்கானோர். இப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்தால், அது பற்றிய நினைவுகள் வாழ்நாள் முழுவதும் அந்தப் பெண்ணுக்கு தொல்லை தரலாம். மீண்டும் அன்றாட வாழ்க்கைக்கு அந்தப் பெண்ணால் திரும்ப முடியாமலே போகலாம். அதனால், அந்தப் பெண்ணின் கண்களை மேத்யூ மூடிக்கொண்டார். எந்தச் சூழலிலும் பதற்றமடையாமல், எதிரிகளிடமிருந்து அமெரிக்கர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ராணுவத்தின் அத்தனை கடமைகளையும் விடுமுறையிலிருந்தபோதும் செய்த மேத்யூவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

அதுமட்டுமல்ல; அந்தப் பெண்ணைக் காப்பாற்றி ஒரு காருக்குப் பின் மறைவாக வைத்துவிட்டு, மற்றவர்களுக்கு உதவப் போயிருக்கிறார் மேத்யூ. தனது பெல்ட்டை எடுத்து, குண்டு பாய்ந்தவர்கள் உடலிலிருந்து ரத்தம் அதிகம் வெளியேறாமல் இருக்க கட்டுப் போட்டிருக்கிறார். இன்னொருவர் உடலில் குண்டு துளைத்த இடத்தில் தனது விரலால் அடைத்து ரத்தப்போக்கை குறைத்திருக்கிறார்.

மேத்யூ

Getty imagesஐ சேர்ந்த புகைப்படக்காரர் டேவிட் பெக்கர் என்பவரும் சம்பவ இடத்தில் இருந்திருக்கிறார். மக்கள் அங்குமிங்கு ஓடுவதைப் பார்த்திருக்கிறார். ஆனால், என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியவில்லை. இந்தச் சம்பவங்களைப் பதிவு செய்வது ஒரு புகைப்படக்காரரின் கடமை என எண்ணியதால், அவர் ஓடாமல் படங்கள் எடுத்திருக்கிறார். அவைதாம் நமக்கு மேத்யூஸை அடையாளம் காட்டியிருக்கிறது.

மேத்யூ, கலிஃபோர்னியாவைச் சேர்ந்தவர். ஹவாய் மாகாணத்தில் அமெரிக்க ராணுவ வீரராக பணிபுரிந்துவருகிறார். இந்தச் சம்பவத்துக்கு பிறகு மேத்யூஸுக்கு ஏகப்பட்ட பாராட்டுகள். அமெரிக்க அரசு அவருக்கு ஏதும் உயரிய பரிசும் கெளரவமும்கூட கொடுக்கலாம். நமக்கு மேத்யூவும் டேவிட் பெக்கரும் சொல்லியிருப்பது ஒன்றுதான். எந்தச் சூழ்நிலையிலும் நம் கடமையைச் செய்யத் தவறக்கூடாது, உங்கள் கடமை எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்