வெளியிடப்பட்ட நேரம்: 17:36 (13/12/2017)

கடைசி தொடர்பு:10:23 (14/12/2017)

பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக ட்ரெண்டாகும் #Metoo #Churchtoo

கடந்த செப்டம்பர் மாதம் சமூக வலைதளங்களில் பெரிதும் உச்சரிக்கப்பட்ட பெயர் ஹார்வி வின்ஸ்டன். ஹாலிவுட்டில் மிகப்பெரிய தயாரிப்பாளர். பிரமாண்ட பட்ஜெட்டில் படங்கள் எடுப்பவர். ஆனால், அவரைப் பற்றிய செய்திகள் மோசமானவை. அவரிடம் பணிபுரிந்த பல பெண்கள், தாங்கள் அனுபவித்த பாலியல் சீண்டல், வன்முறை குறித்துப் பதிவேற்றியவை அதிர்ச்சியளித்தன. அமெரிக்காவின் பிரபல பத்திரிகை ஒன்றில் வெளிவந்திருந்த அந்த புகார்கள், உலகம் முழுவதும் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. #MeToo என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு, அதன்மூலமாக பாலியல் சுரண்டல்களை, தொல்லைகளை பெண்களும் ஆண்களும் பதிவேற்றத் தொடங்கினர்.

                                                                                                                                                   times - பாலியல் துன்புறுத்தல்       

பாலியல் குற்றங்களை எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல், துணிச்சலுடன் அறச்சீற்றத்துடன் முன்வைத்த பெண்களுக்கும், ஆண்களுக்கும் மணிமகுடம் சூட்டியது டைம்ஸ் பத்திரிகை. பாலியல் வன்முறையிலிருந்து மீண்டு வந்தவர்களையும், நடந்தது குறித்து தங்கள் மெளனம் கலைத்து, உரக்கப் பேசியவர்களையும் தேர்ந்தெடுத்து ‘பெர்சன் ஆஃப் தி இயர்” விருது வழங்கியது. ஹாலிவுட்டின் புகழ்பெற்ற தயாரிப்பாளரான ஹார்வி வின்ஸ்டன் பற்றி முதலில் வெளிப்படையாக உடைத்துப் பேசிய ஜுட், தன்னைப் பாலியல் ரீதியாக சீண்டிய டிஜேவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர், சிஇஓ-வுக்கு எதிராகப் புகார் அளித்த முன்னாள் ஊபர் பொறியாளர், ஹோட்டலில் பணிப்பெண்ணாக வேலை பார்த்த பெண், பல்கலைக்கழக பேராசிரியர், ஸ்ட்ராபெரி பழங்களைப் பறிப்பவர் எனப் பாலியல் வன்முறைகளுக்கு எதிராக குரல்களைப் பதிவுசெய்த இருபதுக்கும் மேற்பட்ட பெண்களை ஓரிடத்தில் சந்திக்கவைத்தது டைம்ஸ்.

தன் மனைவியின் கண்முன்பே தன்னைப் பாலியல் ரீதியாக சீண்டிய தயாரிப்பு நிறுவனத் தலைவர் ஆடம் வெனிட் குறித்து ட்விட்டரில் பதிவிட்டார், அமெரிக்க நடிகர், டெர்ரி க்ரியூஸ். “இங்கு அனைவரும் பாதிக்கப்பட்டவர்களையே கேள்விக்கு உட்படுத்துகிறார்கள். நீ அவனை அங்கேயே ஏன் திருப்பித் தாக்கவில்லை என்கிறார்கள். தவறு செய்தவரைத்தானே கேள்வி கேட்க வேண்டும்? அவர் அப்படி நடந்துகொண்டது தவறில்லையா? இனி பாதிக்கப்பட்டவரை கேள்வி கேட்கக்கூடாது. குற்றம் செய்தவரை வெளிப்படுத்தி, பேசத் தொடங்குவோம்” என்கிறார் டெர்ரி. 

பற்ற வைத்த நெருப்பு, எங்கெங்கும் பற்றி எரிய, அக்டோபர் 24-ம் தேதி இந்தியப் பல்கலைக்கழகங்களில் நடக்கும் அத்துமீறல்களை வெளிப்படுத்தி, பாலியல் வன்முறையாளர்களின் பெயர்ப் பட்டியலை ஃபேஸ்புக்கில் வெளியிட்டார் சட்ட மாணவி ரயா சர்கார். அதைத்தொடர்ந்து பலரும் தாங்கள் அனுபவிக்க நேர்ந்த வன்முறைகள், வன் தீண்டல்களைக் குறித்து சமூகவலைதளங்களில் பதிந்து விவாதப் பொருளாக்கினர்.

இரண்டு பாலினத்தவர்களாலும் நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களை வெளிப்படுத்தியது #Metoo. தற்போது மத நம்பிக்கைகளை வைத்துத் சுரண்டும், பாலியல் வன்முறைகளை நடத்தும் கொடூரத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் வகையில் #Churchtoo விவாதமாகியிருக்கிறது.  அமெரிக்காவில், மத போதகர்களாக, ஆன்மிக குருக்களாக பல்வேறு வடிவங்களில் அறிமுகமாகி, நெருக்கம் வளர்த்து பின் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் நபர்கள்குறித்து பதிந்து வருகிறார்கள். மதத்தை, அமைதியை தோற்றுவிக்கும் இடமாக கூறப்படும் தேவாலயங்களை, தியானக் கூடங்களையே பாலியல் அத்துமீறலுக்குப் பயன்படுத்தும் குற்றங்கள் குறித்தும் #Churchtoo என்னும் ஹேஷ்டேக்கில் பலரும் தங்கள் சொந்த அனுபவங்களை பகிரத் தொடங்கியிருக்கிறார்கள். 

அவமானமாக, சொல்லத் தயங்கும் மோசமான அனுபவமாக கடந்த விஷயங்களை பலரும் பொதுவெளியில் பேசுவது மிகவும் ஆரோக்கியமானதே. ஆயினும், சாமான்யர்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையில், இத்தகைய பாலியல் வன்முறைகளை எதிர்த்து, குரலெழுப்புவதற்கான சூழல் மிகச் சொற்பமாகவே அமைந்திருக்கிறது.

Premarevathyசமூகவலைதளங்களின் ஹேஷ்டேக் ட்ரெண்ட்டை மீறி, பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் சூழலை ஏற்படுத்துவதுகுறித்து, செயற்பாட்டாளர் பிரமோ ரேவதியிடம் கருத்து கேட்டோம். “Metoo,Churchtoo போன்ற ஹேஷ்டேக்குகள் முதலில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் மக்களுக்கானது என்ற புரிதல் நமக்கு இருக்கவேண்டும். இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங் ஆனதால் நடைமுறையில் குற்றவாளிகள் தண்டனைக்கு உள்ளானதாகத் தெரியவில்லை. சில இடங்களில், விசாரணை தொடங்கியிருக்கிறது. மேலைநாடுகளைப் போல அல்லாமல், இந்தியாவில் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைவே. இந்த ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஒருவிதத்தில் ஆரோக்கியமானது. தனக்கு ஏற்பட்ட பாலியல் அத்துமீறல்களை வெளிப்படுத்த முடியாதவர்கள் பேசத் தொடங்கியிருப்பது ஆரோக்கியமானது. தன் பெயரை, அடையாளத்தை மறைத்தும் சிலர் பேசியிருக்கிறார்கள். முகத்தை மறைத்து தனக்கு நேர்ந்த அநீதியை சொல்வதற்கு அவர்களுக்கு குற்ற உணர்ச்சி தேவையில்லை. சமூகத்துக்குத்தான் குற்ற உணர்ச்சி தேவை. இந்த ஹேஷ்டேக் வழி வெளிப்பாடு ஒரு தொடக்கம். இதுவே முடிவைக் கொடுத்து விடாது. நடுத்தர, உயர் நடுத்தர வர்க்க பெண்களின், ஆண்களின் பதிவுகளை நம்மால் இங்கு பார்க்கமுடிகிறது. நிறுவனங்களில் பாலியல் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு நிறுவப்படுவதும், அது சரியாக செயல்படுவதுமே நடைமுறை பலன்களை அளிக்கும். கட்டட வேலை செய்யும் பெண்களில் தொடங்கி தொழிற்சாலைகள், பணியிடங்கள் என எளிய மக்கள் அனுபவிக்கும் பாலியல் அத்துமீறல்கள் கொடுமையானது. பெண்கள் அமைப்பாக திரள்வதும், தன்னை சுருக்கிக்கொள்ளாமல் பாலியல் சுரண்டல்களை வலிமையாக எதிர்ப்பதுமே முழுமையான தீர்வு” என்றார் பிரேமா ரேவதி.

ஐந்தில் நான்கு இந்தியப் பெண்கள் (79%), பொது இடங்களில் பாலியல் தீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்கிறது சென்ற வருட ஆய்வு ஒன்று. 70% இந்தியப் பெண்கள் பணியிடங்களில் தங்களுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் பற்றி புகார் அளிப்பதில்லை என்கிறது, இந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. 2007-ல் இந்திய அரசு ஐ.நாவுடன் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவில், 53% குழந்தைகள் sexual abuse victim-களாக இருந்தது தெரியவந்தது. 

 ’பேசி என்ன ஆகப்போகிறது’, ‘பேசினால் நமக்கே அவமானம்’ - இந்த சிந்தனைதான் குற்றவாளிகளுக்கு அரண். பெண்கள், ஆண்கள், திருநர்கள் என யாராக இருந்தாலும், பேசத் தொடங்கியிருக்கும் இந்தச் சிறு பொறி காடுகளை எரிக்கட்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்