'Make Our Planet Great Again'...பாரிஸில் ட்ரம்ப்பை சீண்டிய உலகத்தலைவர்கள்! #OnePlanetSummit | important happening in One Planet Summit in Paris

வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (13/12/2017)

கடைசி தொடர்பு:20:10 (13/12/2017)

'Make Our Planet Great Again'...பாரிஸில் ட்ரம்ப்பை சீண்டிய உலகத்தலைவர்கள்! #OnePlanetSummit

ருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தி, பூமியைப் பாதுகாக்கும் நோக்குடன் போடப்பட்ட பாரிஸ் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்டன. அமெரிக்காவைத் தவிர்த்து மொத்தம் 197 நாடுகள் இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டன.  ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மட்டும், இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் அதிலிருந்து வெளியேறிவிட்டார்.  இந்நிலையில், புவி வெப்பமயமாதலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கவும், உலக நாடுகள் அனைத்துமே இந்தக் கருத்தில் உறுதியாக இருப்பதை உணர்த்தவும், பாரிஸ் நகரில் One Planet Summit என்ற பெயரில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான். ஐ.நா சபை மற்றும் உலகவங்கியின் உதவியுடன் இதனை நடத்தி முடித்திருக்கிறார் மாக்ரான். பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான நிதியை திரட்டுவது, அரசின் பொருளாதார மற்றும் சூழலியல் கொள்களைகளை இதற்கு தகுந்தவாறு மாற்றியமைப்பது, புவிவெப்பமயமாதலைத் தடுப்பதற்கான கள செயல்பாடு, சுற்றுச்சூழலுக்கு இசைவான வகையில் தொழில்வளர்ச்சியை ஊக்குவிப்பது போன்றவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

பாரிஸ் மாநாட்டில் இமானுவேல்

இந்த மாநாட்டில் பேசிய உலகவங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் மிகமுக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். "2019-ம் ஆண்டுக்குப் பிறகு, உலக வங்கி எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திட்டங்களுக்கு நிதிஉதவி அளிக்காது. இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு. பொருளாதார ரீதியில் பின்தங்கிய நாடுகள், தன் நாட்டு மக்களுக்காக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்கான திட்டங்களை செயல்படுத்தினால் அவற்றிற்கு நிதிஉதவி அளிப்பது குறித்து பரிசீலிப்போம். ஆனால், அந்த திட்டம் பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்ததின் விதிகளுக்கு உட்பட்டு இருக்கவேண்டும்" என்றார். மரபுசார் எரிசக்திகளுக்கு மாற்றான இந்த முயற்சியை பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

பருவநிலை மாற்றத்திலிருந்து பூமியைக் காப்பதற்கான தொழில்நுட்ப சாத்தியங்கள் குறித்தும் இந்த மாநாட்டில் ஆராயப்பட்டது. இதுதொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும்பொருட்டு, பிரான்ஸ் அதிபர் மாக்ரான், மொத்தம் 19 விஞ்ஞானிகளுக்கு பிரான்சில் தங்கி ஆராய்ச்சி செய்வதற்கான உதவிகளை வழங்கினார். இதில் 13 பேர் அமெரிக்கர்கள். இந்த திட்டத்திற்கு மாக்ரான் வைத்த பெயர், 'Make Our Planet Great Again'. 

பாரிஸ் மாநாட்டில் ட்ரம்ப்பிற்கு எதிராக கூடிய தலைவர்கள்

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஹாலிவு நடிகர் அர்னால்டு, ட்ரம்ப்பிற்கு எதிராக கொஞ்சம் அதிகமாகவே சீறினார். இவர் தொடர்ந்து பருவநிலை மாற்றத்திற்கு எதிராக குரல்கொடுத்துவருபவர். அமெரிக்காவின் முடிவுகுறித்து இவர் கூறுகையில், "பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து ட்ரம்ப் பின்வாங்கியதால், அமெரிக்காவிற்கு எந்தப் பின்னடைவும் இல்லை. காரணம், எந்த தனியார் நிறுவனங்களும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கவில்லை. அரசு நிறுவனங்களும் பின்வாங்கவில்லை. விஞ்ஞானிகளோ, பல்கலைக்கழகங்களோ பின்வாங்கவில்லை. ட்ரம்ப்பைத் தவிர வேறு யாரும் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கவில்லை. ட்ரம்ப்பின் முடிவால் அமெரிக்காவிற்கு எந்த நஷ்டமும் ஏற்படாது. எனவே அதைப்பற்றி அதிகம் கவலைகொள்ளத் தேவையில்லை." எனக் கூறியிருக்கிறார். 

அர்னால்டு

இந்த மாநாட்டில் பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டாலும், இந்த மாநாட்டிற்கு அழைக்கப்படாத ட்ரம்ப்தான் மாநாட்டின் நாயகனாக இருந்தார். அந்தளவிற்கு அவரைச் சுற்றியேதான் செய்திகள் வலம்வந்தன. ஆனால் ட்ரம்ப்போ, "புவிவெப்பமயமாதல் என்பது போலியான ஒன்று. இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் தொழில்வளர்ச்சியைப் பாதிக்கும்" என்ற கருத்தில் இன்னும் மிக உறுதியாக இருக்கிறார். எனவே, அமெரிக்கா இந்த முடிவில் இருந்து பின்வாங்க வாய்ப்பே இல்லை. 

"இந்த பூமியைக் காப்பாற்றுவதற்கு நமக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு இது" என பாரிஸ் ஒப்பந்தம் பற்றி முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஒருமுறை கூறியிருந்தார். இந்த உண்மையை புரிந்துகொள்ள இன்னும் ட்ரம்ப்பிற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்படுமோ தெரியவில்லை. மிக சாதாரணமாக கையாள்வதற்கு இதுஒன்றும் அரசியல் பஞ்சாயத்து அல்ல; நம் எதிர்காலத் தலைமுறையினர் சந்திக்கவிருக்கும் அபாயம்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்