`இந்தியா வல்லரசாக மாறும், மூன்றாம் உலகப் போர் நிச்சயம்...’ - அதிரவைத்த நாஸ்ட்ரடாமஸ்! #HBDNostradamus

ந்த உலகில் முன்கூட்டியே நடப்பவை பற்றிச் சிலர் கூறித்தான் வருகின்றனர். அவற்றில் சில நடக்கின்றன; பல நடக்காமலும் போகின்றன. ஆனால், நாஸ்ட்ரடாமஸ் கூறிய அனைத்தும் நடந்துவருகின்றன. அவருடைய குறிப்புகளைத் திரும்பத் திரும்ப ஆராய்ந்து, அவர் சொன்னவற்றில் எவையெல்லாம் நடந்திருக்கின்றன என்று வியந்துபோகிறார்கள் ஆய்வாளர்கள். அவரால் எப்படிச் சரியாக எதிர்காலத்தைக் கணிக்க முடிந்தது என்பது யாராலும் விளங்கிக்கொள்ள முடியாத ஆச்சர்யம். யார் இந்த நாஸ்ட்ரடாமஸ்? பார்ப்போம்...

நாஸ்ட்ரடாமஸ்

1503-ம் ஆண்டு, டிசம்பர் 14-ம் தேதி ஃபிரான்ஸில் பிறந்தார் மைக்கேல் என்ற நாஸ்ட்ரடாமஸ். இவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். அதனால் இவருக்கு சிறுவயதிலேயே ஜோதிடம், ஆருடம் போன்றவற்றில் ஆர்வம் இருந்தது. கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு போன்ற மொழிகளைக் கற்றார்.' இவனுடைய எதிர்காலம் என்னாவது?' என்று பெற்றோர்கள் கவலைப்பட்டனர். மான்ட்பெலியர் (University of Montpellier) பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, மருத்துவப் படிப்பை முடித்துவிட்டு மக்களுக்குச் சேவை செய்துவந்தார். பின்னர் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஓர் ஆண், ஒரு பெண் குழந்தை. 1537-1538 காலகட்டத்தில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை பிளேக் நோய்க்குப் பறிகொடுத்தார். அதன் பின்னர் நாடோடி வாழ்க்கையை நடத்திவந்தார். பிறகு இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது எழுத ஆரம்பித்தார்

உலகம் முடியும் வரைக்குமான தன்னுடைய கணிப்புகளை எழுதத் தொடங்கினார். `தி சென்சுரீஸ்’ (The Centuries) என்ற நூலில் தன்னுடைய கணிப்புகளை எழுதினார். இதனால் இவர்மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. பலர் இவரைப் பழித்தும் பேசினார்கள். தன்னுடைய இறுதி நாள்களில் மூட்டு தொடர்பான உபாதைகளால் கஷ்டப்பட்டார். அப்போது, உயில் எழுதுவதற்காக பதிவாளர் வரவழைக்கப்பட்டார். அவரிடம் நாஸ்ட்ரடாமஸ், ``நான் நாளை காலை இறந்துவிடுவேன்’’ என்று கூறினார். அது நடந்தது.

வரலாற்றுச் சம்பவங்கள்...

அப்படி என்னதான் நாஸ்ட்ரடாமஸ் தன் புத்தகத்தில் சொல்லி இருக்கிறார்? நெப்போலியன், கென்னடி சகோதரர்கள் படுகொலை, இங்கிலாந்து இளவரசி டயானா கார் விபத்தில் மரணம் அடைந்தது... மூன்றாம் உலகப்போர் குறித்தும், உலகம் அழிவது குறித்தும் பல சம்பவங்களை 'தீர்க்கதரிசியாக'க் கண்டறிந்துள்ளார். அவற்றில் சில...

இரட்டைக் கோபுரம்

இரட்டை கோபுரத் தாக்குதல் :

`21-ம் நூற்றாண்டின் தொடக்க காலகட்டத்திலேயே 45 டிகிரி கோணத்தில் வானத்தில் தீப்பிழம்புகள் தோன்றும். தீ நகரத்தையே ஆக்கிரமிக்கும். பயங்கரவாதத்தின் பேரரசன் வருவான். அவன் எதனிடமும் இரக்கம் காட்ட மாட்டான்’ என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், `வானில் இரண்டு இரும்புப் பறவைகள் பறக்கும்; புகையும் நெருப்பும் புது நகரத்தையே மூடும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். `45 டிகிரி கோணத்தில் அமைந்துள்ளது அமெரிக்கா. பயங்கரவாதப் பேரரசன் வேறு யாரும் இல்லை, பின்லேடன்தான்’ என்கிறார்கள்.

ஹிட்லர் :

`முற்றுகையிட்டவர்களின் கோட்டை துப்பாக்கி மற்றும் வெடி மருந்தால் மூடப்பட்டிருக்கிறது. துரோகிகள் உயிரோடு சமாதி ஆவார்கள்’ என்று நாஸ்ட்ரடாமஸ் குறிப்பில் உள்ளது. அதாவது, ஹிட்லர் மற்றும் அவருடைய கூட்டாளிகள் பதுங்குகுழியில் இறந்ததைக் கூறுகிறது.

ஹிரோஷிமா-நாகசாகி :லூயி பாஸ்டர்

`துறைமுகத்துக்கருகில் இரண்டு நகரங்கள் முன்பு ஒருபோதும் கண்டிராத அளவுக்குப் பேரழிவுக்கு உள்ளாகும். பஞ்சம், கொள்ளை நோய் இருக்கும். மக்கள் உதவி கேட்டு ஓலமிடுவார்கள்.’ - இது ஹிரோஷிமா மற்றும் நாகசாகிச் சம்பவங்களை உணர்த்துகிறது.

இஸ்ரேல் தோற்றம் :

`புதிய நிலத்தில் புதிய சட்டம். சிரியா, பாலஸ்தீனம், ஜூடியா போன்றவை பிரியும்.’ - இஸ்ரேல் நாடு உருவானதை இது குறிக்கிறது.

லூயி பாஸ்டர் :

`நீண்டகாலமாக மறைந்துகிடந்த விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவர் கடவுளைபோல் போற்றப்படுவார். சந்திரனின் பெரிய சுழற்சி முடியும் நாளன்று இது நடக்கும். ஆனால், சீக்கிரம் எதிர்ப்புக்கு உள்ளாவார்.’- இதன்படியே லூயி பாஸ்டர், வாயு மண்டலத்தை பாதிக்கும் கிருமிகளைக் கண்டறிந்தார். பின்னர் 'ஹைட்ராபோபியா' நோய்க்கு இவர் கண்டுபிடித்த ஊசி பலத்த எதிர்ப்புக்குள்ளானது.

முசோலினி

`பாமர மக்களிடையே அந்த நீசன் விவாதப் பொருளாக இருப்பான். மிகவும் கீழ்மட்ட குடும்பத்தில் பிறந்து, இத்தாலியை ஆளும் நிலையை அடைவான். தன்னுடைய கட்சியினருக்கு துரோகமிழைத்து ஆட்சியுரிமையைக் கைப்பற்றுவான்' - இது முசோலினியைக் குறிக்கிறது.

இந்தியாவைப் பற்றி நாஸ்ட்ரடாமஸ் சொன்னவை...

இந்திரா காந்தி

'மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில், பெரும் அதிகாரம்கொண்ட பெண்மணி எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இன்றி இருப்பதால் அதிகாரத்தை மீண்டும் பெறுவார். தனது சொந்த மெய்க்காப்பாளர்களாலேயே அவர் 67-ம் வயதில் கொல்லப்படுவார். நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது இது நடக்கும்' என்று கூறியிருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ். எமர்ஜென்ஸியால் தேர்தலில் தோற்றுப்போன இந்திரா காந்தி எதிர்க்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டை போட்டுக்கொண்டதால் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியதையும், 1984-ம் ஆண்டில் அவர் சொந்த மெய்க்காப்பாளர்களில் ஒருவனால் சுடப்பட்டதையும் இது குறிக்கிறது.

இந்திரா காந்தி

நேதாஜி

`தன்னுடைய நாட்டைவிட்டு, அந்நிய நாடுகளில் சுற்றிக்கொண்டிருப்பவர். ஓர் இந்திய தலைவர். தனது நாட்டின் விடுதலைக்காக அவர் பல நாடுகளுக்கும் செல்வார். ஒரு விடுதலைப் படையை உருவாக்கி ஆளும் அரசை எதிர்ப்பார். இந்த தலைவர் விமான விபத்தில் கொல்லப்படுவார்.’ - இதுவும் உண்மையானது.

மகாத்மா

`இந்தியாவின் சிறந்த தலைவர் ஒருவர் பாமர மக்களிடம் கருணை கொண்டவராக இருப்பார். தன்னுடைய அறிவால் மாற்றத்தை ஏற்படுத்துவார். ஆனால், துரதிர்ஷ்டவசமாகக் கொல்லப்படுவார். நாடே துயரக் கடலில் மூழ்கும்.’ - இந்தக் கூற்றும் அப்படியே நடந்தது.

சிலர், `நாஸ்ட்ரடாமஸ் கூறியது பொய்’ என்று கூறுகின்றனர். தன் நூலை சிலர் சுயநலத்துக்காகப் பயன்படுத்துவார்கள் என்று கருதி தனது கணிப்புகளை புதிர்போல் செய்யுள் வடிவில் அமைத்தார் நாஸ்ட்ரடாமஸ். பிற்காலத்தில் மொழிபெயர்ப்பாளர்கள் சரியாக மொழிபெயர்க்காததே தவறு ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணம் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். `இந்தியா 21-ம் நூற்றாண்டில் வல்லரசாக மாறும்’ என்றும் அவர் கூறியிருக்கிறார்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!