வெளியிடப்பட்ட நேரம்: 07:53 (14/12/2017)

கடைசி தொடர்பு:12:48 (14/12/2017)

கேமராவுடன் மூன்று ஆண்டுகள் காத்திருந்த புகைப்படக்காரர்... சிக்கிய வெள்ளைக் கடமான்! #ViralVideo

அழிந்து வரும் இனங்களின் பட்டியலில் புலி, பனிக்கரடி, நீர் யானைகள் உள்ளிட்ட பல விலங்குகள் இடம்பெற்றுள்ளன. அதில் வெள்ளைக் கடமானுக்கு முக்கிய இடம் உண்டு. கடமான் இனம் உலகில் அதிகமான நாடுகளில் பரவலாக காணப்பட்டாலும், தெற்கு ஆசியாவில் காணப்படும் மான் இனங்களில் மிகப்பெரியது. ஒடிசாவின் மாநில விலங்காக இருப்பதும் கடமான் என்று சொல்லக்கூடிய கடம்பை மான் தான். கடமான்கள் உலகம் முழுவதும் பரவலான எண்ணிக்கையில் இருந்தாலும், வெள்ளைக் கடமான்கள் எண்ணிக்கையில் குறைந்த அளவிலேயே உள்ளன. கடமான்கள் கேட்கும் திறனையும், நுகரும் திறனையும் அதிகமாகக் கொண்டிருக்கும். ஆண் கடமானின் கொம்புகள் ஆண்டுதோறும் விழுந்து மீண்டும் முளைக்கும். இக்கொம்புகள் மிகவும் கூர்முனையுடன் மிகக்கடினமாக இருக்கும். கொம்புகளின் மேலே மிக மிருதுவான தோல் போன்ற அமைப்பைப் பெற்றிருக்கும். 

வெள்ளைக் கடமானின் கொம்பு கூர்மையாக இல்லாமல், முனை மழுங்கியதாக இருக்கும். பருவமடைந்த வெள்ளைக் கடமானின் எடை 220 முதல் 320 கிலோ வரை இருக்கும். உயரம் 100 செ.மீ முதல் 160 செ. மீ. வயது வந்த ஆண் வெள்ளைக் கடமானுக்கு 30-40 அங்குல நீளமுள்ள பெருங்கொம்புகள் உண்டு. பெண் வெள்ளைக் கடமானுக்குக் கொம்புகள் இருக்காது. ஆனால், பெண் வெள்ளைக் கடமானின் தலைமையில்தான் மற்ற கடமான்கள் இயங்குகின்றன. கொம்பின் மேலுள்ள தோலில் ரத்த ஓட்டம் இருப்பதால், சிறு காயம் பட்டாலும் ரத்தம் வந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். ஆகையால் கொம்புகள் நன்கு வளரும் வரை கடமான் மிகவும் கவனமாகத்தான் நடமாடும். இதனால்தான் வெள்ளைக் கடமான்களை அதிகமாகக் காண முடிவதில்லை. கொம்புகள் முழு வளர்ச்சி அடைந்ததும் மேல் தோல் உலர்ந்து உதிர்ந்துவிடும். 

வெள்ளைக் கடமான்கள் சுவீடனில் மட்டுமே காணப்படுகிறது. வெள்ளைக் கடமான்களை காண்பது மிகவும் அரிது. எப்போதாவது ஒருமுறை மட்டுமே காணமுடியும். அதற்கு நீர் நிலைகளை மையமாகக் கொண்ட அவற்றின் வாழ்க்கையும் ஒரு முக்கியமான காரணம். வெள்ளைக் கடமான்கள் தனித்து வாழும் பழக்கம் கொண்டது. இதன் முக்கிய உணவு  தாவரங்கள் மட்டும்தான். திறந்தப் புல்வெளிகளில் மாலை, இரவு, விடியற்காலை பொழுதுகளில் மட்டும் மேய்ச்சலுக்காகச் செல்லும். இதனால் அரிதாகவே காணமுடிந்த இக்கடமானை இயற்கை ஆர்வலர் அன்ஸ் நீல்சன் தனது கேமராவில் வீடியோ எடுத்துள்ளார். இதற்காக அவர் காத்திருந்தது மூன்று ஆண்டுகள் என்றால் நம்ப முடிகிறதா? அவர் எடுத்துள்ள வீடியோவில் ஆற்றை நீந்திச் செல்லும் வெள்ளைக் கடமான் மூன்று ஆண்டுகளாக அந்த இடத்தைக் கடந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. ஆனால், முழுமையாகத் தனது கேமராவில் பதிவு செய்யாமல் தவித்திருக்கிறார், அன்ஸ் நீல்சன். வீடியோவில் தோன்றும் கடமான் அழகிய தோற்றமும், நீந்திச் செல்வதும் பார்ப்போரை நிச்சயமாக ஈர்க்கும். சுவீடனில் அதிகபட்சமாக 100 கடமான்கள் மட்டுமே இருக்கின்றன என்பதுதான் வருத்தம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அந்த அளவுக்கு வெள்ளைக் கடமான்களின் இனம் அழிவின் முடிவை நெருங்கிவிட்டது. இதற்குக் காரணம் சுவீடன் அரசு இதைக் கவனிக்காததுதான் என்பது இயற்கை ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. 

மனிதர்கள் பிறப்பதற்கு முன்னர் தோன்றிய விலங்குகள் அழிவினைச் சந்தித்து வருவது, அடுத்தது மனித இனம் அழிவினை சந்திக்கப் போகிறது என்பதற்கான எச்சரிக்கை மணி என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?


டிரெண்டிங் @ விகடன்