வெளியிடப்பட்ட நேரம்: 17:14 (14/12/2017)

கடைசி தொடர்பு:17:14 (14/12/2017)

மெரினா கலங்கரை விளக்கமும் சில சுவாரஸ்யத் தகவல்களும்..!

கலங்கரை விளக்கம்

உலகில் கடல் பயணங்கள் தோன்றிய காலங்களிலேயே கலங்கரை விளக்கங்களும் தோன்றிவிட்டன. தூரத்தில் வரும் கப்பல்களுக்குக் கரையைக் காட்டுவதே கலங்கரை விளக்கங்களின் வேலை. எகிப்தின் ‘பாரோஸ் ஆஃப் அலெக்ஸாண்ட்ரியா’ மற்றும் கிரீஸின் ‘கொலாஸஸ் ஆஃப் ரோட்ஸ்’ ஆகிய இரண்டு கலங்கரை விளக்கங்கள் பண்டைய கால உலக அதிசயங்களில் இடம்பெற்றிருந்தன. 
தமிழ்நாட்டில் மொத்தம் 25 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. அவற்றுள் சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருப்பது முக்கியமான ஒன்றாகும். சுமார் நாற்பத்து ஐந்து அடி உயரத்தில் பத்து தளங்களுடன் கட்டப்பட்ட இது சென்னையின் நான்காவது கலங்கரை விளக்கம் ஆகும்.

சென்னையின் முதல் கலங்கரை விளக்கம் 1796 ஆண்டு ‘ஆபீஸர்ஸ் மெஸ் கம் எக்ஸ்சேஞ்ச் பில்டிங்’ன் (தற்போதைய செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்) மொட்டை மாடியில் அமைக்கப்பட்டது. தற்போது இருப்பது போல் நவீன தொழில்நுட்பத்துடன் இல்லாமல் வெளிச்சம் தரும் பெரிய விளக்காக மட்டுமே அது இருந்தது. இது 1841 வரை செயல்பட்டது. பின்னர் அது செயின்ட ஜார்ஜ் கோட்டையாக மாற்றப்பட்டது. 
இரண்டாவது கலங்கரை விளக்கம் முப்பத்து எட்டு அடி ஊதா நிற கோபுரம். செயின்ட் ஜார்ஜ் கோட்டையின் வடக்கில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டது. இது 1884ஆண்டு  ஜனவரி ஒன்றாம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. அந்த இடம் தற்போதைய உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ளது. 1894 ஆம் ஆண்டு வரை செயல்பட்ட இது அர்பன் விளக்குகள் மற்றும் பிரதிபலிப்பான்களுடன் கூடிய ஒளிரும் விளக்காக அமைக்கப்பட்டிருந்தது.

மூன்றாம் கலங்கரை விளக்கம் 1894 ஆம் ஆண்டு, அப்போது புதிதாக கட்டப்பட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் மத்திய பிரதான குவிமாடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த இந்தோ-சரசெனிக் கட்டடக்கலை பாணியானது கலங்கரை விளக்க உபகரணங்கள் அமைப்பதற்கு ஏதுவான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. 1894ஆம் ஆண்டு ஜுன் 1ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்த இது கடல் மட்டத்திலிருந்து 175 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. மின் சக்தியின் வருகைக்கு முன்னால் மண்ணெண்ணெய், நீராவி விளக்குகளையே இது பயன்படுத்திக் கொண்டிருந்தது.

Light house


சென்னையின் நான்காம் கலங்கரை விளக்கமாக தற்போது இருக்கும் நாற்பத்து ஆறு அடி உயர சிவப்பு மற்றும் வெண்மை நிற பட்டைகளுடன் கூடிய முக்கோண கட்டடம். இது 1977ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்தியாவிலேயே நகரத்தின் எல்லைக்குள்ளேயே இடம் பெற்றிருக்கும் ஒரே கலங்கரை விளக்கம் இதுவே. மொத்தம் பத்து தளங்களுடன் கூடிய இந்தக் கலங்கரை விளக்கத்தில் ஒன்பதாவது தளத்தில் மக்கள் பார்வையிடுவதற்காக வியூவிங் கேலரி ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. அங்கே கம்பிகள் அமைக்கப்பட்டு பார்வையாளர்கள் பாதுகாப்பாக நின்று ரசிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கின்றது. பாதுகாப்புக் காரணங்கள் கருதி, முன்னர் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் 2013ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி முதல் மீண்டும் குறிப்பிட்ட நேரம் மட்டும் பார்வையாளர்களுக்காகத் திறக்கப்படுகிறது. 

Light house


இந்தக் கலங்கரை விளக்கத்தின் பத்தாவது தளத்தில் உயர் பாதுகாப்பு ரேடார் அமைக்கப்பட்டுள்ளதால் பார்வையாளர்கள் பத்தாம் தளத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. கீழே இருந்து மேலே செல்வதற்கு அதிவேக மின் தூக்கியும்(lift) இங்குள்ளது. இருபத்து எட்டு கடல் மைல்கள் வரை இதன் ஒளி தெரியும். மேல் தளத்தில் அமைக்கப்படுள்ள ரேடார் மூலம் 100 கிலோமீட்டர் வரை கடலில் உள்ள படகுகள் கப்பல்களை கண்டறிய முடியும்.

இந்தக் கலங்கரை விளக்கத்தின் தரை தளத்தின் பின்னால் பாரம்பர்ய அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. இங்கு இதற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த கலங்கரை விளக்கத்தில் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களைக் காட்டும் கருவிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல் சென்னை கலங்கரை விளக்கங்களின் ஓவியங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

மெரீனா

ஒன்பதாம் தளத்தில் கேலரியிலிருந்து பார்க்கும் பொழுது சென்னை மாநகரமும் மெரினா கடற்கரையும் இணைந்து அழகாகக் காட்சியளிக்கின்றது. கலங்கரை விளக்கத்தைக் காண வந்திருந்த சுற்றுலாப் பயணிகளிடம் அவர்களின் அனுபவங்களைக் கேட்டோம்.
“நாங்க மைசூருலிருந்து வர்றோம். இந்த லைட் ஹவுஸை சுத்திப் பார்த்தது நல்லா இருந்துச்சு. மேல கேலரிலதான் இடம் ரொம்ப கம்மியா இருந்ததால வசதியா நின்னு பார்க்க முடியல. மத்தபடி செம” எனத் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர் மேரி குடும்பத்தினர்.
அங்கே நேவிகேஷன் ஆபீஸராகப் பணிபுரியும் நீலகண்டன் அவர்களிடம் பேசினோம், ”வழக்கமா தினமும் நானூறுலிருந்து ஐநூறு பேர் வரை வருவாங்க. விடுமுறை நாள்கள்னா 800 பேர் வருவாங்க. இந்த லைட் ஹவுஸ்க்கு ”சிறந்த லைட் ஹவுஸ்”னு தமிழ்நாடு சுற்றுலாத் துறையிலிருந்து போன வருஷம் அவார்டு குடுத்தாங்க” என முடித்தார். 

சென்னையில் மறக்காமல் பார்க்க வேண்டிய இடங்களில் இந்தக் கலங்கரை விளக்கமும் ஒன்று.


டிரெண்டிங் @ விகடன்