திரைப்பட விழாக்களில் கவனம் குவிக்கும் 'மனுசங்கடா' - வலி சொல்லும் ஆவணம்!

``மனுசங்கடா நாங்க மனுசங்கடா 

உன்னப்போல அவனப்போல எட்டு சாணு ஒசரமுள்ள 

மனுசங்கடா... நாங்க மனுசங்கடா..!''

மறைந்த கவிஞர் இன்குலாபின் சமூகநீதிக்கான பாடல் வரிகள் இவை. சமூகநீதி மேடைகளிலும், சாதி அடக்குமுறைக்கு எதிரான கூட்டங்களிலும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக ஒலித்துக்கொண்டிருக்கும் இந்தப் பாடல், `மனுசங்கடா' என்ற திரைப்படத்தில் தற்போது இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் அம்ஷன்குமார் என்பவர் இயக்கியுள்ளார்.

பொதுவாக திரைப்படம் எடுப்பது என்பது, பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் நிகழும் ஒன்று. பொருள்செலவு, நடிகர் - நடிகைகளின் கால்ஷீட், திரைப்பட விநியோகம் என, பலதரப்பட்டப் படிநிலைகளைக் கடந்த பிறகே ஒரு திரைப்படம் வெளியாகிறது. ஆனால், வியாபாரம் முக்கியமான ஓர் அங்கமாக இருப்பதால், வெகுஜன மக்களுக்குப் பிடித்தமான வகையிலேயே நிறைய படங்கள் வெளிவருகின்றன. சமூக அவலங்களைப் பேசும் சில படங்கள் வெளிவந்தாலும், அவை காத்திரமான கருத்துகளை முன்வைப்பதில்லை. இதுபோன்ற படைப்புச் சிக்கல்களுக்கு மாற்றாகத்தான் சுயாதீனத் திரைப்படங்களும் ஆவணப்படங்களும் உள்ளன. அந்த வரிசையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நிகழும் அநீதிக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள திரைப்படம்தான் `மனுசங்கடா'.

இந்தப் படம், சென்னையில் தொடங்கியுள்ள சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது. மும்பை மற்றும் கோவாவில் நடைபெற்ற சர்வதேச விழாக்களிலும் இந்தப் படம் திரையிடப்பட்டு, பரவலாக கவனம் ஈர்த்தது. மிகக்குறைந்த பொருள்செலவில் எடுக்கப்படும் இதுபோன்ற திரைப்படங்கள், பல்வேறு நாடுகளில் நடக்கும் சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்படுகின்றன.

மனுசங்கடா

25-க்கும் அதிகமான ஆவணப்படங்களை இயக்கியுள்ள அம்ஷன்குமார், இதற்கு முன் `ஒருத்தி' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். `எல்லைகளுக்கு அப்பால் இசை' என்ற யாழ்ப்பாணம் தட்ஷணாமூர்த்தி பற்றிய ஆவணப்படத்துக்காக தேசிய விருது பெற்ற அவரிடம் பேசியதிலிருந்து...

``இந்தத் திரைப்படம், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. தலித் மக்கள் இறந்துபோனால், அவர்களின் உடலை பொது வழியில் எடுத்துச் செல்ல இன்றும் அனுமதி மறுக்கப்பட்டுவருகிறது. பல இடங்களில், தலித் மக்களுக்கான மயான வசதிகளே இல்லை. `மனுசங்கடா' படம், இந்தப் பிரச்னை குறித்துப் பேசுகிறது.

மறைந்த கவிஞர் இன்குலாப், படத்தின் யதார்த்தத்துக்கு ஏற்ப `மனுசங்கடா...' பாடலில் சிறுசிறு மாற்றங்களுடன் எழுதிக் கொடுத்தார். அது இந்தப் படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம். இந்தப் படத்தில் நடித்துள்ளவர்கள் அனைவரும் திரைத் துறைக்குப் புதிது. ஆனால், நாடகத் துறையிலும், கலை, இலக்கியத் துறையிலும் நன்கு பரிச்சயமானவர்கள். ராஜீவ் ஆனந்த், `கூத்துப்பட்டறை' மணிமேகலை, ஷீலா ராஜ்குமார், `நாடகவியலாளர்' கருணா பிரசாத் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். `கெய்ரோ' சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டபோது `புதைக்கும் வழக்கம் இந்துக்களிடம் உள்ளதா?' என ஆச்சர்மயமாகக் கேட்டார்கள். மும்பை மற்றும் கோவாவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களிலும் படம் திரையிடப்பட்டது. சென்ற வருடம் நிறைய திரைப்பட விழாக்களில் கலந்துகொண்ட தமிழ்மொழிப் படம் `மனுசங்கடா'தான்" என்றார். 

மனுசங்கடா

``வெகுஜன சினிமா, நிறைய மக்களை சென்றடையும். ஆனால், சுயாதீனப்படங்களுக்கு அப்படியான நிலை இருக்கிறதா?"

மனுசங்கடா ``தமிழ்ச் சூழலில் விநியோகம் சார்ந்த பிரச்னைகள் நிறைய உள்ளன. மல்டிபிளெக்ஸ்கள் நிறைய வந்த பிறகும் சிறிய படங்களுக்கான தியேட்டர்கள் கிடைப்பதில்லை. எல்லா படைப்பாளிகளும் தன்னுடைய படைப்பு நிறைய மக்களைச் சென்றடைய வேண்டும் என்றே விரும்புவர். ஆனால், அதற்கான சூழல்தான் அமைவதில்லை" என்றார்.

படத்தில் நடித்த நாடகவியலாளர் கருணா பிரசாத்திடம் படம்குறித்துப் பேசினோம்.

``சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுவது மகிழ்ச்சியான ஒன்று. சமூகத்தில் நிலவும் மிக முக்கியமான பிரச்னைகள்குறித்து படம் பேசுகிறது. கலை, இலக்கியத் துறைகளில் இயக்குநர் தொடர்ந்து இயங்கிவருவதால், அவரது படைப்பு நிச்சயம் பேசப்படக்கூடிய ஒன்றாக இருக்கும். படத்தில், நாடகத் துறை நண்பர்கள்  பலர் நடித்துள்ளனர். நாடகத் துறை சார்ந்தவர்கள் மற்றும் நடிப்புப் பயிற்சி பெற்றவர்களுக்கு திரைப்படங்களில் வாய்ப்பளிக்கப்படுவது ஆரோக்கியமான ஒன்று'' என்றார்.

ரஷ்யன் கல்ச்சர் சென்டரில் இம்மாதம் 18-ம் தேதி நடக்கவிருக்கும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவில் `மனுசங்கடா' படம் திரையிட உள்ளது. நாடகத் துறையில் நடிப்புப் பயிற்சி பெற்றவர்கள், கலை - இலக்கியத்தில் பரிச்சயமுள்ளவர்கள் போன்றோர் திரைத் துறைக்குள் வருவது நல்லதொரு மாற்றமாக அமையும். அதுமட்டுமின்றி, குறைந்த தயாரிப்புச் செலவில் தயாராகும் இதுபோன்ற சுயாதீனத்திரைப்படங்கள்,  படைப்புச் சுதந்திரத்தை ஏற்படுத்தி, நல்ல படைப்புகள் வெளிவர நிச்சயம் வழிகாட்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!