வெளியிடப்பட்ட நேரம்: 08:59 (15/12/2017)

கடைசி தொடர்பு:10:03 (15/12/2017)

முகமற்றவர்களின் குரலாக ஒலிக்கும் புகைப்படங்கள்! - சிறையிலிருந்தவர் ஸ்ட்ரீட் போட்டோகிராபர் ஆன கதை #MotivationStory

கதை

ரு பள்ளியின் கதவைத் திறப்பவர், சிறையின் கதவை மூடுகிறார்’ என்கிறார் ஃபிரெஞ்ச் நாவலாசிரியரும் கவிஞருமான விக்டர் ஹியூகோ (Victor Hugo). கல்வி, மற்ற எல்லா தீமைகளையும் அடித்து விரட்டிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. சிறைச்சாலை என்பது மனிதர்களைத் திருத்துவதற்கான இடம். சரி. உண்மையில் அது எத்தனை பேரைத் திருத்தியிருக்கிறது என்பது மிகப் பெரிய கேள்வி. ஆனால், விக்டர் ஹியூகோ சொல்வதில் ஆழமான ஒரு பொருள் இருக்கிறது. ஏதோ ஒரு கலை... ஆர்வத்தோடு அதைக் கற்றுக்கொள்கிறார் ஒருவர். தான் கற்றதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தினால், அவர் சிறையில் இருந்தவராக இருந்தாலும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவராக இருந்தாலும் அதிலிருந்து மீண்டுவிடுவார். அதற்கு உதாரணம், டொனேடோ டிகேமிலோ-வின் (Donato DiCamillo) கதை.

டொனேடோ டிகேமிலோ

நியூயார்க்கில் இருக்கும் புரூக்ளினில் பிறந்தார் டொனேடோ டிகேமிலோ. அம்மாவும் அப்பாவும் இத்தாலியிலிருந்து அமெரிக்காவில் வந்து குடிபுகுந்தவர்கள். உடன் பிறந்தவர்கள் மூன்று பேர். எல்லா நாடுகளிலும், சமூகங்களிலும் சில குழந்தைகளுக்கு இப்படி நடப்பதுண்டு. வறுமை, நண்பர்கள் சேர்க்கை சரியில்லை... இளம் வயதிலேயே நடத்தைக் கோளாறுகளுக்கு (Behavioral Problems) ஆளானார் டொனேடோ. யார் மீது, எதன் மீது என்று தெரியாத கட்டுக்கடங்காத கோபம் அவருக்கு வந்தது. அவருடைய முரட்டு சுபாவம் காரணமாக அவரை நெருங்கவே எல்லோரும் பயந்தார்கள். இத்தனைக்கும் அவருக்கு பெரிய கனவெல்லாம் இருந்தது... சாகசங்கள் புரிய வேண்டும், பல நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டும், உலகின் பல பகுதிகளிலிருக்கும் பல கலாசாரங்களைப் பார்த்து, தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற கனவு. அது அவருக்குக் கைகூடவே இல்லை.

அவர் குழந்தையாக இருந்தபோது ஒரு சம்பவம் நடந்தது. அவருடைய முதல் நண்பன்... ஒன்பது வயது... அவர் கண் முன்னாலேயே ஒரு விபத்தில் இறந்துபோனான். இப்படிப் பல விபத்துகளையும் அதிர்ச்சி சம்பவங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டார் டொனேடோ. அதனாலேயே உள்ளுக்குள் முரட்டுத்தனம் மிக மூர்க்கமாக வளர்ந்தது. அவர் வளர்ந்த புரூக்ளின் அவரை மேலும் மேலும் வன்முறை நிறைந்த மனிதனாக்கும் ஊராக இருந்தது.

பள்ளியும் டொனேடோவை அரவணைத்துக்கொள்ளவில்லை. ஆசிரியர்கள், சக மாணவர்கள் அத்தனை பேரிடமும் அவருக்குக் கெட்ட பெயர். ஒரு வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்டதற்காக, நிர்வாகம் அவரைப் பள்ளியிலிருந்து துரத்தியபோது, அவருக்கு 16 வயது. அதற்குப் பிறகு வாழ்க்கைக் கொஞ்சம்கூட சீராக இல்லை. சிறைச்சாலைகளுக்கும், சீர்திருத்தப் பள்ளிகளுக்கும் போவதும் வருவதுமாக இருந்தார் டொனேடோ. வாழ்க்கை சிலருக்கு எந்தப் பிடிப்புமில்லாமல் போய்க்கொண்டிருக்கும். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளப் பழகிக்கொள்வார்கள் சிலர். வேறு சிலரோ பற்றிக்கொள்ள ஏதோ ஒன்று கிடைத்துவிட்டால், அதை சிக்கென்று பிடித்துக்கொண்டு வேறோர் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழப் பழகிக்கொள்வார்கள்.

சிறைச்சாலை

ஒருமுறை, ஏதோ ஒரு குற்றத்துக்காக அமெரிக்கா, விர்ஜினியாவின் பீட்டர்ஸ்பர்க் சிறையிலிருந்தார் டொனேடோ. அங்கேதான் அவருக்கு போட்டோகிராபியின் மேல் ஆர்வம் வந்தது. அதுதொடர்பான புத்தகங்கள் படித்தார். பூச்சிகளையும் தாவரங்களையும் படம்பிடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இனி போட்டோகிராபிதான் தன் வாழ்க்கை என்று முடிவே செய்துவிட்டார். 2012-ம் ஆண்டு, சிறையிலிருந்து வெளியே வந்ததும் புகைப்படங்களை எடுக்க ஆரம்பித்தார். அவரை `ஸ்ட்ரீட் போட்டோகிராபர்’ என்றுதான் அமெரிக்காவில் அழைக்கிறார்கள். அதில் உண்மையில்லாமல் இல்லை. அவர் கேமராவில் படங்களாக விழுபவர்கள்... ஏதுமற்றவர்கள், எளியவர்கள், மனநலம் குன்றியவர்கள், பிச்சைக்காரர்கள்... சுருக்கமாக விளிம்புநிலை மனிதர்கள். நியூயார்க் முழுக்க பயணம் செய்து இப்படிப்பட்டவர்களை கேமாராவில் படம்பிடிக்கிறார் டொனேடோ டிகேமிலோ. அந்த மனிதர்களைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் டொனேடோ... `இவர்களெல்லாம் இங்கே சுற்றிச் சுற்றி வந்தாலும் முகங்களற்றவர்கள்.’

சரி... அவர் எடுத்த புகைப்படங்களில் சில சாம்பிள்கள்...

ரோசாரியோ (Rosario)

வயது 55-க்கும் அதிகமாக இருக்கலாம் என்கிற தோற்றம். ஒரு கண்ணில் பூ விழுந்ததுபோல வெள்ளையாக மரு. விழித்துப் பார்த்து நம்மை பயப்படவைக்கும் முகம். ரோசாரியோவைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார் டொனேடோ... ``சிசிலியில் பிறந்தவர் ரோசாரியோ. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். வளர்த்தவர்களால் கைவிடப்பட்டு தெருவில் விரட்டப்பட்டவர். குழந்தையாக இருந்தபோது ஓர் அனாதை இல்லத்தில் நடந்த மோதலில், ஒரு கண்ணில் அடிபட்டு அவருக்கு இப்படியாகிவிட்டது. இப்போது எந்த அளவுக்கு சிறப்பாக வாழ முடியுமோ அந்த வாழ்க்கையை வாழ்கிறார். சிலபல வேலைகளைச் செய்து பிழைத்துக்கொண்டிருக்கிறார்.’’

புகைப்படக் கலைஞன்

இதுபோல நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் எத்தனையோ மனிதர்களின் புகைப்படங்களை அவர் எடுத்திருக்கிறார். 91 வயதிலும் உடற்பயிற்சி செய்யும் பாட்டி, பற்களை எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு கறையாக்கிவைத்திருக்கும் இளைஞன், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிவிட்டு இருக்க ஒரு வீடுகூட இல்லாத மிலிட்டரிகாரர், மனநலம் குன்றிய இரு குழந்தைகளை வீட்டில் வைத்து வளர்க்கும் தாய்.. என நீள்கிற புகைப்படங்கள் நம்மை உலுக்கியெடுக்கின்றன.

இன்றைக்கு உலகம் முழுக்க டொனேடோ பிரபலமாகிவிட்டார். `பிபிசி’, `வாஷிங்டன் போஸ்ட்’... உள்ளிட்ட பிரபல ஊடகங்களிலெல்லாம் அவர் வந்துவிட்டார். அவர் எடுத்த புகைப்படங்கள் விரைவில் ஒரு புத்தகமாகவும் வரவிருக்கின்றன.

டொனேடோ டிகேமிலோவின் மேலும் சில புகைப்படங்களைப் பார்க்க...

https://www.donatodicamillo.com/

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்