வெளியிடப்பட்ட நேரம்: 15:44 (15/12/2017)

கடைசி தொடர்பு:16:21 (15/12/2017)

‘நல்ல பெற்றோர்களுக்கு’ ‘நல்ல’ பெண்களின் வலி தெரியுமா.. புரியுமா?!

திருமணம்

மீபத்தில், நான் ஒரு வீடியோ பார்த்தேன். ஓர் இளம்பெண்  தன் குளியலறையில்  'ப்ரெக்னன்சி டெஸ்ட்’  “pregnancy test" எடுத்துக்கொண்டிருப்பார், மிகுந்த பதற்றத்தோடு! எதிர்பாராதவிதமாக, அந்த அறைக்குள் அவள் அம்மா நுழைவார். “மார்கெட்டிங் அண்டு சேல்ஸ் துறையில் உனக்குப் பயிற்சி தர உங்கப்பா முடிவு செய்திருக்கிறார். உன்னைப் பத்தி உங்கப்பாவுக்கு சின்னச் சின்ன கனவுகள்தான் உண்டு. உன்னை ஒரு பிசினஸ் விமன் ஆக்க வேண்டும் அல்லது ஒரு பிரதமர் ஆக்க வேண்டும்னு உங்கப்பா நினைக்க மாட்டாரா? அதுசரி... நீ ஏன் இந்தக் கதவை லாக் பண்ணாம வச்சிட்டு இருக்க? அப்படினா நான் உள்ளே வந்திருக்கமாட்டேன்ல? உங்க அப்பாகிட்ட நான்  சண்டை போட்டுட்டு இருக்கேன். நீ கல்யாணமே பண்ணிக்காத!  கல்யாணம்ங்கிறது ஒரு வலைபின்னல் மாதிரி!” என்றபடியே வாஷிங்மெஷினில் துணிகளைப் போட்டுவிட்டு மகள் பக்கம் வருவார். மகளோ பதற்றத்துடன் அவரை வழிமறிக்க 'நான் நாப்கின் எடுக்க வர்றேன் வழிவிடு'' என்பவர் 'ப்ரெக்னன்சி டெஸ்ட்'டை பார்த்ததும் உறைந்துபோய்விடுகிறார்.

“நான் செஞ்சது ரொம்ப தப்பும்மா. உங்களுக்கு நான் அவமானத்தைத் தேடிக் கொடுத்துட்டேன். என்னை வீட்டை விட்டு அனுப்பிடுங்க”, என்று நொந்து போய் பேசுகிறார் மகள். பதிலேதும் சொல்லாத அம்மா சிறிது நேரம் கழித்து “நீ குடிச்சிருந்தியா?” என்று மகளிடம் கேட்கிறார்

 “இல்லை”

“அந்தப் பையன் உன்னைக் கட்டாயப்படுத்தினானா?”  

“இல்லை. அவர் என்னுடைய பாய் ஃப்ரெண்ட் அம்மா” என்று அழுகையும் அவமானத்துடன் நிற்கும் மகள் அருகில் வந்து நிற்கும் அம்மா... “அழாதே, இது உன் தவறில்லை. எங்களுடைய தவறும்தான். காலம் முழுவதும் நல்ல பிள்ளைகளாக  இருக்கவேண்டும் என்று உங்களை நாங்கள்  நிர்பந்தப்படுத்துகிறோம். இப்போது நீ என்னிடம் பேசுவதற்குக்கூட பயப்படுக்கிறாய். கவலைப்படாதே! நடந்ததை உன் அப்பாவிடம் சொல்!  நாம் வளர்ந்துவிட்டோம் என்பதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்று அர்த்தம் இல்லை. நாம் எதைச் செய்கிறோம் என்பதற்கான முழு பொறுப்பை எடுத்துக்கொள்வதுதான் நாம் வளர்ந்துவிட்டோம் என்பதற்கான அடையாளம். உன் மேல் நான் மிகவும் கோபமாகத்தான் இருக்கிறேன். ஆனால், இப்போது உனக்கு நான் ஆதரவாக இல்லை என்றால் வேறு யார் இருப்பார்கள்? நல்ல குழந்தைகளாக இருக்கச் சொல்லும் நாங்கள் நல்ல பெற்றோராக நடந்துகொள்வது எங்களின் கடமையல்லவா?” என்றபடி முடிகிறது அந்த வீடியோ.

நெருக்கடியான சூழ்நிலைகளில் பிள்ளைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான அற்புதமான வீடியோ அது.

ஆனால், இதுப்போன்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நம் நாட்டில் நடப்பதற்கு, நிச்சயம் பல நூற்றாண்டுகள் ஆகும்! ஏனென்றால், ஒரு திருமணம்பெண்ணின் சுயத்தையே இன்னும் இந்த நாடு ஆங்கீகாரம் அளிக்கவில்லை. ஒரு பெண், தன் சமூகத்தைத் தாண்டி காதலித்து, அந்தக் காதலை தயங்கி தயங்கி தன் பெற்றோரிடம் கூறி, அவர்களின் எதிர்ப்புக்கு ஆளாகி, அடிஉதை வாங்கி, வேறு வழியில்லாமல் வீட்டை எதிர்த்து தன் காதலனை கரம்பிடிக்கும் பெண்ணுக்கு, இந்தச் சமூகம் மிக சுலபமாக “ஓடுகாலி” என்று பெயர் வைத்துவிடுகிறது. அப்புறம், “நீ அம்மாவாகி, உனக்கு ஒரு பிள்ளை பிறந்தால், அந்த வலி உனக்கு தெரியும்”, என்று சாபம் விடாத குறையாக தூற்றவும் செய்கிறது இந்தச் சமூகம்.

பொதுவாக, திருமணம், காதல், நட்பு என்று உறவு சார்ந்த விஷயங்களில் சிக்கல் எழும்போதும் முதலில் தூற்றப்படுவது பெண்ணாகத்தான் இருக்கும்! சங்கரின் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வந்தப்போது, கெளசல்யா தந்தைக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்பது போல பல மீம்களும் கமென்டுகளும் சமூகவலைத்தளத்தில் வந்துக்கொண்டிருந்தது. அதுமட்டுமில்லாமல், கெளசல்யாவின் நடத்தையை கேள்விக்கேட்கும் வண்ணம் பல மோசமான கேள்விகளும் வந்துக்கொண்டிருக்கின்றன. ஒரு பெண், தான் காதலித்த ஒருவனுக்காகவும், அவர் கொல்லப்பட்ட காரணத்துக்காகவும், போராடுவதும், அதற்காகக் குரல் கொடுப்பதற்கும், எத்தனைவிதமான விமர்சனங்களையும், மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும், அசிங்கங்களையும் கடந்துவர வேண்டியிருக்கிறது. 

பெற்றோர்கள் சம்மதமில்லாமல் காதல் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் எதிர்ப்பை வீட்டில் மட்டும் சந்திப்பதில்லை. வீடு தேடுவதில் ஆரம்பித்து குழந்தை பிறப்பு வரை பல இன்னல்களையும், வலிகளையும் கடந்து வரவேண்டியுள்ளது. அதோடு விட்டுவிடுமா இந்தச் சமூகம்... காதல் மணம் புரிந்த தம்பதியின் குழந்தையிடம் “உங்க அம்மா-அப்பாவும் ஓடிப்போய்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. நீ எப்படி?” என்று கேட்பது அருவருப்பின் உச்சம்.

மறுபுறம் மனம் காதலில் விழுந்தாலும், அவர் அந்தப் பெண்ணின் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் பெற்றவர்கள் சம்மதிக்கமாட்டார்கள் என்பதற்காக ஆசைகளைக் குழிதோண்டி புதைத்துவிட்டு ‘பெற்றோர்களால் நிச்சயக்கப்பட்ட’ திருமணங்களுக்குச் சம்மதம் தெரிவித்திருப்பார்கள். 18 வயது  நிரம்பிய எந்த ஓர் ஆணும், பெண்ணும், தனக்கு  இணையான துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறது என்று சட்டம் கூறினாலும், அதன் நடைமுறை என்னவோ சிக்கலில் சிக்கித் தவிக்கத்தான் செய்கிறது. 

காதல் திருமணம் செய்து கொள்ளும் ஆண், தன் நண்பர்கள் புடைசூழ ரெஜிஸ்டர் மேரேஜ் செய்தவுடன் 'பொண்ணத் தூக்கிட்டோம்' மாப்ள என்று ஸ்டேட்டஸ் போடமுடிகிறது சந்தோஷமாக. அதே முடிவை ஒரு பெண் எடுக்கும்போதுமட்டும் ஏன் இத்தனை ஆவேசமாக வார்த்தைகளில் அவளைத் தாக்குகிறீர்கள்...

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்