வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (19/12/2017)

கடைசி தொடர்பு:10:20 (19/12/2017)

யார் இந்த ஜிக்னேஷ் மேவானி... குஜராத்தில் வென்ற பா.ஜ-வை எதிர்த்து எப்படி வென்றார்?

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் சுதந்தர தின கொண்டாட்டங்கள் நடந்துகொண்டிருந்த நேரம். குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து உனா வரை 20,000 தலித் மக்களை ஒருங்கிணைத்து ஒரு மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. உனா நகரில் மாட்டின் தோலை வைத்திருந்ததற்காக நான்கு தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலுக்கு எதிராக, நடந்த மாபெரும் பேரணி அது.

"இனி செத்த மாட்டினை அப்புறப்படுத்தும் பணியைச் செய்ய மாட்டோம்’’ என அந்த மக்கள் உறுதிமொழி எடுத்தனர். பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களின் ஒட்டுமொத்த எழுச்சியின் அடையாளமாக, அந்தப் பேரணியைக் கருதினர். அந்த மக்களை ஒருங்கிணைத்தவர் 34 வயதான 'ஜிக்னேஷ் மேவானி' என்ற இளைஞர். 'ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ச்' என்ற அமைப்பை நடத்திவரும் அவர், நடந்து முடிந்த குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில், பனஸ்கந்தா மாவட்டத்தின் வட்காம் தனித் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றி சமகால அரசியலில் மிக முக்கியமான வெற்றி. 

ஜிக்னேஸ் மேவானி

பண அரசியலுக்கும், மதவாத அரசியலுக்கும் இடையில் 'ஜிக்னேஷ் மேவானி' அடைந்திருக்கும் இந்த வெற்றி, இத்தேசம் முக்கியமாக கவனித்துப் பார்க்க வேண்டிய ஒன்று. ஜிக்னேஷ் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தபோதே காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தாங்கள் 'வட்காம்' தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தன. பா.ஜ.க-வுடன் நேர்முகமாகப் போட்டியிட்ட ஜிக்னேஷ், கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினரின் மீது தாக்குதல் நடந்துவரும் காலகட்டத்தில், மோடியின் கோட்டையாகச் சொல்லப்படும் குஜராத்தில், சுயேச்சையாக ஜிக்னேஷ் வென்றிருப்பது மக்களின் மனதிலுள்ள துயரங்களின் வெளிப்பாடாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

ஜிக்னேஷ் மேவானி

குஜராத்தில் தலித் மக்களுக்கு ஆதரவாக பேரணி, போராட்டங்கள் நடந்தபோது அங்குசென்று, ஜிக்னேஷ் மோவானியை நேரில் சந்தித்து, ஆதரவு தெரிவித்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யாவிடம் இந்த வெற்றிகுறித்து பேசினோம். "குஜராத்தில் உனா பகுதியில் தலித் மக்கள் தாக்கப்பட்டதை எதிர்த்து நடைபெற்ற எழுச்சியில் நானும் என்னுடைய தோழர்களும் பங்கேற்றோம். அப்போதுதான் குஜராத்தின் நிஜமான வளர்ச்சியையும், மக்களின் மனநிலையையும் புரிந்துகொள்ள முடிந்தது. ‛குஜராத் மாடல்’ என வளர்ச்சியின் அடையாளமாகச் சொல்லப்படும் குஜராத்தில் இன்னும் பல கிராமங்களில் அடிப்படை வசதிகளே இல்லை. அதுமட்டுமின்றி தொடர்ந்து, தலித் மக்கள் மீதான தாக்குதல் பல்வேறு வடிவில் நடக்கிறது. அதற்காக காத்திரமான ஒரு எதிர்க்குரல் எழுப்பப்படாமலேயே இருந்த சூழலில், ஜிக்னேஷ் மேவானிஜிக்னேஷ் எடுத்த முன்னெடுப்பு மிக முக்கியமான ஒன்றாக பார்க்க வேண்டியுள்ளது.

அரசுக்கு எதிரான தன் கோரிக்கைகளை அவர் முன்வைத்த விதம், கிட்டத்தட்ட 15 நாள்களுக்கு ஒட்டுமொத்த குஜராத் மாநிலத்தையும் உனா தாக்குதலைப் பற்றிப் பேச வைத்தது. குஜராத்தில் 7% பட்டியல் சாதியினர் உள்ளனர். அவர்கள்மீது நடந்த தாக்குதலும், அதற்கு எதிராக பிற தலைவர்கள் குரல் கொடுக்காததுமே, ஜிக்னேஷை தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க அந்த மக்களைத் தூாண்டியுள்ளது. பேரணியின்போதே ஜிக்னேஷ், ‛மாட்டை நீங்களே புதைத்துக் கொள்ளுங்கள். நிலத்தை எங்களுக்கு கொடுங்கள். நாங்கள் விவசாயம் பார்த்துக்கொள்கிறோம்’ என்றார். அந்த மக்களின் எதிர்பார்ப்பும் அதுவாகத்தானிருந்தது" என்றார் ஆதவன் தீட்சண்யா.

ஜிக்னேஷ் மேற்கொண்ட 'தலித் ஆஸ்மிதா யாத்ரா ' பயணத்தில் பங்கேற்ற மக்கள், தங்களுக்கு நிச்சயம் மாற்றம் நிகழும் என நம்பியிருப்பர். இதற்குமுன்  அவர்களால் ஆட்சிக்கு அனுப்பப்பட்ட பலரும், அவர்களின் வலியைப் பேசமறுத்த சூழலில், தங்களுக்காகக் களத்தில் இறங்கிய இளைஞனை தங்கள் பிரதிநிதியாகவே பாவித்துள்ளனர். மக்கள் எப்போதும் தங்களின் குரலாக வரும், தங்களின் உரிமைகளைப் பேசும் ஜிக்னேஷ்களுக்காகத்தான் காத்திருக்கிறார்கள்.


டிரெண்டிங் @ விகடன்